13-வது பொதுத் தேர்தல்:பிஎன் எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும்

பினாங்கு பிஎன் பணிக்குழுத் தலைவர் டாக்டர் தெங் ஹொக் நான்,எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றிபெறுவது எளிதாக இருக்காது என்று நினைப்பதுபோல தோன்றுகிறது. .அதே வேளை, அவரது கருத்துப்படி பக்காத்தான் ரக்யாட்டிலும் நிலைமை அவ்வளவு நன்றாக இல்லை.

பக்காத்தானில், டிஏபி தலைவர் கர்பால் சிங்கைவிட செல்வாக்கு உள்ளவராக விளங்கும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் “அலை” வீசிக் கொண்டிருக்கிறது என்று மாநில கெராக்கான் தலைவருமான தெங் கூறினார்.

13வது பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் தெங்கின் “பெயர் இல்லை” என்ற வதந்தி உலவுகிறது.ஆனால் அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை.

முன்னாள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான தெங், “அலையை எதிர்த்து எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும்” என்பதால் தேர்தலில் பிஎன் பெரிதாக வெற்றி பெறுவது கடினமாக இருக்கும் என்று தொலைபேசி வழி மலேசியாகினி நடத்திய நேர்காணலில் கூறினார்.

பிஎன் கட்சிகள் இணைந்து பாடுபட வேண்டும்.கடுமையாக பாடுபட வேண்டும்.அப்படி கடுமையாக பாடுபடுவதாலேலே கட்சி உறுப்பினர்கள் “களைத்துப் போவார்கள்”, என்றாரவர்.

“அது கடுமையான பணியாக இருக்கும்.அப்படியே ஒன்றிணைத்து பணி புரிந்தாலும் முடிவு நன்றாக இல்லாமல் போகலாம்.இதுதான் உண்மை நிலவரம்.இந்நிலைமைக்கு பிஎன்-னே பொறுப்பு”. 

சவால்மிகுந்ததாக இருந்தாலும்கூட பிஎன் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றுவதும் ஒரே குரலில் பேசுவதும் முக்கியம் என்று முன்னாள் பூலாவ் திக்குஸ் சட்டமன்ற உறுப்பினரான தெங் குறிப்பிட்டார்.

முன்பு திங்கள்கிழமைகளில் பிஎன் நடைப்பயணம் மேற்கொள்வது வழக்கமாக இருந்தது.இப்போது அது இல்லை.அது பற்றி வினவியதற்கு “இப்போது செராமா நடத்தப்படுகிறது” என்றார்.

பொதுத் தேர்தலை எண்ணிக் கலக்கம் அடைந்திருப்பவர் தெங் மட்டுமல்ல.முன்னாள்  நிதி அமைச்சரும் அம்னோவின் முன்னாள் பொருளாளருமான டயிம் சைனுடினுக்கும் அந்தக் கலக்கம் உண்டு.அவர், ஜோகூர், மலாக்கா, பகாங் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே பிஎன் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும் என்று கருதுகிறார்.

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் நெருங்கிய நண்பரான டயிம், 2008 பொதுத் தேர்தலில் பினாங்கு, சிலாங்கூர், கெடா ஆகியவற்றில்  பிஎன் வீழ்ச்சி அடையும் என்பதைச் சரியாக முன்னறிந்து கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: