இலங்கைக்கு எதிரான தீர்மானம்: எதிர்க்கட்சிகள் சட்டமன்ற அவசரக் கூட்டத்தை கூட்டவேண்டும்; ஹிண்ட்ராப்

இலங்கை அரசின் அரக்க குணத்தை  அப்பாவி தமிழர்களின் மீது ஏவிவிட்டதின் பலனாக  ஆயிரமாயிரம் தமிழின இளைஞர்களின் பிணக்குவியல்களில் தம் கணவனையும், தந்தையையும், தமையனையும் தேடிய தமிழ் பெண்களின் கண்ணீருக்குப் பதில் சொல்ல  வேண்டிய தருணம் வெகு அண்மையில் கண்ணுக்கெட்டும் தூரத்தில் தெரிகிறது என்கிறார் ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் தேசிய ஆலோசகர் திரு.நா.கணேசன்.

இலங்கைத் தமிழர் படுகொலை குறித்து இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் 47  நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமைகள் சபையில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்த தீர்மானத்தை ஆதரித்து 25-க்கும்  அதிகமான நாடுகள் இதுவரை தம்முடைய ஆதரவை தெரிவித்துள்ளன.

ஆனால் துரதிஷ்டவசமாக, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா  ஆதரிக்கப் போவதில்லை என்ற செய்திகள் இப்போது நம் காதுகளுக்கு எட்டுகின்றன! இந்த முடிவிற்கு பின்னால் இருக்கும் நியாயம்தான் நமக்கு புரியவில்லை.

கண் முன்னே நடந்த ஒரு இன படுகொலையை, அப்பட்டமான மனித உரிமை மீறல்களை, வலுவிழந்த  சிறுபான்மையினர் மீது  பெரும்பான்மை மக்களை பிரதிநிதிக்கும் அரசின் அடாவடி தனத்தை மலேசியா கண்டிக்க முன்வராததை  எவ்வகையில் நியாயம் கற்பிக்க முயல்கிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இலங்கைக்கு சாதகமாக நடந்து கொள்வதால் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இலங்கை அரசின் இனவாதத்தை அம்னோ   தலைமையிலான  பாரிசான் கூட்டணி அரசாங்கம் அமோதிப்பதாக நாம் அர்த்தம் கொள்வதை தவிர வேறு வழி இல்லை. ஒருவேளை அம்னோ அரசாங்கம் இங்குள்ள தமிழர்களின் மீது மேற்கொள்ளும் இன ரீதியான பாகுபாட்டினை நியாயபடுத்த சிங்கள அரசின் தயவை பெரும் நோக்கில் இந்த முடிவை எடுத்திருப்பார்களோ என்றும் அவர் தமது ஆதங்கத்தை வெளிபடுத்தினார்.

இவ்விவகாரத்தில் மலேசியத் தமிழர்களுக்கு  துணையாக, அதாவது பாரிசன் அரசுக்கு நெருக்குதல் அளிக்க எதிர்கட்சிகள் முன்வரேவேண்டும். எதிர்கட்சித் தலைவர்கள் நமக்கு ஆதரவாக குரல் கொடுப்பதோடு  மாத்திரம் நின்று விடாமல்  தங்கள் கை வசம் இருக்கும் நான்கு மாநில சட்டமன்றங்களையும் அவசரமாக கூட்ட வேண்டும். அந்த அவசர கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை அங்கீகரித்து ஏற்று கொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதோடு ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசிய அரசு ஆதரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அந்த சட்ட மன்ற அவசர கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் ஆலோசனை அளித்தார்.

இந்தியா, இலங்கைக்கு அடுத்து   உலகில் அதிகமான தமிழர்கள் வாழும் நாடு மலேசியா என்ற நிலையில் இந்த தீர்மானம் குறித்து இந்நாட்டு அரசு எடுக்கும் முடிவை மலேசிய தமிழர்கள் வெகு கூர்மையாக கவனித்து கொண்டிருகிறார்கள் என்று தமது ஊடக அறிக்கையில் திரு. கணேசன் தெரிவித்தார்.

இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை மலேசிய அரசு  ஆதரிக்கும் வகையில் இந்நாட்டு தமிழர்கள் ஒன்று திரண்டு நெருக்குதல் அளிக்க முற்படவேண்டும். அந்த நோக்கதிற்காக நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு ஹிண்ட்ராப் தமது ஆதரவை நல்கும் என்றும் அவர் கூறினார்.

இது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்றோ, வெறும் தமிழர்களின் பிரச்சனை என்றோ சாக்கு போக்கு சொல்லாமல் செயலில் இறங்கி இலங்கை தமிழர்களுக்கு நம் ஆதரவை தெரிவிக்கும் நேரம்  இது.

ஒரு குறிப்பிட்ட இனத்தின் பிரச்சனையாக, குறுகிய மனப்போக்கோடு  இந்த விவகாரத்தை  மலேசிய அரசாங்கம் அணுகாமல், மனிதாபிமானத்திற்கு எதிரான, அப்பாவி சிறுபான்மையினருக்கு எதிரான, சத்தியம், நியாயம் தர்மத்திற்கு எதிரான ஒரு காட்டுமிராண்டி தனமான அரசின் போக்கை கண்டிக்கும் பொறுப்புமிக்க ஒரு நாட்டின் முடிவாக அது அமையவேண்டும் என்பது ஹிண்ட்ராபின் எதிர்பார்ப்பாகும் என்றார் கணேசன்.

TAGS: