நஜிப்: லினாஸ் கழிவுப் பொருட்கள் கெபெங்கிலிருந்து வெளியே கொண்டு செல்லப்படும்

குவாந்தான் கெபெங்கில் அமையும் லினாஸ் அரிய மண் தொழில் கூடத்தின் கழிவுப் பொருட்கள் எந்த ஒரு குடியேற்றப் பகுதியிலிருந்தும் வெகு தொலைவில் உள்ள இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லப்படும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளார்.

உள்ளூர் சமூகத்தின் கவலையை பரிசீலித்த பின்னர் அந்த முடிவு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

“அந்தக் கழிவுப் பொருட்கள் பாதுகாப்பானது என்பதற்கு அனைத்துலக அமைப்புக்கள் வெளியிட்ட பிரகடனங்கள் உட்பட நிபுணர்களிடம் ஆதாரம் இருந்த போதிலும் அது குறித்து இன்னும் ஐயம் கொண்டுள்ள மக்களும் இருக்கின்றனர்.”

“ஆகவே அந்தக் கழிவுப் பொருட்களை இன்னொரு இடத்துக்கு மாற்றுவதற்கு நாங்கள் முடிவு செய்துள்ளோம்,” என நஜிப் நேற்று கோத்தா பாருவில் மக்களைச் சந்திக்கும் கூட்டம் ஒன்றுக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

அந்தக் கழிவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படும் இன்னொரு இடத்தை அரசாங்கம் இன்னும் தேடி  வருவதாகவும் பின்னர் அது குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

எதிர்க்கட்சிகள் தொடுத்த நெருக்குதலினால் அரசாங்கம் அந்த முடிவைச் செய்ததாகக் கூறப்படுவதை நஜிப் நிராகரித்தார்.

“தாங்கள் பாதுகாப்பாக இருக்கும் உணர்வை மக்கள் பெறுவதைக் காண நாங்கள் விரும்புகிறோம்,” என்றும் அவர் சொன்னார்.

லினாஸ் அரிய மண் தொழில் கூடம் அமைவதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

-பெர்னாமா

TAGS: