வேதமூர்த்தியின் “மனித உரிமை காவலன்” விருது பெரியவர் சின்னையாவுக்கு சமர்ப்பணம்

இந்தியாவை தலைமையகமாகக் கொண்டு செயல் படும் “மனித உரிமை பாதுகாப்பு (HRDI)  அமைப்பு அதன் 2  ஆவது அனைத்துலக  பேராளர்கள் மாநாட்டை கடந்த  பிப்ரவரி 24  மற்றும் 25  ஆகிய தேதிகளில் புது டில்லியில் ஏற்பாடு செய்திருந்ததது.

அந்த மாநாட்டில் புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதை கண்காணிக்கவும், கண்டிக்கவும், தகுந்த நடவடிக்கைகள் எடுக்கும் வகையில்  இந்திய அரசையும்,  ஐக்கிய நாட்டு மன்றத்தையும் துணிச்சலாக குரல் கொடுக்கும் நோக்கில் நெருக்குதல் அளிக்க  இந்தியாவை மையமாக கொண்டு செயல்படும்  வலுவான ஓர் அமைப்பு  தேவை என முழுமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அந்த பொறுப்பை இனி வரும் காலங்களில் HRDI அமைப்பே ஏற்றுகொள்ளும் எனவும், இது நாள் வரையில் HUMAN  RIGHTS  DEFENCE  INDIA  என்றழைக்கப்பட்ட இவ்வமைப்பு இனிமேல்  HUMAN RIGHTS DEFENCE INTERNATIONAL  என்ற பெயருடன் செயல்படவிருப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மலேசிய உட்பட பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் என பல்வேறு உலகநாடுகளில் இருந்து பேராளர்கள் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு துவக்கம் இவ்வமைப்பின் அனைத்துலக பேராளர்கள் மாநாடு வெறும் ஒப்புக்கு நடத்தப்படும் பிரவாசி மாநாட்டிற்கு இரு தினங்களுக்கு முன்னர் அதாவது ஜனவரி 5 மற்றும் 6  ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும், புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்களின் பிரச்சனைகள் குறித்து ஆழமாகவும் ஆக்கபூர்வமாகவும் விவாதித்து தக்க நடவடிக்கைகளை முன்மொழிந்து செயல் வடிவம் கொள்ள அனைத்தையும் செய்யும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.  

ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்திக்கு விருது

இந்நிகழ்வில் மேலும் ஒரு சிறப்பு அம்சமாக மலேசிய இந்தியர்கள் அனுபவித்து வரும் அடிப்படை மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தைரியமாகவும் ஆக்காகரமாகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஹிண்ட்ராப் மக்கள் சக்தி தலைவர் பொ.வேதமூர்த்திக்கு “மனித உரிமை காவலன்” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது .

சின்னையவுக்கு சமர்ப்பணம்

கடந்த 4 ஆம்  தேதி சிங்கப்பூரில் ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் ஒருங்கினைப்பாளர்களுடனும், முக்கிய பொருப்பாளர்களுடனும்,   ஆதரவாளர்களுடனும்  வேதமூர்த்தி சந்திப்பு கூட்டம் ஒன்றை நடத்தினார்.

அச்சந்திப்பின் போது தமக்கு வழங்கப்பட்ட இந்தக் கெளரவம் வேதமூர்த்தி என்ற தனி நபருக்கு வழங்கப்பட்டதல்ல எனவும், வஞ்சிக்கப்பட்ட  அனைத்து  மலேசிய இந்தியர்களின் ஒட்டுமொத்த நியாயமான உரிமை குரலுக்கு  கிடைத்த அங்கீகாரமாகவே இதனைக் கருதுவதாகவும் அவர் கூறினார்.

அந்த ரீதியில் அமைதியான உரிமை போராட்டங்களின் போது ஒருதலைபட்சமாக காவலர்களால் கைது செய்யப்பட்டு, அநியாயமான முறையில் வழக்கு தொடரப்பட்ட போதெல்லாம் அழைக்காமலே தம்முடைய தள்ளாடும் வயதிலும், திடமான, தீர்க்கமான உள்ளத்திரத்துடன் தம்முடைய சொத்து பத்திரங்களை பிணையாக செலுத்தி போராட்டவாதிகளை  சிறைக்கு செல்லாமல் தடுத்த பெரியவர் மதிப்பிற்குரிய ஐயா சின்னையாவுக்கு அந்த விருதை சமர்பிப்பதாக வேதமூர்த்தி பலத்த கைதட்டல்களுக்கிடையே அறிவித்த போது அனைவரது கண்களும் குளமாயின.

எவ்விதமான எதிர்பார்ப்புமில்லாமல், விளம்பரத்திற்காக அல்லாமல், உளப்பூர்வமாக மலேசிய இந்தியர்களின் உரிமைக்குரலின் நியாயத்திற்காக   ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் போராட்டங்களின் போதெல்லாம் தன்னலம் கருதாது முன்னின்று ஆதரவளிக்கும் பெரியவர் சின்னையா, மலேசிய இந்தியர்களின் சார்பில் இந்த விருதை தமது இல்லத்தில் வைத்து ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் சார்பில் பாதுகாத்து தமது போராட்டத்தை வெளிபடுத்த வேண்டும் என்று வேதமூர்த்தி கேட்டுக்கொண்டார்.

மிகவும் நெகிழ்ச்சியுடன்  கேடயத்தை பெற்றுக்கொண்ட பெரியவர் சின்னையா, வேதமூர்த்தியின் வேண்டுகோளின்படியே செய்வதாகவும், ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் போராட்டம் வெற்றி கிட்டும் வரையில் தொடரட்டும் என்றும் அவர் வாழ்த்தினார் என்று தெரிவிக்கிறார் ஹிண்ட்ராப் மக்கள் சக்தி தேசிய ஒருங்கிணைப்பாளர் வி.சம்புலிங்கம்.

TAGS: