இலங்கை மீதான தீர்மானம்: எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஹிண்ட்ராப் கடிதம்

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாட்டு மன்றத்தின் மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் தீர்மானத்தை மலேசிய அரசு ஆதரிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களின் நிலையை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் தேசிய ஆலோசகர் திரு நா. கணேசன் அண்மையில்  ஊடகங்களின் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஒருவேளை தமிழ் ஊடகங்களில் மட்டுமே பிரசுரமான செய்திகள் எதிர்க்கட்சி தலைவர்களின் கவனத்திற்கு எட்டாமல் போயிருக்கலாம் என்பதால் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு  ஆங்கிலத்தில் கடந்த மார்ச் 9-ஆம் தேதி  மின்னஞ்சல் மூலம் ஹிண்ட்ராப் சார்பில் கடிதம் ஒன்றையும் திரு கணேசன் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தின் தமிழாக்கத்தை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.

இதே போன்றதொரு மேலுமொரு கடிதம் மலேசியா பிரதமர் நஜிப் துன் ரசாக் அவர்களுக்கும்  ஹிண்ட்ராப் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது என்பதனையும்  தெரிவித்து கொள்கிறோம்.

—————————————————————————————-

மேதகு டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹீம்
(நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்),

மேதகு லிம் கிட் சியாங்
(ஆலோசகர்- ஜனநாயக செயல் கட்சி),

மேதகு டத்தோ ஸ்ரீ துவான் ஹஜி அப்துல் ஹடி அவாங்
(தலைவர் PAS  கட்சி)
மதிப்பிற்குரிய தலைவர்களே,

ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை ஆணையத்தின்  இலங்கை மீதான தீர்மானம்

புலரும் பொழுது தங்களுக்கு இனிமையானதாகட்டும்,

இலங்கையில் இரத்தம் தோய்ந்த உள்நாட்டு  போர் முடிவுக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. போர் எப்போதுமே மனித குல பேரழிவிற்கு வித்திடுவன என்ற உண்மையை நீங்கள் நன்கு உணர்ந்திருப்பீர்கள் என நான் பெரிதும் நம்புகிறேன். அவ்வாறே ஆயிரமாயிரம் அப்பாவி தமிழர்களின் உயிர்கள்  இப்போரில் பலியாயின. பேரழிவிற்கு ஆளாகி போர்க்களத்தில் எஞ்சி  இருக்கும் தமிழர்களின் அமைதிக்கும், நியாயத்திற்கும், தன்மானத்திற்கும் அவர்தம்  புனர்வாழ்வுக்கும்  அனைத்துலக சமூகம் போராடி  வருகிறது.

இலங்கை அரசு மனித உரிமை ஒப்பந்தங்களின் அடிப்படையில் தன்னுடைய மனிதாபிமானமற்ற மனித உரிமை மீறல்களை விசாரித்து அதற்கு காரணமானவர்களை தண்டிக்க கடமை பட்டிருக்கிறது. அவ்வகையில் தாம் மீறிய போர் தர்மங்களை அடையாளங் காண போவதாக கூறி அதற்கு அடித்தளமாக, போரின் போது கற்றுக்கொண்ட படிப்பினைகளை சமரச ஆணைக்குழு (Lessons Learnt and Reconciliation Commission – (LLRC)  மூலம் 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிக்கை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. அவ்வறிக்கை அனைத்துலக தரத்திற்கேற்ப சுதந்திரமான  நடுநிலையை கொண்டிருக்கவில்லை எனினும் போருக்கு பிந்தைய இலங்கையில் நீண்டகால அமைதி மற்றும் சமரசம் நிலவ பொருத்தமான வழிமுறைகளை கண்டறிவதற்கு மிகச்சிறிய சாத்தியத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும்  இவ்வாணைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் உறுதி கொள்ளாமல் மெத்தன போக்கை கையாள்கிறது. இதன் விளைவாக பரிவுமிக்க சில அனைத்துலக சமூகங்கள் ஒன்றிணைந்து இலங்கை அரசு LLRC இன் பரிந்துரைகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் எனவும் அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகளின் துரிதத்தை எதிர்வரும் 2013-ஆம் ஆண்டு கூடும் 22-வது  ஐக்கிய நாட்டு மன்றத்தின் மனித உரிமை ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும் என்றும் இன்னும் சில நாட்களில் ஐக்கிய நாட்டு மன்றத்தின், மனித உரிமை ஆணையத்திடம் தீர்மானம் ஒன்றை  தாக்கல் செய்ய உள்ளனர்.

47 நாடுகள் பிரதிநிதிக்கும்  ஐக்கிய நாட்டு மன்றத்தின் மனித உரிமை ஆணையத்தில் மலேசியாவும் அங்கம் வகிக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக மலேசியா இந்த தீர்மானத்தை ஆதரிக்காது என்ற செய்தி எங்களுக்கு எட்டியுள்ளது. தமது குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் எந்த நாடும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு கொடுக்கும், ஆனால் மலேசிய அப்படி செய்ய முன்வரவில்லை. மேலும்  கணிசமான சிறுபான்மையினர் வாழும் இந்நாட்டில், இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதின் மூலம் மலேசிய தமது சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு எவ்வளவு மதிப்பளிகிறது என்பதனையும் பிரதிபலிக்க முடியும். மாறாக இலங்கை அரசுக்கு எதிரான இந்த தீர்மானத்தை ஆதரிக்காதது  மலேசியாவில் உள்ள சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை இவ்வரசு துச்சமாக எண்ணுவதையே காட்டுகிறது.

மலேசிய அரசின் இந்த  போக்கை நாங்கள் கடுமையாக கருதி சாடுகிறோம்

இந்த தீர்மானத்தை ஆதரிப்பது அரசியல் முக்கியத்துவத்தை விட தார்மீக ரீதியில் முக்கியத்துவம் கொண்டது. தடம்புரண்ட மனிதாபிமானத்தால் பாதிக்கப்படிருக்கும்   இலங்கை தமிழர்களை தன்மான , சுயகௌரவ , மற்றவர்களுக்கு  சரிநிகரானவர்களாக, அரசியல் சட்ட சாசனங்களுக்கு  ஏற்ப  நடத்தப்படுபவர்களாக   தலை நிமிர்ந்து நடக்க ,  அவசியமான அதே சமயத்தில் விரைவாக எடுக்கப்பட வேண்டிய   ஒரு முயற்சியாக இதனை கருத வேண்டும். தவறினால் மேலும் ஒரு இன அழிப்பு சதி திட்டத்தின் புதிய அத்தியாயத்தை நாம் அனுமதிக்கிறோம் என்றே பொருள் படும். மலேசிய அரசு இந்த தீர்மானத்தை ஆதரிக்காததின் காரணம் இந்நாட்டு சிருபான்மைனருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் மனித உரிமை மீறல்களை மற்ற நாடுகள் தட்டி கேட்கும் போது இலங்கை போன்றே நாடுகளின் ஆதரவை பெருவதர்க்கேயாகும்.

தீங்கிழைக்கப்பட்டிருக்கும் வஞ்சிக்கப்பட்ட மலேசிய இந்திய சமூகத்தை பிரதிநிதிக்கும் ஹிண்ட்ராப் மக்கள் சக்தியை சார்ந்த நாங்கள் அம்னோ தலைமையிலான பாரிசான் அரசின் அநியாயங்களை எதிர்க்கும் எதிர்க்கட்சி தலைவர்களாகிய  உங்களிடம், இலங்கை அரசுக்கெதிரான தீர்மானத்தை மலேசிய அரசு ஆதரிக்க வேண்டும் என்று நெருக்குதல் அளிக்கும் பொது அறிக்கை வெளியிடும்படி  கேட்டுகொள்கிறோம்.

நீங்கள் இலங்கை அப்பாவி தமிழர்களுக்கு சாதகமாக குரல் கொடுப்பதன் மூலம் மலேசிய சிறுபான்மை சமூகங்களுக்கு மதிப்பளிக்கிறீர்கள்  என்பதோடு மட்டுமல்லாமல்  நீங்கள் அம்னோ அரசாங்கத்திலிருந்து முற்றிலும் மாறு பட்டவர்கள் என்பதை மக்களிடம் உறுதிபடுத்தவும் முடியும்.

நீங்கள் ஒரு அரசாங்கத்தின் அறநெறிகளில் நம்பிக்கை உள்ளவர்கள் என்பதை மலேசிய மக்களுக்கு உணர்த்த விரும்பினால் எங்களின் இந்த வேண்டுகோளை ஏற்க்க வேண்டும். ஏற்பீர்களா?

உங்களின் பொது அறிக்கைக்கு காத்திருக்கிறோம்.

அன்புடன் நன்றி.

நா. கணேசன்
தேசிய ஆலோசகர்
ஹிண்ட்ராப் மக்கள் சக்தி.