ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 19-வது ஐ.நா மனித உரிமை மன்றத்தின் சந்திப்பில் இலங்கை அரசிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை மலேசிய அரசு ஆதரிக்க வேண்டும் என சுங்கை சீப்புட் பொது இயங்கள் பிரதமரை கேட்டுக்கொண்டன. (படங்களை பார்வையிட அழுத்தவும்)
“தமிழினத்துரோகியாக மலேசியா இருக்கக்கூடாது” என்ற கமுனிங் இளைஞர் மன்றத் தலைவரான த. நடராஜன், மலேசியத் தமிழர்கள் மட்டுமல்லாமல் எந்த மலேசியரும் இந்த முடிவை அற்ற நிலையில் வேறு எது செய்தாலும் அது தமிழர்களுக்கு செய்யும் துரோகமாகவே கருதப்படும் என்கிறார்.
நேற்று (09.03.2012) சுங்கை சீப்புட்டில் நடைபெற்ற அவசர சந்திப்புக் கூட்டத்தில் 30 இயக்கங்களிலிருந்து சுமார் 100 பிரதிநிதிகள் வரை கலந்து கொண்டனர். இதில் மலேசிய மனித உரிமை கழகத்தின் தலைவரான கா. ஆறுமுகம் மற்றும் மலேசியத் தமிழர் பேரவையின் தலைவர் டாக்டர் என். ஐயங்கரனும் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
2009-ஆம் ஆண்டு மே மாதம்தான் கடைசிப் போர் நடைபெற்றது, அப்போது 40,000-க்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர், பாலியல் கொடுமைகளுக்கு தமிழ் பெண்கள் பலியாகினர், பச்சிளங்குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர், இப்படி கொடூரமான செயல்களை செய்த இலங்கையுடன் எப்படி மலேசியா அப்பாவி போல உறவாடுவதை நம்மால் ஜீரணிக்க முடியும், என வினவுகிறார் நடராஜா. குறைந்தபட்சம், மலேசியா இந்த ஐ.நா தீர்மானத்தை ஆதாரித்து தனது நிலைப்பாட்டை சீரமைத்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இலங்கை அரசாங்கமானது தனது நாட்டில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து உண்மையான, நீதியான தீர்வை எட்டுவதுடன், உரிய வகையில் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் அமந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.