பிஎஸ்சி இன்னும் ஐந்து பிரச்னைகளைத் தீர்க்க வேண்டியுள்ளது

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு கடந்த ஆறு மாதங்களாக நாடு முழுவதும் பொது விசாரணைகளையும் குழுக் கூட்டங்களையும் நடத்திய பின்னர் 16 முக்கிய அம்சங்கள் மீது இணக்கம் கண்டுள்ளது.

9 உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழுவுக்கு அறிவியல், தொழில் நுட்ப, புத்தாக்க அமைச்சர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி தலைமை ஏற்றுள்ளார்.

பிஎஸ்சி இன்னும் ஐந்து பிரச்னைகள் மீது இணக்கம் காணவில்லை என அதன் பணிகளைப் பற்றி அறிந்துள்ள ஒரு வட்டாரம் கூறியது.

அந்த ஐந்து விஷயங்களும் வருமாறு:

1. அரசியல் பிரச்சாரத்துக்கு நிதி அளிப்பது
2. பொருத்தமான பிரச்சார காலம்
3. வேட்பாளர் நியமனத்துக்கு பின்னர் வேட்பாளர்கள் மீட்டுக் கொள்வது
4. வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு வாக்களிப்பு உரிமை
5. ஊடக ஊழியர்களுக்கு அஞ்சல் வாக்குகள்

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது தாயகம் திரும்பியிருந்தால் அவர்களுக்கு வாக்குரிமையை வழங்குவது என்ற நடைமுறை மீது இணக்கம் காணப்பட்டுள்ளதாக அந்த வட்டாரம் குறிப்பிட்டது.

“அதனை தெளிவுபடுத்தும் பணியில் குழு இப்போது ஈடுபட்டுள்ளது.”

பிஎஸ்சி தனது அறிக்கையை ஏப்ரல் 2ம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டும்.

தேர்தல் பிரச்சாரக் காலம் மீது முடிவு செய்வதிலும் அது சிரமங்களை எதிர்நோக்குவதாகச் சொல்லப்படுகிறது.

“சில உறுப்பினர்கள் 21 நாட்களை விரும்பும் வேளையில் பெரும்பான்மையோர் அது 10 நாட்களுக்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறுகின்றனர்.”

வேட்பாளர்களுக்கு நிதி அளிக்க பொது நிதிகள்

அரசியல் நிதி அளிப்புக்களைக் கண்காணிப்பதற்காக தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களுடைய நிதி ஆதாரங்களை தெரிவிக்க வேண்டும் எனக் கூறும் நடைமுறை ஒன்றை உருவாக்க குழு ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

என்றாலும் சமமான ஆட்டக் களத்தை உறுதி செய்ய அரசியல் கட்சிகளுக்கு அரசாங்கம் நிதி உதவி செய்ய வேண்டுமா என்பது மீது அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளருக்கு பொது நிதியில் கணிசமான பங்கு கொடுக்கப்பட வேண்டும் என பிஎன் எம் பி-க்கள் விரும்புவதாக அந்த வட்டாரம் குறிப்பிட்டது.

ஆனால் ‘விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில்’ நிதிகள் வழங்கப்பட வேண்டும் என பக்காத்தான் ராக்யாட் உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

ஊடக ஊழியர்கள் அஞ்சல் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ள உரிமை அளிப்பது மீது பிஎஸ்சி உறுப்பினர்களிடையே இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

“ஒரு தரப்பு அதனை ஏற்றுக் கொள்கிறது. சில நிருபர்கள் தங்களது வாக்களிப்பு நிலையங்களிலிருந்து தொலைவிலுள்ள இடங்களுக்கு அனுப்பப்படக் கூடிய சாத்தியம் இருப்பதால் அவர்கள் முன் கூட்டியே வாக்களிக்க அது உதவும் என அவர்கள் கருதுகின்றனர்.”

“அஞ்சல் வாக்கு முறை எளிதாக மோசடி செய்யப்பட முடியும் என்பதால் அதனை நம்ப இயலாது என இன்னொரு தரப்பு வாதாடுகிரது.”

வாக்காளர் பட்டியலை துப்புரவு செய்வது

வேட்பாளர்கள் தாங்கள் சமர்பித்த வேட்பு மனுக்களை மீட்டுக் கொள்ள அனுமதிப்பது மீது இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

இப்போது அதற்கு 48 மணி நேர அவகாசம் கொடுக்கப்படுகிறது. அதற்குள் வேட்பாளர்கள் மனுவை மீட்டுக் கொண்டால் வைப்புத் தொகைகள் திருப்பிக் கொடுக்கப்படுகிறது.

அந்தக் குழு இணக்கம் கண்டுள்ள 16 அம்சங்களில் போட்டியிடும் கட்சிகளுக்கு ஊடகங்களில் சமமான வாய்ப்பு வழங்குவதும் அடங்கும். சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு ஊடக வழிகாட்டிகளைக் கொடுக்குமாறு தேர்தல் ஆணையத்தை பிஎஸ்சி கேட்டுக் கொள்ளும்.

வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவது தொடர்பில் அதனைக் கண்காணிக்க சிறப்புக் குழு ஒன்றை அமைக்கவும் பிஎஸ்சி உறுப்பினர்கள் விரும்புகின்றனர்.

கடந்த வாரம் மிமோஸ் என்ற மலேசிய நுண் மின்னியல் முறைக் கழகம் வாக்காளர் புள்ளிவிவரக் களஞ்சியத்தில் கண்டு பிடித்த குளறுபடிகளைப் பட்டியலிடும் ஆவனங்களின் பிரதிகளை பக்காத்தான் பேராளர்கள் வெளியிட்டனர்.

அவற்றின் கீழ் குறைந்தது ஒவ்வொரு முகவரியிலும் 100 வாக்காளர்களுடன் மொத்தம் 354 முகவரிகளில் 79,098 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

அதனால் சிறப்புக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரினர்.

தேர்தல் ஆணையம் ‘சந்தேகத்துக்குரிய’ 40,025 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது. ஆனால் அவற்றை அகற்றும் அதிகாரம் தனக்கு இல்லை என அது கூறுகிறது.

பிஎஸ்சி தனது இறுதி அறிக்கையை அடுத்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

TAGS: