லினாஸ் அரிய மண் தொழில் கூடத்தைத் தான் எதிர்ப்பதை நிரூபிக்க மசீச பிஎன்-னிலிருந்து விலக வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார்.
லினாஸ் தொழில் கூடத் திட்டம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என மசீச தலைவர் விடுத்துள்ள வேண்டுகோளை மலேசியர்கள் நம்பவில்லை என்பதால் மசீச பிஎன்-னிலிருந்து விலகி பாஹாங்கில் 2.3 பில்லியன் ரிங்கிட் செலவில் மேற்கொள்ளப்படும் அந்தத் திட்டம் கைவிடப்படும் வரை மீண்டும் சேரக் கூடாது என லிம் இன்று விடுத்த அறிக்கை கேட்டுக் கொண்டது.
அந்த விவகாரம் மீது மசீச நிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது, அடிக்கடி முரண்படுகின்ற நம்ப முடியாத அதன் போக்கை அது காட்டுவதாக அவர் சொன்னார். பொதுத் தேர்தலில் வாக்குகளைக் கவருவதற்காக மேற்கொள்ளப்படும் தந்திரமாகவும் அது இருக்கலாம் என்றார் லிம்.
“மசீச-வின் நேர் மாற்றத்தில் சந்தர்ப்பவாதம் தெரிகிறது. வாக்குகளை வாங்குவதற்கு விரக்தி அடைந்த நிலையில் மேற்கோள்ளப்படும் கொள்கை பிடிப்பு இல்லாத முயற்சியாகவும் தோன்றுகிறது.”
“லினாஸ் தொழில் கூடம் மூடப்பட்ட பின்னரே மசீச, பிஎன்-னில் சேரும் என அறிவிப்பதற்கு டாக்டர் சுவா சொய் லெக்-கிற்குத் துணிச்சல் வருமா?” என லிம் வினவினார்.
அந்தத் தொழில் கூடம் மூடப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதில் கூட அது, தான் முதுகெலும்பு இல்லாத கொள்கை இல்லாத கட்சி என்பதை காட்டி விட்டது என்றும் அவர் வாதாடினார்.
“அந்தத் தொழில் கூடம் பாதுகாப்பானதா இல்லையா என்பது இப்போது முக்கியமல்ல என மசீச தலைவர் சொல்வது எது தவறு எது சரி என்பது ஒரு பொருட்டல்ல எனக் கருதுவதைப் போல உள்ளது.”
வரும் பொதுத் தேர்தலில் “தனது சொந்த தோரணத்தின் கீழ் நிற்பதின்” மூலம் மசீச தன்னை மெய்பித்துக் கொள்வதற்கு இதுவே ‘கடைசி வாய்ப்பு’ என்றும் லிம் கூறினார்.
அரசாங்கம்’ மக்களுடைய கருத்துக்களை அலட்சியம் செய்ய முடியாது’ என்ற அடிப்படையில் லினாஸ் தொழில் கூடத்தை ரத்துச் செய்ய வேண்டும் என சுவா விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து லிம் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.