கடந்த பொதுத்தேர்தலுக்கு முன் பாரிசான் ஆட்சியில் சிலாங்கூர் மக்களுக்குத் தவறு செய்துவிட்டதாக ஒப்பு கொண்டுள்ள சிலாங்கூர் அம்னோவின் துணைத்தலைவர் டத்தோ நோ ஒமார், பாரிசானின் தவறுகளுக்கு எந்தப் பரிகாரமும் வழங்காமல், முழு பலியையும் முன்னால் மந்திரி புசார் கிர் தோயோவின் மீது போட்டு இம்மாநில மக்களை ஏமாற்றுவதில் குறியாகவுள்ளார் என்றார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
அம்னோ உண்மையாகத் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்பதாக இருந்தால் முதலில் இவர் தனது பொறுப்புகளிலிருந்து முற்றிலும் விலக்க வேண்டும். ஆனால், தன் ஆட்சியில் சிலாங்கூருக்கான அடுத்த மந்திரி புசாராக அல்லவா அம்னோ அவரை தயார்படுத்தி வருகிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்.
மூன்று இனமும் இணைந்து வாங்கிய சுதந்திரக் கோட்பாடுகளுக்குச் சற்றும் மதிப்பளிக்காமல், மலாய் அல்லாத மற்றமொழிப்பள்ளிகளை மூடவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரலெழுப்பிய இவரின் விஷமத்தனத்தை இச்சமுதாயம் மன்னிப்பதாக இல்லை என்றாரவர்.
இந்நாட்டின் பல சமய நெறிமுறைகளுக்குச் சற்றும் மதிப்பளிக்காமல் ஷா ஆலாம் செக்சஷன் 19 ஆலய விவாகாரத்திற்கு மாற்று இடம் வழங்கிய இம்மாநில அரசைக் கண்டித்து வெட்டிய மாட்டுத்தலையுடன் ஊர்வலம் வந்து இந்தியர்களுக்கும், இந்து மததிற்கும் எதிராக ஊளையிட்ட, வசைமாரி பொழிந்த அம்னோக்காரர்களுக்கு சட்ட உதவி வழங்கிய இவரும், பாதகர்களின் செயலை ஆதரித்து ஆரத்தழுவிக் கொண்ட உள்துறை அமைச்சர் ஹிசாமுடின் செயல்கள் பாரிசான் திருந்திவில்லை என்பதற்கு நல்ல சான்றாகும் என்பதை சேவியர் நினைவுறுத்தினார்.
மிட்லேண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி கட்டடத்திற்கான நிலம் தொடங்கி, செமிஞ்சி ஸ்ரீ நான்டிங், ஜிஞ்ஜாரோம் மகா மாரியம்மன், டிங்கில் கோத்தா வாரிசான் கோவில், களும்பாங் சிவன் ஆலயம், புக்கிட் பொருந்தோங் சீக்கிய ஆலய விவகாரம், ஸ்ரீ அண்டலாஸ் பண்டார் புத்ரா ஆலயம் வரை நில விவகாரங்களுக்குத் தீர்வுக்காண முட்டுகட்டையாக இருக்கும் அம்னோ தலைவர்களா திருந்தி விட்டார்கள் என்று கேள்வி எழுப்பினார் சேவியர்.
சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் அரசு மக்களுக்கு வழங்கும் இலவசக் குடிநீரைத் தடுக்க ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட விதி முறைகளையும் மீறி, அம்னோ தலைவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்குக் குடிநீர் வினியோகத்தில் ஏகபோக உரிமை வழங்கி வரும் அம்னோ, மக்கள் விரோதக் கொள்கைகளிலிருந்து சற்றும் திருந்த வில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
சுபாங் ஆர்ஆர் ஐ தோட்டம் மேம்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுவதால், அங்கு வேலை செய்பவர்கள் தங்கள் குடும்பங்களை விட்டு மற்ற மாநிலங்களுக்கு மாற்றலாகி போவதை விரும்பவில்லை. அவர்கள் குடும்பத்துடன் இங்கேயே இருக்கச் சிறு நிலம் ஒதுக்கவோ, வேலை ஓய்வை எதிர் நோக்கியுள்ள பலர், சிறிது காலம் அருகிலுள்ள இடங்களில் பணி புரியவோ அனுமதிக்காத தொழிலாளர் விரோதப் போக்கினை இன்றும் பின்பற்றும் அம்னே எவ்வகையில் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்கிறது. இவர்களால் எப்படி இம்மாநில மக்களுக்கு நன்மை கிட்டும் என்று சேவியர் மேலும் வினவினார்.
ஏற்கனவே, கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயா போன்றப் பெரிய நிலப்பரப்புகளை மத்திய அரசிடம் தாரை வார்த்து விட்ட அம்னோ, இப்பொழுது, சிலாங்கூர் ஏழ்மை ஒழிப்பு அறவாரியத்துக்கு ஒதுக்கிய நிலத்தை மலாக்கா மாநிலத்திற்க்கு கைமாற்றிவிட முனைந்துள்ளது போன்று, பல நில மற்றும் சொத்து மாற்றங்களின் வழி இம்மாநிலத்தை, இம்மாநில மக்களின் செல்வ வளத்தைப் பல கோணங்களில் சுருட்டிவரும் ஓர் இயக்கத்தின் துணைத்தலைவரான டத்தோ நோ ஒமாரின் கூற்று மிக வேடிக்கையாகவுள்ளது என்று அவர் இடித்துரைத்தார்.
பாரிசான் தலைவர்கள் உண்மையாக அவர்களின் தவறுகளுக்கு வருந்துவதாக இருந்தால் இப்பொழுதும் அவர்களின் தவறுகளைத் திருத்திக்கொள்ள முன் வரவேண்டும். செய்த தவறுகளுக்குப் பொறுப்பேற்றுப் பதவி துறக்க வேண்டும். அதைவிடுத்து மக்களின் மறதியைத் தங்கள் ஏமாற்றுதன அரசியலுக்கு முதலீடாகப் பயன்படுத்த முயற்சிக்க கூடாது என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.