ஏஜி அலுவலகம் வழக்குத் தொடர மறுப்பதாக எம்ஏசிசி பழி போடுகிறது

எம்ஏசிசி தனது பார்வைக்குக் கொண்டு வரப்படும் எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் விசாரிக்கிறது. ஆனால் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவற்றை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல ஏஜி என்ற சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் மறுக்கிறது.

“எம்ஏசிசி புலனாய்வு செய்யாத விவகாரம் ஏதும் இருந்தால் என்னிடம் காட்டுங்கள். நாங்கள் விசாரிக்காத விவகாரம் என ஒன்று கூட கிடையாது,” என அதன் துணை ஆணையர் (நடவடிக்கைகள்) முகமட் சுக்ரி அப்துல், ஷா அலாமில் கருத்தரங்கு ஒன்றில் கூறினார்.

“பிரச்னை இதுதான். விவகாரங்கள் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என பலர் விரும்புகின்றனர். ஆனால் நீங்கள் அந்த விஷயத்தை என்னிடம் கேட்டால் “நீங்கள் தவறான மனிதரிடம் வினவுகின்றீர்கள்  என நான் சொல்வேன்.”

“நாங்கள் பல வழக்குகளை டிபிபி-யிடம் பரிந்துரை செய்துள்ளோம். எங்களைப் பொறுத்த வரையில் அவை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவதற்கு தகுதியானவை. ஆனால் டிபிபி என்ற அரசாங்க வழக்குரைஞர் அவற்றுக்கு போதுமான ஆதாரம் இல்லை எனக் கருதுகிறார். ஆகவே நாங்கள் என்ன செய்ய முடியும்?” என சுக்ரி கருத்தரங்கு பங்கேற்பாளர்களிடம் கூறினார். அப்போது lawan (சண்டை) என கூட்டத்தினர் பலத்த குரலில் பதில் அளித்தனர்.

சுக்ரி சோகம் கலந்த புன்னகையுடன் மறு மொழி அளித்தார்: “எப்படிச் சண்டை போடுவது? எம்ஏசிசி -யிடம் வழக்குத் தொடரும் அதிகாரம் இல்லை.”

எல்லாம் ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்தது

எம்ஏசிசி அரசியல் தலையீட்டிலிருந்து விடுபட்டுள்ளது என்பதையும் ஊழல் அரசியல்வாதிகளை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறது என கூட்டத்தினரை நம்ப வைப்பதற்கு சுக்ரி பெரும் முயற்சி செய்தார்.

அவரது விளக்கத்தை தாங்கள் ஏற்றுக் கொண்டது போல கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மலாய் நாளேடான சினார் ஹரியான் ஏற்பாடு செய்திருந்த அந்தக் கருத்தரங்கின் கருப் பொருள் “அரசியல் ஊழல்: உண்மை நிலை அல்லது எண்ணம்” என்பதாகும்.

“என் அதிகாரிகளும் நானும் எங்கள் மனச்சாட்சிக்கு ஏற்ப இயங்கினால் நாங்கள் அனைவரையும் கைது செய்வோம்! ஆனால் நாங்கள் அதனைச் செய்ய முடியாது. காரணம் குற்றச்சாட்டுக்கள் ஆதாரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர உணர்வுகள் அடிப்படையில் அல்ல,” என்றார் சுக்ரி.

அப்போதும் கூட்டத்தினர் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

TAGS: