மாட் ஜைன் ஐஜிபி ஆகாததற்கு இதுதான் காரணம்

உங்கள் கருத்து: “போலீஸ் அதிகாரிகளின் உரிமைகள் பற்றி நடப்பு ஐஜிபி-யைவிட முன்னாள் குற்றப்புலன் விசாரணைத் துறை தலைவருக்கு நிறைய தெரிந்திருக்கிறது.இதை என்னவென்று சொல்ல?

அல்டான்துயா கொலையில் புதிய புலனாய்வு தேவை:முன்னாள் போலீஸ் அதிகாரி

பி.தேவ் ஆனந்த் பிள்ளை: கெட்டிக்காரர்களாகவும் திறமைசாலிகளாகவும் உள்ள அதிகாரிகளுக்குப்  பணி உயர்வு கிடைக்காமல் போவதற்கு இதுதான் காரணம்.

போலீசில் இரு தரப்பினர் உண்டு.ஒரு தரப்பினர் சட்டம் பற்றி  நன்கு அறிந்தது, போலீஸ் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று விரும்புகின்றவர்கள்.இன்னொரு தரப்பினருக்கு சட்டம் பற்றி அதிகம் தெரியாது ஆனால் அரசியல்வாதிகளுக்கு வால்பிடிக்கும் கலையில் கைதேர்ந்தவர்கள்.

வால்பிடிக்கத் தெரிந்தவர்களுக்கு பணி உயர்வு கிடைக்கும். உயர் போலீஸ் தலைவர்களாவார்கள். நல்லவர்கள் ஒதுக்கி வைக்கப்படுவார்கள். ஒரே இடத்தில் இருந்து பணி ஓய்வு பெறுவார்கள் அல்லது முன்கூட்டியே பணி ஓய்வுபெற்றுக்கொண்டு தனியார் துறையை நாடிச் சென்றுவிடுவார்கள்.

நாட்டை விடுவிக்கும்போது போலீஸ் படையையும்  விடுவிக்க வேண்டும்..

கொள்ளையர்களைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கும்வரை, நீதிக்கு இடமில்லை.

ஜாகோ: நேர்மையான அதிகாரிகளான கோலாலம்பூர் குற்றப்புலன் விசாரணைத் துறை(சிஐடி) முன்னாள் தலைவர் மாட் ஜைன் இப்ராகிம் போன்றோர் ஏன் போலீஸ் படைத் தலைவர் ஆவதில்லை என்பது இப்போது புரிகிறது.

நடப்பு ஐஜிபி-யைவிட முன்னாள் குற்றப்புலன் விசாரணைத் துறை தலைவருக்கு நிறைய தெரிந்திருக்கிறது. இதை என்னவென்று சொல்ல?

விழிப்பானவன்: மூன்று அமைப்புகளும்-சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) அலுவலகம், போலீஸ், மற்றும் நீதித்துறை நீதியை திசைதிருப்ப வரிந்து கட்டிக்கொண்டு செயல்படும்போது எங்கிருந்து நீதி கிடைக்கும்?

சில வேளைகளில் போலீசார் விசாரணை  செய்ய மறுக்கின்றனர்.. சில நேரங்களில் ஏஜி வழக்கு தொடுக்க மறுக்கிறார்.சில வேளைகளில் முறையாக விசாரணை செய்யப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டாலும்கூட நீதிபதி  கிறுக்குத்தனமான தீர்ப்பை வழங்குகிறார். இதுதானய்யா மலேசியா.

தே: அறைக்குள் பெரிய யானை இருக்கிறது.சாதாரண மனிதர்களுக்கு அது தெரிகிறது.ஆனால் ஏஜிக்கும் நீதிபதிக்கும் பிஎன் அரசுக்கும் மட்டும் அது தெரிவதில்லை..

மாட் மலேசியா: பிரதமர் நஜிப் ரசாக் அவர்களே, நானும் ஏனைய 28மில்லியன் மலேசியர்களும், கொலைக்கு நோக்கம் முக்கியமில்லை என்று கூறி நீதிபதி உங்கள் மெய்க்காப்பாளர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்திருந்தாலும் அவர்கள் ஒரு அப்பாவி பெண்ணை தலையில் சுட்டு அவரது உடலை அத்துவான காட்டில் வெடிவைத்துச் சிதறடித்தது ஏன் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.

அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள் என்பதை அவர்களிடம் கேட்டீர்களா? அதைத் தெரிந்துகொள்வதில் உங்களுக்கு நாட்டம் இல்லையா?அல்லது, ஏன் அப்படிச் செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?தெரிந்தால், தயவு செய்து சொல்லுங்கள்.

நீங்கள் எங்கள் தலைவர். எங்களுக்கு விளக்கம் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கும் அதில் சம்பந்தமுண்டு என்று எல்லாரும் நினைப்பதால் வாய்மூடி மெளனம் காப்பது உங்களுக்கு நல்லதல்ல.

காங்காரு: உண்மையை நிலைநாட்டுவதே நீதிமன்றத்தின் தலையாய பணியாகும்.

தலைமை இன்ஸ்பெக்டர் அசிலா ஹட்ரி-யும் கார்ப்பரல் சிருல் அஸ்ஹார் உமரும் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அல்டான்துயா ஷரிபு என்பவர் யாரென்றே தெரியாது.

அதனால், அவர்கள் அவரைக் கொல்வதற்குக் காரணம் ஏதுமில்லை. பல கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்படவில்லை.வழக்கில் பல ஓட்டைகள்.

வழக்கில் நோக்கத்தை நிலைநிறுத்துவது மிக மிக முக்கியம்.ஒரு கொலைக்கு எப்போதுமே நோக்கம் இருக்கும்.நோக்கம் கொலைக்காரன் யார் என்பதைக் காண்பிக்கும்.

பெயரிலி: நீதித் துறையே கேலிக்கூத்தாக்கப்பட்டிருகிறது. பொலேலாந்தில்தான் இப்படியெல்லாம் நடக்கும்.

கிரிஸ்மேன்: நாட்டின் தலைவரைப் பாதுகாக்க சிறப்புப் பயிற்சிபெற்ற இரு போலீஸ் அதிகாரிகள், ஆயுதம் எதுவும் வைத்திராத ஒரு பெண்ணைக் கொல்ல வேண்டிய காரணம் என்ன?

பெயரிலி_321: இங்கு முறையான சட்டம், ஒழுங்கு கிடையாது.அதனால், சட்டத்துறைத் தலைவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதுவும் நீங்கள் அம்னோவில் பெரிய ஆளாக இருந்தால் சட்டத்தால் எதுவும் செய்ய முடியாது.

ஆத்திரம்கொண்டவன்: நஜிப்பும் அம்னோவும் ஆட்சியில் இருக்கும்வரை மேல்விசாரணை எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

கலா: அல்டான்துயா கொலையை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்கிறார் முன்னாள் கேஎல் சிஐடி தலைவர் மாட் ஜைன். ஆனால், மூன்றாம் உலக நாடுகளில் ஆட்சியில் இருப்பவர் யாரோ அவர் சொல்வதுதான் சட்டம். அவர் சட்டத்தை மாற்றலாம், சட்டத்துக்கு விரும்பும் விளக்கத்தைக் கொடுக்கலாம், கொடுத்த விளக்கத்தையே மாற்றலாம்.

மாட் ஜைனின் கனவு பலிக்க வேண்டுமானால் அரசாங்கம் மாற வேண்டும்.

TAGS: