நஜிப்: தீங்கானது எனத் தெரிந்தால் அரசாங்கம் லினாஸை மூடும்

குவாந்தான், கெபெங்கில் அமையும் லினாஸ் அரிய மண் தொழில் கூடம் மக்களுடைய ஆரோக்கியத்துக்கும் சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைவிக்கும் என அறிவியல் ஆதாரங்கள் மெய்பிக்குமானால் அரசாங்கம் அந்தத் தொழில் கூடம் இயங்குவதற்கு அனுமதிக்காது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார்.

“நாங்கள் அதில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். மலேசியக் குடிமக்களுடைய பாதுகாப்பு சமரசம் செய்து கொள்ளப்பட மாட்டாது,” என மண்டரின் மொழி 988 வானொலிக்கு அளித்த நேரடிப் பேட்டியில் அவர் கூறினார்.

“அந்தத் தொழில் கூடத்தை எதிர்ப்பவர்களுடன் அரசாங்கம் கலந்துரையாடலை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் அந்தக் கலந்துரையாடல் அறிவியல் உண்மைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். உணர்வுகள், அரசியல் வாதங்கள் அடிப்படையில் அல்ல.”

“வெறும் சுற்றுச்சூழல் பிரச்னை இப்போது அரசியல் பிரச்னையாகி விட்டது. அது மிகவும் துரதிர்ஷ்டமாகும்,” என்றார் நஜிப்.

லினாஸ் தொழில் கூடம் மீது நாடாளுமன்ற தேர்வுக் குழு (பிஎஸ்சி) கடந்த திங்கட்கிழமை அமைக்கப்பட்டது. ஆனால் அதனை எதிர்க்கட்சிகள் அதனைப் புறக்கணித்து விட்டன.

அந்தத் தொழில் கூடம் தொடர்பான அறிவியல் ஆதாரங்களைத் திரட்டுவதற்கான வழிமுறைகளில் ஒன்றாக அந்தக் குழு அமைக்கப்பட்டதாக நஜிப் விளக்கினார்.

பிஎஸ்சி கண்டு பிடிப்புக்கள் அரசாங்கத்தை கட்டுப்படுத்துமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த பிரதமர் “நாங்கள் முடிவு செய்வதற்கு பிஎஸ்சி வலுவான அடிப்படை,” என்றார்.

மசீச-வுக்கு சொந்தமான அந்த வானொலியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நஜிப் பேட்டி அளித்தார்.

சீனத் தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, ஜாலான் சுல்தானில் எம்ஆர்டி இணைப்புக்கு ஆட்சேபம், என் முதலாவது இல்லம் மற்றும் பல விஷயங்கள் மீது அப்போது அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

TAGS: