மூத்த பெல்டா அதிகாரி பிரதமர் துறையில் “குளிர் பதனம்” செய்யப்பட்டார்

பெல்டா கூட்டுறவுக் கழகத்தின் ( KPF ) செயலாளர்,   அந்தக் கூட்டுறவுக் கழகத்தின் தலைவராக ஈசா சமாட் நியமிக்கப்படுவதை எதிர்ப்பதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து  பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டதாக பாஸ் நாடாளுமன்ற உறுப்பினரான மாஹ்புஸ் ஒமார் கூறியிருக்கிறார்.

பெல்டா துணைத் தலைமை இயக்குநருமான அபிடின் அப்துல் ரஹ்மான், மார்ச் முதல் தேதியிலிருந்து பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டு அங்குள்ள நூலகத்தில் காகிதங்களை வெட்டும் பணியைச் செய்வதாக அவர் கூறிக் கொண்டார்.

பெல்டா தலைவர் என்ற முறையில் KPF-க்கு ஈசா தலைமை தாங்குவதற்குத் தெரிவிக்கப்பட்ட யோசனை தொடர்பில் தமது கவலையைத் தெரிவித்ததற்காக அபிடின் இப்போது இன்னலை அனுபவிக்கிறார் என அந்த பொக்கோக் செனா எம்பி சொன்னார்.

ஈசா கூட்டுறவுக் கழகத் தலைவராக நியமனம் பெறுவது கூட்டுறவு விதிகளை மீறுவதாகும் என அபிடின் சுட்டிக் காட்டியதாகச் சொல்லப்படுகிறது.

ஈசா கூட்டுறவுக் கழகத்தின் உறுப்பினராக இருந்தால் மட்டுமே KPFன் தலைவராக நியமிக்கப்படுவதைத் தாம் ஏற்க முடியும் என அபிடின் சொன்னதாக மாஹ்புஸ் தெரிவித்தார்.

“உறுப்பினராக வேண்டுமானால் ஈசா குடியேற்றக்காரராக இருக்க வேண்டும் அல்லது நடவடிக்கை ஊழியராக இருக்க வேண்டும்,” என அவர் நேற்று மலேசியாகினியிடம் கூறினார்.

பொதுச் சேவைத் துறைக்கு அபிடினை மாற்றலாம் என முதலில் பெல்டா வாரியம் பரிந்துரை செய்தது. ஆனால் அது சாத்தியமல்ல. காரணம் பெல்டா அரசாங்கத் துணை நிறுவனமாகும். அதே வேளையில் பொதுச் சேவைத் துறை அரசாங்க அமைப்பாகும்.

‘அவமானத்தைத் தரும் நடவடிக்கை’

அபிடின் பின்னர் பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டதாக அந்த அரசியல்வாதி குறிப்பிட்டார்.

“அரசாங்க அதிகாரி ஒருவரை அவமானப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள வெட்கக் கேடான நடவடிக்கை அது,” என மாஹ்புஸ் வருணித்தார்.

ஏற்கனவே ஈசா நியமனத்தை எதிர்த்ததாகக் கூறப்பட்ட பெல்டா தலைமை இயக்குநர் சுல்கிப்லி அப்துல் வஹாப், 9 மாதங்களுக்கு கல்வி விடுமுறையில் செல்லுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

TAGS: