என்எப்சி விசாரணை அறிக்கையைப் போலீசிடம் திருப்பிக் கொடுத்தார் ஏஜி

நேசனல் ஃபீட்லோட் விவகாரம் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ள பொதுமக்கள் அதற்கு மேலும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் போலத் தெரிகிறது. புலன்விசாரணையை முடித்து போலீஸ்  ஒப்படைத்த அவணங்களை மேலும் ஆய்வுகள் தேவை என்று கூறி சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) திருப்பி அனுப்பிவிட்டார்.

அவ்வழக்கில் மேலும் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று ஏஜி விரும்புவதாக போலீஸ்படைத் துணைத் தலைவர் காலிட் அபு பக்கார் போலீஸ் ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார்.

“ஏஜி அலுவலகம் விரும்புவதுபோல் போலீஸ் மேலும் சாட்சியங்களையும் தேவையான தகவல்களையும் திரட்டிக்கொடுக்கும்”, என்றாரவர்.

இதற்குமுன்பு புக்கிட் அமான் வணிகக் குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் சைட் இஸ்மாயில் சிட் அசிசான்,என்எப்சி தலைவர் முகம்மட் சாலே(அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலில் கணவர்)மீது நம்பிக்கை மோசம் செய்ததாகக் குற்றம் சாட்ட ஏஜியிடம் பரிந்துரைத்திருப்பதாகக் கூறினார்.

அதற்கு உடனடி எதிர்வினையாற்றிய என்எப்சி, விசாரணை இன்னும் முடியவில்லை என்றும் சைட் இஸ்மாயில் “அவசரப்பட்டு” அவ்வாறு கூறியிருக்கிறார் என்றும் தெரிவித்தது.

என்எப்சி-இன் அறிக்கையை எதிரொலிப்பதுபோல் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும், என்எப்சி-யுடன் தொடர்புகொண்டவர்கள்மீது குற்றம் சாட்டுவதாக இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் ஏஜி-க்கு மட்டுமே உண்டு என்றார்.

TAGS: