கோத்த ராஜா தொகுதியிலிருந்து HRP-யின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்?

அடுத்த பொதுத்தேர்தலில் கோத்த ராஜா நாடாளுமன்ற தொகுதியை பக்கத்தான் ரக்யாட்டிடமிருந்து கைப்பற்றுவதில் மனித உரிமைகள் கட்சி (HRP) “மிகுந்த நம்பிக்கை” கொண்டுள்ளது.

கோலாலம்பூரில் நேற்றிரவு நடந்த ஒரு தேர்தல் நிதி திரட்டல் நிகழ்ச்சியில் எச்ஆர்பியின் தற்போதைய தலைமைச் செயலாளர் பி. உதயகுமார் கோத்த ராஜாவை அக்கட்சியின் முன்னிலை தொகுதி என்று குறிப்பிட்டார்.

விபரங்கள் பெறுவதற்காக தொடர்பு கொண்டபோது, கோத்த ராஜா தொகுதியில் 71,887 வாக்காளர்கள் இருப்பதாகவும், அதில் 28.3 விழுக்காட்டினர் இந்தியர்கள் என்றும், அதில் 90 விழுக்காடு இந்தியர்கள் எச்ஆர்பிக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் உதயகுமார் கூறினார்.

மேலும், 33 விழுக்காடு சீன வாக்காளர்களின் வாக்குகளைப் பெறும் இலக்கை எச்ஆர்பி கொண்டுள்ளது என்று கூறிய உதயகுமார், அது கட்சி வெற்றியடைவதற்கு போதுமானது என்று அவர் நம்புகிறார்.

“பக்கத்தான் வேட்பாளர் 70 விழுக்காடு மலாய் வாக்குகளைப் பெறுவார் என்று எடுத்துக்கொண்டால், இண்ட்ராப்பின் வேட்பாளருக்கு சீனர்களின் கால்வாசி வாக்குகளும் இந்தியர்களின் 90 விழுக்காடு வாக்குகளும் பக்கத்தான் வேட்பாளரை ஒரு சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றிகொள்ள உதவும்”, என்று உதயகுமார் இன்று மலேசியாகினியிடம் கூறினார்.

பல்லின மக்களைக்கொண்ட நகர்புற தொகுதியான கோத்த ராஜாவில் 47.8 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள், 23.2 விழுக்காட்டினர் சீனர்கள். தற்போது அத்தொகுதியை பாஸ் கட்சியின் டாக்டர் சித்தி மாரியா மாமுட் பிரதிநிதிக்கிறார்.

“நாடாளுமன்றத்தில் இண்ட்ராப்”

எச்ஆர்பி 90 விழுக்காடு இந்திய வாக்காளர்களை அதன் பக்கம் கவர முடியும் ஏனென்றால் இந்தியர்களை பாதிக்கும் பல முக்கியமான பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.

கட்சி அதன் தொடக்க வேலையைத் தொடங்கி விட்டது என்று அவர் கூறினார்.

கட்சி ஒரு “வலுவான” வேட்பாளரை தயார் செய்து வருவதாக கூறிய அவர், அவ்வேட்பாளரின் பெயரை வெளியிட மறுத்து விட்டார். அவர் ஓர் முன்னாள் இசா கைதியாக இருக்கலாம் என்று மட்டும் அவர் கோடிகாட்டினார்.

“நாங்கள் வெற்றி பெற்றால், முதல் பிஎன் – எதிர்ப்பு சுயேட்சை வேட்பாளர் என்ற முறையில் நாங்கள் புதிய வரலாறு படைப்போம்”, என்றாரவர்.

“இண்ட்ராப்பை நாடாளுமன்றத்திற்கு அனுப்புங்கள்” என்ற தலைப்புடன் நேற்றிரவு கோலாலம்பூரில் சுமார் 500 பேர் கலந்துகொண்ட தேர்தல் நிதி திரட்டல் விருந்தில் எச்ஆர்பி தேர்தலில் பங்கேற்பது பற்றிய திட்டத்தை உதயகுமார் வெளியிட்டார்.

TAGS: