சிரியா மீதான தீர்மானம்: ரஷ்யா, சீனா ஒப்புதல்

ஐ.நா., பாதுகாப்பு மன்றத்தில் சிரியா மீதான தீர்மானத்திற்கு ரஷ்யாவும், சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன. சிரியா தனது வன்முறையைத் தொடர்வதை இனியும் உலகம் பொறுத்துக் கொள்ளாது என, ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் உடனடிச் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்தி, அதன் பின் அமைதி திரும்ப நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற ஆறு அம்ச ஆலோசனையை ஐ.நா., அரபு லீக் பிரதிநிதி கோபி அனன் பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை நிராகரித்து, சிரியா மேலும் தனது வன்முறையைத் தொடரும் பட்சத்தில், ஏழு நாட்களில் மிகக் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என எழுதப்பட்ட தீர்மானம் ஒன்று, ஐ.நா., பாதுகாப்பு மன்றத்தில் நேற்று விவாதத்திற்கு விடப்பட்டது. ஏழு நாள் என்பது இறுதி வாய்ப்பு என்பதாகக் கருதிய ரஷ்யா, அதுபோன்று கால வரையறை குறிப்பிட வேண்டாம் என மாற்றம் கொண்டு வந்தது. பின் இத்தீர்மானத்திற்கு ரஷ்யாவும், சீனாவும் ஆதரவு தெரிவித்தன.

சிரியாவுக்கு இதுவரை பலமான ஆதரவாக இருந்து வந்த ரஷ்யா, தற்போது தனது நிலையில் இருந்து சற்று இறங்கி வந்துள்ளது. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, ஒரு நாளைக்கு இரு மணி நேரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என முதலில் ரஷ்யா தெரிவித்தது. அதையடுத்து, நேற்று முன்தினம் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், முதலில் நடந்த அமைதியான ஆர்ப்பாட்டங்களை சிரிய அதிபர் தவறான முறையில் அணுகியதாகவும், தொடர்ந்து தவறு மேல் தவறு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.