11 ஆண்டுகளுக்கு முன்னர், கம்போங் மேடான் இனக்கலவரத்தில் படுகாயமடைந்த எழுவர், காவல்துறை மற்றும் அரசாங்கத்தின் மீது அலட்சியப் போக்கு மற்றும் சட்டப்பூர்வ கடமைகளை மீறியதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதிக்கக் கோரி செய்திருந்த மேல்முறையீட்டை கூட்டரசுப் பிரதேச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
நாட்டின் தலைமை நீதிபதி தான் ஸ்ரீ அரிஃபின் சாகாரியா உட்பட இவ்வழக்கை செவிமடுத்த ஐந்து நீதிபதிகளான சபா, சரவா மாநில தலைமை நீதிபதி தான் ஸ்ரீ ரிச்சர்ட் மலாஞ்சும், கூட்டரசு பிரதேச நீதிமன்ற நீதிபதிகள் டத்தோ ஹஷிம் யூசோஃப், டத்தோ அஹ்மாட் மாரோப் மற்றும் டத்தோ ஹசான் லா ஒருமனதாக, ஆர்.சுரேஷ், அ.அன்பழகன் அய்னான், அ.வேலப்பன், பி.ஜனகன், பி.தமிழ் செல்பம், வி.சுப்ரமணியம் மற்றும் வி.முனியாண்டி ஆகிய எழுவரின் முறையீட்டினை எவ்வித செலவுத் தொகையுமின்றி நிராகரித்தனர்.
காவல்துறைச் சட்டம் 1967-ன் கீழ் காவல்துறையினர் தங்கள் கடைமையை ஆற்றுவதிலிருந்து தவறினர் என்பதை நிரூபிக்கத் தவறியதால் இந்த எழுவர் தொடுத்திருந்த வழக்கை கடந்த 12 மே 2009-ல் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதைத் தொடர்ந்து முறையீட்டு நீதிமன்றத்திலிலுருந்தும் கடந்த நவம்பர் 23-ஆம் தேதி அதே தீர்ப்பு கிடைத்த வேளையில், இவ்வழக்கு கூட்டரசுப் பிரதேச நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது.
சம்பந்தப்பட்ட வழக்கில் பாதிப்படைந்த எழுவரும், சம்பவம் நிகழ்ந்த இடத்தின் குடியிருப்பாளர்கள் ஆவர். பெட்டாலிங் ஜெயா முன்னாள் காவல்துறைத் தலைவர் மூத்த துணை ஆணையர் ஷெய்க் முஸ்தாஃபா ஷெய்க் அஹ்மாட், சிலாங்கூர் மாநில முன்னாள் காவல்துறைத் தலைவர் நிக் இஸ்மாயில் நிக் யூசோஃப், மலேசிய காவல் படைத் தலைவர் மற்றும் மலேசிய அரசாங்கத்தின் மீது இவர்கள் வழக்கு தொடுத்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கின் வாதிகள் 20 முதல் 30 பேர் கொண்ட கும்பலால் வெட்டுக் கத்தி, கத்தி, ஹாக்கி மட்டை, மரக்கட்டை மற்றும் இரும்புக் கட்டையால் தாக்கப்பட்டால் படுகாயங்களுக்குள்ளாகியதோடு மட்டுமல்லாமல் பெரிய அளவில் மருத்துவச் செலவை ஏற்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இவர்கள் இந்நிலைக்கு ஆளாகும் வரை நிலைமையை சீர்செய்யாமல் காவல்துறையினர் தங்களின் கடமையில் அலட்சியப் போக்கினை மேற்கொண்டனர் என்று அவர்கள் தங்களின் வாதத்தில் குறிப்பிட்டிருந்தனர். இவர்களுக்கு ஏற்பட்ட நிலைக்கெதிராக பொது நஷ்ட ஈடு, சிறப்பு நஷ்ட ஈடு, மோசமான நஷ்ட ஈடு மற்றும் படிப்பினை நஷ்ட ஈட்டைக் கோரி அவர்கள் வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்த இனத் தாக்குதலில் ஐந்து இந்தியர்கள் கொலையுண்டதோடு நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் படுமோசமான உடற்புண் காயங்களுக்கு இலக்காகினர்.
ஆனால் பாதிப்புற்றவர்களுக்கு நீதி கிடைக்காமல் போனது மட்டுமின்றி அவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே என்று கூட்டரசுப் பிரதேச நீதிமன்ற தீர்ப்பை ஹிண்ட்ராப் சாடியது.
கம்போங் மேடான் ஏழை இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையை மூடி மறைக்கும் நோக்கத்துடன் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பி.உதயகுமார் சுட்டிக் காட்டினார்.
பாதிப்புற்ற எழுவரின் சார்பில் வழக்கறிஞர் எம்.மனோகரன் முன்னிலையான வேளையில், காவல்துறை மற்றும் மலேசிய அரசாங்கத்தின் சார்பில் அரசு தரப்பு வழக்கறிஞர் சித்தி படாரியா முகமட் யூசோஃப் முன்னிலையானார்.