ஹிண்ட்ராப் உதயகுமாரிடமிருந்து விலகி நிற்கிறது

ஹிண்ட்ராப் தலைவர்கள் மனித உரிமைக் கட்சியின் தலைவர் பி உதயகுமார் விடுத்துள்ள அறிக்கைகளிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டுள்ளனர். அந்த அறிக்கைகள் அவரது “தனிப்பட்ட கருத்துக்கள்” எனக் கூறி அவற்றை அவர்கள் நிராகரித்தனர். இதனால் ஹிண்ட்ராப் அமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது தெரிகிறது.

பக்காத்தான் ராக்யாட் புத்ராஜெயாவைக் கைப்பற்றுமானால் அதற்கு அடுத்த 100 நாட்களில் இந்திய சமூகத்துக்கு செய்வதற்கு அது என்ன திட்டம் வைத்துள்ளது என்பதை  ஏப்ரல் 22ம் தேதி கிள்ளான் செட்டி திடலில் விளக்குவதற்கு வருமாறு மூன்று நாட்களுக்கு முன்பு அந்த எதிர்த் தரப்புக் கூட்டணியின் தலைவர்களுக்கு ஹிண்ட்ராப் சார்பில் உதயகுமார் அறைகூவல் விடுத்திருந்தார்.

“அந்த தன்மூப்பான அறிக்கைகளும் நடவடிக்கைகளும் ஹிண்ட்ராப்பின் உண்மையான நிலை குறித்து பொது மக்களுக்குத் தவறான தகவல்களை வழங்குவதால் அது குறித்து ஹிண்ட்ராப் தேசிய தலைமைத்துவம் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது,” என அதன் தேசியச் செயலாளர் பி ரமேஷ் இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.

ஒதுக்கப்பட்ட மலேசிய  இந்தியர்கள் பற்றிய தங்களது கொள்கைகளை பகிரங்கமாக அறிவிக்குமாறு பக்காத்தான் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கும் விருப்பத்தை ஹிண்ட்ராப் பாராட்டினாலும் “ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி, தேசிய ஒருங்கிணைப்பாளர் டபிள்யூ சம்புலிங்கம், தேசிய ஆகோசகர் என் கணேசன் அல்லது தேசிய ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் யாருடனும் கலந்து கொள்ளாமல் அந்த முடிவை உதயகுமாரே முழுக்க முழுக்க எடுத்துள்ளார்,” என அவர் சொன்னார்.

“அதனால் அந்த அறிக்கை அவரது தனிப்பட்ட அறிக்கை என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை,” என்றார் ரமேஷ்.

“அத்துடன் செட்டி திடல் போன்ற திறந்த வெளியில் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்குமாறு பக்காத்தான் தலைவர்களைக் கேட்டுக் கொள்வது ஒரு விஷயத்தை வலியுறுத்துவதற்கு பொருத்தமற்ற நாகரிகமற்ற வழி என ஹிண்ட்ராப் கருதுகிறது.”

ஹிண்ட்ராப் எடுக்கும் நன்கு திட்டமிடப்படாத எந்த நடவடிக்கையும் நிலையும் அந்த இயக்கத்தின் போராட்டத்துக்கு “பெரும் பாதகத்தை” கொண்டு வரும் என்றும் ரமேஷ் வலியுறுத்தினார்.

மனித உரிமைக் கட்சியின் இடைக்காலத் தலைமைச் செயலாளரான உதயகுமார், ஹிண்ட்ராப்பின் சட்ட ஆலோசகர் ஆவார். ஆனால் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவில் அங்கம் பெறவில்லை.

ஹிண்ட்ராப் தலைவர்கள் உதயகுமாருடனான தங்களது கருத்து வேறுபாடுகளை “மூடி வைத்திருந்தனர்”. ஆனால் நிலைமை ஒர் எல்லையைத் தொட்டு விட்டதால் அவர்கள் தங்கள் நிலையை பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என ரமேஷ் தெரிவித்தார்.

தன்மூப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உதயாவுக்கு அறிவுரை

இதனிடையே இப்போது சுயமாக நாடு கடந்து வாழும் ஹிண்ட்ராப் அதிகாரப்பூர்வத் தலைவர் பி வேதமூர்த்தி அந்த விவகாரம் மீது தமது மூத்த சகோதரரான உதயகுமாரிடமிருந்து கருத்து வேறுபாடு கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.

“இத்தகைய ஜனநாயகத்துக்கு புறம்பான நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து ஏற்றுக் கொண்டால் ஏழ்மையிலுள்ள இந்தியர்களை தேசிய மேம்பாட்டு நீரோடைக்குள் கொண்டு வரவும் நடப்பு அரசாங்கத்தின் இனவாத, சமய மேலாதிக்க கொள்கைகளை  முடிவுக்குக் கொண்டு வரவும் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு கடுமையான தடைகள் ஏற்படுவது திண்ணம்,” என்றும் ரமேஷ் குறிப்பிட்டார்.

“நாம் இந்த நிலையை இப்போது சரி செய்யா விட்டால், நமது போராட்டத்தின் நோக்கம் தோல்வி அடைந்து விடும். நாம் அது நிகழ அனுமதிக்கக் கூடாது.”

ஹிண்ட்ராப் அமைப்புடன் ஆலோசனை கலக்காமல் அதன் ஒப்புதல் இல்லாமல் ஹிண்ட்ராப் பெயரில் தன்மூப்பான நடவடிக்கைகளை எடுப்பதை தவிர்க்குமாறு ரமேஷ் உதயகுமாரைக் கேட்டுக் கொண்டார்.

“ஏழை இந்தியர்களுடைய போராட்டத்துக்கு உதயகுமார்  ஆற்றியுள்ள பங்கை மறுக்க முடியாது. என்றாலும் ஹிண்ட்ராப் அனைத்துலக நிலையில் சிவில் உரிமைப் போராட்ட அமைப்பாக முதிர்ச்சி அடைந்துள்ளதை உணருவதற்கு அவர் தவறி விட்டார்.”

“அதே வேளையில் உதயகுமார் தனிப்பட்ட ரீதியில் தோற்றுவித்த சிறிய எண்ணிக்கையிலான ஆதரவாளர்களைக் கொண்ட மனித உரிமைக் கட்சியின் பெயரில் அவர் எடுக்கும் எந்த நிலைக்கும் விடுக்கும் எந்த அறிக்கைக்கும் நாங்கள் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்.”

TAGS: