தமிழ்நாட்டில் கருத்தரங்கத்திலிருந்து விரட்டப்பட்ட சிங்களப் பேராசிரியை!

சிறீலங்காவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஏதும் நடக்கவில்லை, அவ்வாறு குற்றம்சாட்டுவது சரியல்ல என்று தமிழ்நாட்டில் உரையாற்றிய கொழும்புப் பல்கலைக்கழக சிங்களப் பேராசிரியை ஒருவர் கருத்தரங்கு மண்டபத்தில் இருந்து விரப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை சார்பில் அனைத்துலக பெண்கள் நாளை முன்னிட்டு “போதை பழக்கமும், குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களும்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கில், கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியை ஜீவா நிரியெல்ல, பிரித்தானியாவின் லங்காஷயர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை ஹெலன்காட் உள்ளிட்ட பெண் பேராசிரியைகள் பங்கேற்றனர்.

கொழும்பு பல்கலைக்கழகப் பேராசிரியை ஜீவா நிரியெல்ல, சிறீலங்காவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஏதும் நடக்கவில்லை என்றும், அவ்வாறு நடப்பதாக சித்திரிப்பது சரியல்ல என்றும் பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் சேவியர் தலைமையில் கருத்தரங்கு அரங்கிற்குள் புகுந்து, பதாகைகளை ஏந்தியபடி “சிறீலங்கா சிங்கள பேராசிரியையே வெளியேறு” என்று முழக்கங்களை எழுப்பி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, எதிர்ப்பாளர்களுடன் பேச்சு நடத்தப்பட்டது.

இதையடுத்து பேராசிரியை ஜீவா நிரியெல்ல உடனடியாக காவல்துறை பாதுகாப்புடன் கருத்தரங்கு மண்டபத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டார்.