“பிஎஸ்சி பரிந்துரைகள் 80 விழுக்காடு தயாராகி விட்டன”

மலேசியத் தேர்தல் முறையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் பட்டியலை தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு கிட்டத்தட்ட தயார் செய்து விட்டது.

“நாளை இறுதிக் கூட்டம். இன்றிரவு நாங்கள் இன்னும் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. என்றாலும் பரிந்துரைகளில் 80 விழுக்காடு தயாராகி விட்டது நான் கூற முடியும்,” என அந்தக் குழுவின் தலைவரும் கோத்தா மாருது எம்பி-யுமான மாக்ஸிமுஸ் ஒங்கிலி கூறினார்.

அவர் இன்று பிஎஸ்சி கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பின்னர் நிருபர்களிடம் பேசினார். என்றாலும் அவர் அந்தப் பரிந்துரைகளை விவரமாக வெளியிட மறுத்து விட்டார். ஏப்ரல் 2ம் தேதி பிஎஸ்சி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே விவரங்கள் அறிவிக்கப்படும் என்றார் அவர்.

“ஆனால் நான் அந்தக் குழு உறுப்பினர்கள் குறித்து மனநிறைவு அடைந்துள்ளேன். அவர்கள் தாங்கள் எண்ணுவதை வெளிப்படையாகச் சொன்னார்கள். தேர்தல் முறையை மேம்படுத்துவதற்கு அவர்கள் பாடுபட்டனர்,” என மாக்ஸிமுஸ் சொன்னார்.

இதனிடையே இன்னும் தீர்க்கப்படாத சில விஷயங்களில் வாக்காளர் பட்டியலும் அடங்கும் என பிஎஸ்சி-யில் உள்ள பிகேஆர் பேராளரும் கோம்பாக் எம்பி-யுமான அஸ்மின் அலி கூறியிருக்கிறார்.

அந்த விஷயம் இன்னும் பிரச்னையாகவே இருப்பதாக பிஎஸ்சி-யில் உள்ள மற்ற பக்காத்தான் உறுப்பினர்களும் கூறினர்.

அந்த விவகாரம் மீது தேர்தல் ஆணையத்துடன் நடத்தப்பட்ட பல கூட்டங்களுக்கு இது நாள் வரையில் எந்தப் பலனும் இல்லை என அஸ்மின் வருணித்தார்.

இன்றைய கூட்டம் அந்தக் குழுவின் கடைசி கூட்டமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் சர்ச்சைக்குரிய பிரச்னைகளை தீர்ப்பதற்காக நாளை வரையில் அது தள்ளி வைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பெர்சே 2.0 அமைப்பு நடத்திய தேர்தல் சீர்திருத்தப் பேரணியை அரசாங்கம் ஒடுக்கிய பின்னர் தேர்தல் சீர்திருத்தங்கள் கோரி பொது மக்கள் தீவிர அழுத்தம் கொடுத்ததால் பிஎஸ்சி தோற்றுவிக்கப்பட்டது.

TAGS: