ஹிண்ட்ராப்: நஜிப் இந்தியர்களுடைய நம்பிக்கையைச் சிதறடித்து விட்டார்

பிஎன் அரசாங்கம் இந்திய சமூகத்தின் நம்பிக்கையை சிதறடித்து விட்டதை காட்டும் வகையில் ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழு புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு தர்பூசணிப் பழத்தை கொண்டு சென்று உடைத்தது.

அந்த சிறுபான்மை இனத்தைக் கவருவதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பயன்படுத்தும் நம்பிக்கை என்னும் சொல்லை குறிப்பிட்ட ஹிண்ட்ராப், இந்தியர்களுடைய நம்பிக்கை, tembikai ( தர்பூசணிக்கு மலாய் சொல்) யைப் போன்று தரையில் சிதறடிக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்தது.

இவ்வாண்டு ஹிண்ட்ராப் நடத்தும் இரண்டாவது பேரணியாகும். காலை மணி 10.00 வாக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அங்கு கூடினர்.

தங்கள் சமூகம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஹிண்ட்ராப் வழங்கியுள்ள 18 அம்ச கோரிக்கை மீது பிரதமரை சந்திப்பதற்கு வேண்டுகோள் விடுக்கும் பொருட்டு அவர்கள் அங்கு கூடினர்.

அந்தப் பேரணியின் போது நம்பிக்கை என எழுதப்பட்டிருந்த தர்பூசணியை ஹிண்ட்ராப் தலைவர்கள் வைத்திருந்தனர்.

நஜிப் அல்லது அவர் இல்லாவிட்டால் அவரது அரசியல் செயலாளரைச் சந்திப்பதற்கு தாங்கள் விடுத்த வேண்டுகோளை மார்ச் 22ம் தேதி பிரதமர் அலுவலகம் உறுதி செய்ததாக ஹிண்ட்ராப் மூத்த தலைவர் பி  உதயகுமார் கூறினார்.

ஆனால் அவர்களைச் சந்திப்பதற்கு பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த யாரும் வர மாட்டார்கள் என உதயகுமாரிடம் புத்ராஜெயா ஒசிபிடி தெரிவித்த போது பேரணி பங்கேற்பாளர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

அந்த ஏமாற்றத்தைத் தொடர்ந்து “அம்னோ இனவாதி” என உதயகுமார் தலைமையில் கூட்டத்தினர் முழங்கினர். பின்னர் அந்த தர்பூசணியை தரையில் போட்டு உடைத்தனர்.

“உங்கள் (நஜிப்) மீதான எங்கள் நம்பிக்கை இந்த tembikai-யைப் போன்று சிதறி விட்டது,” என அவர் சொன்னார்.

பிப்ரவரி மாதம் பத்துமலையில் நடைபெற்ற தைப்பூசக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட நஜிப் நம்பிக்கை என்ற அந்த தமிழ் சொல்லைப் பயன்படுத்தி, தமக்கு ஆதரவு அளிக்குமாறு இந்தியர்களை  கேட்டுக் கொண்டார். அந்த ஆதரவைக் கொண்டு தாம் இந்திய சமூகத்துக்கு உதவ முடியும் என்றும் அவர் சொன்னார்.

TAGS: