ஆகஸ்ட் 31-இல் மெர்டேகா தினம் இவ்வளவு அமைதியாக, அண்மைய ஆண்டுகளில், கொண்டாடப்பட்டதில்லை. இதற்குக் காரணம் கடந்த சில மாதங்களில் மட்டுமல்லாமல் கடந்த சில நாள்களிலும்கூட ஒற்றுமைக்கு வேட்டுவைக்கும் நிகழ்வுகள் இடைவிடாமல் நடந்து கொண்டிருப்பதுதான்.
மலேசியர்கள் நேற்று மலேசிய கொடிகளை ஏற்றி வைத்திருந்தார்கள். ஆனாலும் எல்லாருடைய மனத்திலும் ஒரு கேள்வி புகைந்து கொண்டிருந்தது – எங்கே போகிறது மலேசியா?
நஜிப் ரசாக், பிரதமரான பின்னர் கொண்டாடப்படும் மூன்றாவது தேசிய நாள் கொண்டாட்டம், அத்துடன் ஹரி ராயாவும் சேர்ந்துகொண்டது, அதனால் பெருமகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய நாள் இது. ஆனால், அப்படி நடக்கவில்லை.
ஒற்றுமையையும் சகிப்புத்தன்மையையும் ஊக்குவிப்பதற்காக சொல்லப்பட்ட வாழ்த்துகள் எல்லாம் மக்களை ஊக்கப்படுத்தவுலில்லை, உற்சாகப்படுத்தவும் இல்லை. எல்லாம் வெற்றுச் சொற்களாகத்தான் இருந்தன. சொல்லும் செயலும் முரண்படுவதைக் காட்டத்தான் அவை உதவின.
மலேசியர்கள் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த விடுக்கப்பட்ட அறைகூவல்கள் எல்லாம் மலேசிய சமுதாயம் எந்த அளவுக்குப் பிளவுபட்டுக் கிடக்கிறது என்பதைத்தான் எடுத்துக்காட்டின.
54வது தேசிய நாளை நோக்கி நாடு சென்றுகொண்டிருந்த வேளையில் அதை இன ரீதியாகவும் சமய ரீதியாகவும் பிரித்து வைக்கும் முயற்சிகள் பொறுப்பற்ற முறையிலும் கட்டுப்பாடற்ற முறையிலும் நடந்து கொண்டிருந்தன. அரசாங்க தொலைக்காட்சியான டிவி 1, “மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் மதமாற்ற நடவடிக்கைகளில்” டிஏபி, பிஎஸ்எம் கட்சியினருக்கு பங்குண்டு என்று அருவருக்கத்தக்க, பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தது.
அதற்கு சில நாள்கள் முன்னதாக டிவி3, இல்லாத ஒரு ‘ஒரு சூராவ் அல்-முஷிரிகின்’ செய்த புகாரின் அடிப்படையில் கோலாலம்பூரில் ஒரு டியூசன் மையத்தில் முஸ்லிம்கள் மத மாற்றம் செய்யப்படுவதாக அண்டப் புளுகை அள்ளிவிட்டது. உணர்ச்சி வசப்பட வைக்கும் இப்படிப்பட்ட கூற்றுகள் தங்குதடையின்றியும் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சமின்றியும் வெளிவருவதைப் பார்க்கும்போது பிரதமரும் அவரின் நிர்வாகமும் சட்டத்தையும் மிதவாதத்தையும் ஒன்றுபட்ட மலேசியாவையும் பாதுகாப்பதில் உண்மையிலேயே அக்கறை கொண்டவர்களா என்ற கேள்வி எழுகிறது.
துணைப் பிரதமர் முகைதின் யாசின் “நான் முதலில் மலாய்க்காரன், பிறகுதான் மலேசியன்” என்று கூறியபோது அதைக் கண்டிக்க முடியாத பிரதமரால் 1மலேசியா சுலோகத்தை நாட்டை ஒன்றிணைக்கும் தாரக மந்திரமாக எப்படி உருவாக்க முடியும்?
மசீச தலைவர் சுவா சொய் லெக், மலேசியர்கள் அனைவரும் 1மலேசியா உணர்வுடன் அமைதிக்குக் இணக்கத்துக்கும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.ஆனால், 1மலேசியா உணர்வையும் இனங்களுக்கிடையிலும் சமயங்களுக்கிடையிலுமான அமைதியையும் இணக்கத்தைக் கெடுக்க திட்டமிட்டுச் செய்யப்படும் அத்தனை செயல்களுக்கும் மூலம் பிஎன்/அம்னோதான் என்பதைக் கண்டுகொள்ள ஏனோ அவர் மறுக்கிறார்.
எல்லாமே இருண்டுபோகவில்லை
பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுவதே மைய நீரோட்ட ஊடகங்களின் வழக்கமாகி விட்டது. டிஏபி, கிறிஸ்துவ மலேசியாவை உருவாக்க எண்ணுகிறது, பாஸ் துணைத் தலைவர் கம்முனிஸ்டுகளைப் பெருமைப்படுத்தி ஒன் ஜப்பாரையும் சுதந்திரத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மானையும் துரோகிகள் என்கிறார் என்றெல்லாம் பொய்களை அள்ளி வீசுகிறார்கள்.
இது 1மலேசியாவை உருவாக்கும் வழி அல்லவே. பல இனங்கள் பல சமயங்கள் வாழும் மலேசியாவின் ஒற்றுமையைச் சிதறடிக்கும் முயற்சியல்லவா இது.
நஜிப், 1மலேசியாவில் உண்மையில் அக்கறை கொண்டு, இன, சமய, கட்சி வேறுபாடின்றி எல்லா மலேசியர்களுக்குமான பிரதமர் என்று தம்மைக் காண்பித்துக்கொள்ள நினைத்தால் 1மலேசியா, என்இஎம், ஜிடிபி, இடிபி, பிடிபி என வெற்றுச் சுலோகங்களை முழக்கிக் கொண்டிராமல் சொல்வதைச் செய்துகாட்ட வேண்டும்.
என்றாலும், எல்லாமே வரண்டு போகவில்லை, இருண்டும் போகவுமில்லை. ஜூலை 9-இல் வெற்றிகரமாக நடந்த பெர்சே 2.0 பேரணி, நஜிப்பும் அதிகாரத்தில் உள்ள மற்றவர்களும் முறையாக நடந்துகொள்ளவில்லை என்றால், சாதாரண மலேசியர்கள்-மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், கடாசான்கள், இபான்கள் முதலானோர் அவர்கள் முஸ்லிம்களோ, பொளத்த சமயத்தவரோ, கிறிஸ்துவர்களோ, இந்துக்களோ, தாவோ சித்தாந்தங்களைப் பின்பற்றுவோரோ, கன்பூசியசைப் பின்பற்றுவோரோ, சீக்கியர்களோ அனைவரும் மலேசியாவைக் காக்க ஒன்றுபட ஆயத்தமாகி விட்டார்கள் என்பதைக் காண்பித்தது.
இந்தப் பெரும்பான்மை மலேசியர் ஒன்றுதிரண்டு தாங்கள், இனத்தையும் சமயத்தையும் பகடைக்காய்களாக பயன்படுத்தும் பொறுப்பற்ற அரசியலுக்கு அடிபணியாத உண்மையான நாட்டுப்பற்றாளர்கள் என்பதையும் ஒன்றுபட்ட, இணக்கமிக்க, நீதியான, முற்போக்கான, போட்டிகொடுக்கும் ஆற்றல்மிக்க மலேசியாவை உருவாக்கிடும் நோக்கம் கொண்ட தேசியவாதிகள் என்பதையும் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
———————————————————————–
LIM KIT SIANG- ஈப்போ தீமோர் தொகுதி டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர்.