ஹிண்ட்ராப்-பைச் சந்திப்பது மீது அன்வார் இன்னும் முடிவு செய்யவில்லை

அடுத்த பொதுத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால் ஏழ்மையில் உள்ள இந்திய சமூகத்தின் நிலையை உயர்த்துவதற்கான பக்காத்தான் ராக்யாட்டின் 100 நாள் திட்டத்தை விளக்குமாறு அந்த எதிர்த்தரப்புக் கூட்டணிக்கு ஹிண்ட்ராப் விடுத்துள்ள அழைப்பு மீது பிகேஆர் மூத்த  தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்னும் முடிவு செய்யவில்லை.

“நான் அது பற்றி கட்சியுடன் விவாதிப்பேன்,” என ஷா அலாமில் உள்ள மாநிலச் செயலகத்தில் மலேசிய, இந்தோனிசிய மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்திய பின்னர் அன்வார் நிருபர்களிடம் கூறினார்.

பக்காத்தான் ராக்யாட் கொள்கைகளை எடுத்துக் கூறுவதற்கு வருமாறு ஹிண்ட்ராப் தலைவர் பி உதயகுமார் கடந்த புதன்கிழமை அன்வாருக்கு, டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்கும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

அது ஹிண்ட்ராப்பின் 18 அம்சக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள பக்காத்தான் விரும்புவதைப் பொறுத்துள்ளது என உதயகுமார் சொன்னார். பக்காத்தான் ராக்யாட்டை ஹிண்ட்ராப் அங்கீகரிக்கிறதா இல்லையா என்பதையும் அது முடிவு செய்யும் என்றார் அவர்.

யோசனை கூறப்பட்டுள்ள ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணியை ஹிண்ட்ராப் ஆதரிக்குமா இல்லையா என்பதையும் அந்தச் சந்திப்பு முடிவு செய்யும் என்று உதயமுமார் குறிப்பிட்டுள்ளார்.