மனித உரிமைக் கட்சி இடைக்காலத் தலைவர், பி.உதயகுமார், தமது ரிம100மில்லியன் அவதூறு வழக்கைத் தள்ளுபடி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக வழக்காட அனுமதிகேட்டு செய்துகொண்ட விண்ணப்பத்தைக் கூட்டரசு நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.
ஐந்து நீதிபதிகள் குழுவுக்குத் தலைமையேற்று மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அரிப்பின் ஜக்கரியா, வழக்குச் செலவை உதயகுமார்மீது திணிக்க வேண்டாம் என்று அவரின் வழக்குரைஞர் எம்.மனோகரன் வேண்டிக்கொண்டதைப் புறந்தள்ளி ரிம10,000 வழக்குச் செலவை உதயகுமாரே ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
ஸ்ரீலங்காவின் தமிழீழ விடுதலைப் புலிகளுடன்(எல்டிடிஇ) அவருக்குத் தொடர்புண்டு என்று போலீஸ் படை முன்னாள் தலைவர் மூசா ஹசானும் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்லும் பழி சொன்னார்கள் என்று உதயகுமார்(வலம்)அவ்விருவர்மீதும் வழக்குத் தொடுத்திருந்தார்.
ஷா ஆலம் உயர் நீதிமன்றம் முழு விசாரணை செய்ய உத்தரவிட்டது.ஆனால், மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 2-1 என்ற தீர்ப்பின்வழி அவ்வழக்கைத் தள்ளுபடி செய்தது.
அங்கு, மூசாவும், அப்துல் கனியும் இண்ட்ராபை நோக்கித்தான் அப்படிச் சொன்னார்களே தவிர அதன் சட்ட ஆலோசகராக இருந்த உதயகுமாரை நோக்கி அல்ல என்று கூறப்பட்டது.
மேலும், இண்ட்ராப் ஒரு சட்டவிரோத அமைப்பு என்று 2008 அக்டோபர் 15-இல் அறிவிக்கப்பட்டு விட்டதால், அதன் சார்பாக சட்ட நடவடிக்கை எடுக்கும் உரிமை உதயகுமாருக்கு கிடையாது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
இழப்பீடும் கிடைக்காமல் போனது
உதயகுமார், 2003-இல், ‘தவறாகக் கைதுசெய்யப்பட்டதற்காக’ ரிம145,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தள்ளுபடி செய்ததை எதிர்க்க அனுமதிகேட்டுச் செய்துகொண்ட விண்ணப்பத்தையும் உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.
2003 ஜனவரி 16-இல், சிப்பாங் மெஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் அவர் கைது செய்யப்பட்டதற்கு இழப்பீடாக உயர்நீதிமன்றம் அந்தத் தொகையை வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது.
சிப்பாங் போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது உடைகளைக் களையும்படி கட்டாயப்படுத்தப்பட்டதுடன் மோசமான முறையில் நடத்தப்பட்டதற்காகவும் அரசாங்கம், போலீஸ்படை, அந்நிலையத்தின் போலீஸ் அதிகாரிகள் 11பேர் ஆகியோருக்கு எதிராக உதயகுமார் வழக்கு தொடுத்தார்.
போலீஸ் காவலில் இருந்தபோது இறந்துபோன எஸ்.தர்மராஜாவின் மரண விசாரணையின் முடிவில் உதயகுமாரைக் கைதுசெய்ய உத்தரவிடப்பட்டது.
மரண விசாரணையின்போது தலைமை போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மனுச் செய்துகொள்ளப்போவதாக மனோகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.