“ஒய்வு பெற்ற, சேவையில் உள்ள முதுநிலை போலீஸ் அதிகாரிகள் சாட்சியமளிக்க முன் வரும் போது அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் வேண்டும் என அவர் சொல்வதின் அர்த்தம் என்ன?
ராம்லி: பஞ்சாயத்து மன்றம் நிராகரிக்கப்பட்டது மீது என் ஆட்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்
கைரோஸ்: முன்னாள் வர்த்தகக் குற்ற புலனாய்வுத் துறைதலைவர் ராம்லி யூசோப் சொல்வது உண்மையே- அவரைச் சந்தேகிப்பதற்கு வழியே இல்லை. பெரிய அளவில் விஷயங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.
நமது மூத்த போலீஸ்காரர்கள் ரகசியக் கும்பல்களுடன் ஒத்துழைக்கின்றனர் என்பதை நம்பவே முடியவில்லை. ஏஜி (சட்டத் துறைத் தலைவர் ) மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நெருப்பு இல்லாமல் புகையாது என நம்புகிறேன். ராம்லியின் குற்றச்சாட்டுக்களில் ஒரளவு உண்மை இருக்க வேண்டும்.
ஏஜி பற்றியும் முன்னாள் ஐஜிபி (தேசிய போலீஸ் படைத் தலைவர்) பற்றியும் சிக்கலான விஷயங்களைக் கண்டு பிடித்ததற்காக பல போலீஸ் அதிகாரிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
அரசாங்கத் தலைமைத்துவம் உண்மையானதாகவும் தூய்மையானதாகவும் இருந்தால் இத்தகைய போலீஸ்- ரகசியக் கும்பல் தொடர்புகள் எந்தத் தயக்கமுமின்றி உடனடியாக அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதிகார வர்க்கம் தூய்மையானதாக இல்லை. பிரதமர் அவருக்கு மட்டுமே தெரிந்த காரணங்களுக்காக உண்மையை மறைக்க இருண்ட, கறைபடிந்த பாதையைத் தேர்வு செய்துள்ளார். வெட்கக் கேடானது.
டாக்டர் சுரேஷ் குமார்: அந்த விவகாரத்தில் போதுமான ஆதாரம் இருக்கிறதா இல்லையா என்பதை முடிவு செய்வது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வேலை அல்ல. சட்ட நுணுக்கங்களில் தேர்ச்சி பெற்றவர்களே அதனை முடிவு செய்ய வேண்டும்.
இந்தக் கட்டத்தில் அரசாங்கம் ராம்லியின் கோரிக்கையை தீவிரமாக எடுத்துக் கொண்டு பஞ்சாயத்து மன்றம் அமைக்கப்படுவதற்கு ஒப்புக் கொண்டால் தவிர யாருக்கு உண்மை தெரியாது.
இல்லை என்றால் முன்னாள் ஐஜிபி-யையும் ஏற்கனவே களங்கப்படுத்தப்பட்டுள்ள ஏஜி-யையும் பாதுகாப்பதற்கு முயற்சி செய்யப்படுவதாகவே நல்ல சிந்தனையைக் கொண்ட மலேசியர்கள் எண்ணுவர்.
அடையாளம் இல்லாதவன்: அன்புள்ள டத்தோ ராம்லி, மக்கள் உங்கள் பக்கம். உங்கள் ஆட்கள் பக்கம். அஞ்ச வேண்டாம். தீயதை செய்தவர்கள் தண்டிக்கப்படும் காலம் வரும்.
நியாய சிந்தனை கொண்ட மலேசிய மக்கள் எழுச்சி பெற்று இந்த ஊழல் அரசாங்கத்தை தூக்கி எறிந்து-நேர்மைக்கும் வெளிப்படையான போக்கிற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் ஒர் அரசாங்கத்தை அமர்த்துவர். நாங்கள் உங்களுக்காகப் பிரார்த்திக்கிறோம்.
‘போலீஸ் ஊழல்’ ( Copgate ) பற்றிய விசாரணை வரை ஏஜி இடை நீக்கம் செய்யப்பட வேண்டும்
லூயிஸ்: நஜிப் தமது மூக்கு வழியாகப் பேசுகிறார். ஒய்வு பெற்ற, சேவையில் உள்ள முதுநிலை போலீஸ் அதிகாரிகள் சாட்சியமளிக்க முன் வரும் போது அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் வேண்டும் என அவர் சொல்வதின் அர்த்தம் என்ன? ஆதாரங்கள் உங்கள் கண்களுக்கு எதிரே உள்ளன.
திறந்த உள்ளம்: எல்லாம் வரிசையாக அடுக்கப்பட்ட கார்டுகள் போன்றவை. ஒன்றைத் தொட்டால் எல்லாம் விழுந்து விடும். பிரதமர் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அவர்கள் அனைவரையும் காப்பாற்றியாக வேண்டும்.
நியாயம் பிறக்க வேண்டுமானால் அரசாங்கத்தை மாற்றுவதே ஒரே வழியாகும்.
தாங்கள் தவறு ஏதும் செய்யவில்லை என்றும் நாட்டின் வளப்பத்தை கொள்ளையடிக்கவில்லை என்றும் அவர்கள் கூறிக் கொள்ளும் வேளையில் மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவர். இறுதியில் இந்த உலகத்தின் மீதே பழி போடுவர்.
ஷானாண்டோ: பஞ்சாயத்து மன்றத்தில் சாட்சியமளிக்க முதுநிலை போலீஸ் அதிகாரிகள் தயாராக இருக்கும் போது பிரதமர் எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்? இன்னும் அதிகமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் என அவர் அஞ்சுகிறாரா?
பஞ்சாயத்து மன்றம் இல்லை என்கிறார் நஜிப்
குவினோபாண்ட்: அம்னோ நிலத்தில் அதன் சேவகர்களுக்கு எதிராக டன் கணக்கில் ஆதாரங்கள் இருந்தாலும் குற்றச்சாட்டுக்கள் வெறும் குற்றச்சாட்டுக்களே.
அம்னோ நிலத்தில் எதிர்க்கட்சிகள் என வரும் போது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக் கூட வழக்குத் தொடருவதில் முடியும்.
தீவகற்ப மலேசியா, சபா, சரவாக் ஆகியவற்றின் உட்புறப்பகுதிகளில் உள்ள கிராமப்புற மக்கள் எவ்வளவு தான் அறியாதவர்களாக இருந்தாலும் அநியாயத்துக்கு எதிராக ஆத்திரப்படுவது இயற்கை, மனிதப் பண்பு. வெறும் மறுப்புக்கள் அதனைத் தடுக்கவே முடியாது.
தன் வினைத் தன்னைச் சுடும். தகவல் தொழில் நுட்பம் வெகு வேகமாக வளர்ச்சி கண்டுள்ள இந்த உலகில் விரைவாக நடக்கும்.
அடையாளம் இல்லாதவன்: பிரதமர் அவர்களே, உருப்படியான காரணத்தைச் சொல்லுங்கள். போதுமான ஆதாரம் இருந்தால் பஞ்சாயத்து மன்றம் அமைக்க வேண்டிய அவசியமே இல்லை. அதற்குப் பதில் ஏஜி மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கும்.
போதுமான ஆதாரம் இருந்தால் அதனை மெய்பிப்பதே பஞ்சாயத்து மன்றத்தின் பணியாகும். இத்தகைய திறமையற்ற கோழை (நான் அந்தச் சொல்லை மேலோட்டமாகப் பயன்படுத்துகிறேன்) வழி நடத்தும் நமது நாட்டை இறைவன் காப்பாற்றட்டும்.