லினாஸ் ஆலையில் உருவாகும் கழிவுப்பொருள்கள் மக்கள் அதிகம் வசிக்காத இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டுக் கொட்டப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருப்பது ஆலையிலிருந்து வெளிவரும் கழிவு அபாயமிக்கது என்பதை அரசாங்கம் அறிந்துள்ளதைக் காட்டுவதாக பாஸ் கூறியுள்ளது.
கழிவுப்பொருள் கொட்டுமிடம் மாற்றப்படுவதை வைத்து கழிவுப்பொருள் அபாயமிக்கது என்று முடிவு செய்துவிட வேண்டாம் என்று பிரதமர் கூறியிருந்தாலும் அதுதான் உண்மை என்கிறார் பாஸ் சூழியியல் பிரிவுத் தலைவர் சுல்கிப்ளி முகம்மட் ஒமார்.
“கழிவில் அபாயமில்லை என்றால் அதைக் கொட்டுமிடத்தை மாற்ற வேண்டியதில்லை. அவரது கூற்று லினாஸ் ஆலையின் கழிவுப்பொருள் நச்சுத்தன்மை வாய்ந்தது என்பதை அரசாங்கம் உணர்ந்திருப்பதைத்தான் காண்பிக்கிறது”, என்று கோலாலம்பூரில் பாஸ் தலைமைகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
இப்படிப்பட்ட கழிவுகளைக் கொட்டுவதற்கு மக்கள் வசிக்காத ஆஸ்திரேலியாவின் பரந்துபட்ட பாலைவனம்தான் மிகவும் பொருத்தமான இடமாகும் என்றாரவர்.
“ஆஸ்திரேலிய அதிகாரிகள் நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுப்பொருளை ஏற்பதற்கில்லை என்று கூறியிருப்பது அது அபாயமிக்கதுதான் என்பதை உறுதிப்படுத்துகிறது”, என்று சுல்கிப்ளி கூறினார்.
சுகாதார அமைச்சர் லியோ தியோங் லாய், கழிவுப்பொருள்களை ஆஸ்திரேலியாவுக்கே திருப்பி அனுப்பலாம் என்று மொழிந்திருப்பதும் பல கேள்விகளை எழுப்புகிறது என்றாரவர்.
“கழிவுப்பொருள்கள் ஒழிப்புப் பற்றி ஏன் அவர் முன்கூட்டியே கேள்வி எழுப்பவில்லை?ஆலை செயல்பட தற்காலிக உரிமம் வழங்கிய பின்னர் அது பற்றிக் கேள்வி எழுப்புவது ஏன்?”, என்றவர் வினவினார்.
பாஸும் சூழியல் என்ஜிஓ-களும் அரசின் எதிர்வினைக்காகக் காத்திருப்பதாக சுல்கிப்ளி கூறினார்.அது சாதகமாக இல்லையென்றால் “ஹிம்புனான் ஹிஜாவ் 3.0 ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.
அண்மையில் குவாந்தானில் லினாஸ் ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 15,000பேர் ஹிம்புனான் ஹிஜாவ் 2.0-பேரணியை நடத்திய பிரதமர், கழிவுப்பொருள் லினாஸ் ஆலை அமைந்துள்ள கெபெங்கிலிருந்து வேறு இடத்துக்குக் கொண்டுசெல்லப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதனிடையே,குடியிருப்பாளர்கள் சிலர், அணுசக்தி உரிம வாரியம் ஆலைக்கு வழங்கிய தற்காலிக உரிமத்தை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் மனுவை மீண்டும் தாக்கல் செய்திருப்பதாக சுல்கிப்ளி கூறினார்.
ஏற்கனவே, செய்யப்பட்ட மனுவுக்கு அரசாங்கம் எதிர்மனு தாக்கல் செய்தது.புது மனு மார்ச் 20-இல் விசாரணைக்கு வரும்.