“இன, சமய உணர்வுகளை தூண்ட முயலும்” அம்னோவைத் தோற்கடிக்க லிம் திட்டம்

பாயான் முத்தியாரா பள்ளிவாசல் நில விவகாரத்தில் “இன, சமய உணர்வுகளைத் தூண்டி விட” முயலும் பினாங்கு அம்னோவுக்கு எதிராக தீவிரமாக எதிர்த் தாக்குதல் தொடுக்க பினாங்கு மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அந்தப் பிரச்னையில் மலாய் முஸ்லிம் சமூகத்திடம் அம்னோ கூறும் பொய்களை மக்களிடம் விளக்குவதற்காக டிஏபி, பாஸ், பிகேஆர் ஆகியவை பினாங்கின் ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் என முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

அம்னோ இனவாதக் கட்சி என தாம் வலியுறுத்துவதை நியாயப்படுத்திய அவர், அந்தக் கட்சி பள்ளிவாசல் நிலம் ஒன்று “காணாமல் போனது” பற்றி மட்டும் கூச்சல் போடுகிறது என்றார்.

மற்ற சமய வழிபாட்டு மய்யங்களுக்கான நிலமும் இருப்பதை அம்னோ அலட்சியம் செய்து விட்டது என்றும் லிம் குறிப்பிட்டார்.

41.6 ஹெக்டர் பரப்புள்ள பாயான் முத்தியாரா நிலத்துக்கான 2006ம் ஆண்டு வளர்ச்ச்சித் திட்டத்தை ஊராட்சி மன்றம் அங்கீகரித்துள்ளதாக அம்னோ கூறுவதையும் அவர் நிராகரித்தார்.

“அந்தத் தகவல் முழுமையானது அல்ல. அந்த நிலம் காணாமல் போகவில்லை என்பதை நிரூபிப்பதற்கு போதுமான எல்லா ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. நாங்கள் அவற்றை நீதிமன்றத்தில் காட்டுவோம்,” என புதிதாக கட்டப்பட்டுள்ள மாநில ஷாரியா நீதிமன்ற வளாகத்துக்கு வருகை அளித்த பின்னர் லிம் நிருபர்களிடம் கூறினார்.

அம்னோ மீது அவதூறு வழக்குப் போடப்படும்

பாயான் முத்தியாரா பள்ளிவாசல் நிலம் குற்றச்சாட்டுக்களை அம்னோ தொடர்ந்து எழுப்பி வருவதாலும் அதற்கு அதன் ஊடகக் கரங்கள்-குறிப்பாக உத்துசான் மலேசியாவும் டிவி3-யும் உதவி செய்து வருவதாலும்- அந்தக் கட்சிக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடருவது என மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக லிம் மேலும் தெரிவித்தார்.

“மாநில அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்காக அந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. ஆகவே அம்னோவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையைத் தொடருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை,” என்றார் அவர்.

“பள்ளிவாசல் நிலம் ‘காணாமல் போனதாக’ அம்னோ எப்படிப் பொய் சொல்கிறது என்பதை மக்களிடம் விளக்குவதற்காக நாங்கள் மாநிலத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் செல்வோம்.”

“இனவாத அம்னோ முஸ்லிம் அல்லாதவர்கள், மலாய்க்காரர் அல்லாதவர்கள் ஆகியோருடைய பிரச்னைகளுக்கு போராடவில்லை என்பதை நாங்கள் அவர்களிடம் சொல்வோம்,” என அவர் வலியுறுத்தினார்.

பள்ளிவாசல் நிலத்தை விற்கப்பட்டது தொடர்பில் மாநில அரசாங்கம் மீது கேள்வி எழுப்பியதற்காக தம்மை ‘இனவாதி’ என முத்திரை குத்த வேண்டாம் என பினாங்கு அம்னோ இளைஞர் தலைவர் ஷேக் ஹுசேன் மைதின் , லிம்-மிடம் கூறியிருந்தார்.

பாயான் முத்தியாரா மேம்பாட்டாளரான Ivory Properties Group Bhd அந்த நிலத்துக்கான திட்டங்களை பினாங்கு நகராட்சி மன்றத்திடம் இன்னும் சமர்பிக்கவில்லை என்றும் பினாங்கு முதலமைச்சர் தெரிவித்தார்.

பள்ளிவாசல் ஒன்றுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் மனைகள் ஒதுக்கப்படும் என Ivory Properties உறுதி அளித்துள்ளதாக அவர் சொன்னார்.

அந்த நகராட்சி மன்றத்தின் அங்கீகாரத்துக்குச் சமர்பிக்கப்படும் எந்த மேம்பாட்டுத் திட்டமும் பள்ளிக்கூடங்களுக்கும் பள்ளிவாசலுக்கும் நிலம் ஒதுக்கப்படுவதை கட்டாயமாக்கும் நகராட்சி மன்ற வழிமுறைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என அவர் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார்.

“என்றாலும் அந்தத் தகவலை டிவி3-யும் உத்துசானும் வெளியிடவே இல்லை. ஆகவே பாஸ், பிகேஆர் ஒத்துழைப்புடன் நாங்கள் தீய நோக்கம் கொண்ட அம்னோ பொய்களை பற்றி விவரமாக எடுத்துச் சொல்வோம்,” என்றார் லிம்.