முன்னாள் சிஐடி தலைவர்: வேண்டும் நயம்,வேண்டாம் முரட்டுத்தனம்

குற்றச் செயல்களை எதிர்ப்பதில் போலீசாரிடம் அடிப்படை மாற்றம் தேவை என்பதை வலியுறுத்திய குற்றப் புலன்விசாரணைத்துறை முன்னாள் இயக்குனர் முகம்மட் ஸாமான் கான், அவர்கள் நயமாக நடந்துகொள்ள வேண்டுமே தவிர முரட்டுத்தனத்தைக் கடைப்பிடிக்கக்கூடாது என்றார்.

“சந்தேகப் பேர்வழிகளை நோக்கி சத்தம்போடுவது கூச்சலிடுவது எல்லாம் இப்போது எடுபடாது. அந்த வழியில் உங்களுக்குத் தடயங்கள் கிடைக்கலாம். ஆனால் அது முறையல்ல, நீதிமன்றங்களும் அதை ஏற்பதில்லை.” நேற்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் கல்விமான்கள், போலீஸ் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் எனச் சுமார் 20 பேர் கலந்துகொண்ட ஒரு கலந்துரையாடலில் ஸமான் கான் இவ்வாறு கூறினார்.   

முன்னாள் மனித உரிமை ஆணையர்கள் சங்கமான ‘ப்ரோஹாம்’ ஏற்பாடு செய்திருந்த அந்தக் கலந்துரையாடல், போலீசார்  விசாரணை முறைகளை மேம்படுத்திக்கொள்ள வகைசெய்யும் வழிமுறைகள்மீது கவனம் செலுத்தியது.

பொதுமக்கள் தங்கள் உரிமைகளை அறிந்தவர்களாக, சட்டம் பற்றித் தெரிந்தவர்களாக இருப்பதால் போலீசார் விசாரணை செய்வதில் கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றவர் எச்சரித்தார்.

“பொதுமக்கள் தங்கள் உரிமைகளையும் போலீசார் எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பதையும் அறிந்தவர்களாக உள்ளனர். அவர்களிடம் முரட்டுத்தனத்தைக் காண்பித்து அச்சுறுத்திய காலமெல்லாம் மலையேறிவிட்டது.”

அதனால் சட்டம் பற்றியும் போலீஸ் நடைமுறைகள் பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருப்பது அவசியம்; ஆனால் போலீஸ் படையினர் அதில் தேர்ந்தவர்களாக இல்லை என்பது தமக்குக் கவலை அளிப்பதாக அவர் சொன்னார். தாம் பார்த்தவரை விசாரணை முறைகளில் நேர்த்தி இல்லை, போதுமான  பயிற்சி இல்லை, புதிதாக சேர்க்கப்பட்டோரில் தரமும் இல்லை என்றாரவர். 

“அடிப்படை பயிற்சி முடிந்து கான்ஸ்டபிள் ஆகின்றவர்கள் அதன் பின்னர்  பணி ஓய்வுவரை பயிற்சிக்கே செல்வதில்லை.”

போலீசாருக்குக் குறிப்பாக விசாரணை அதிகாரிகளுக்குக் கூடுதல் பயிற்சிகள் தேவை என்று ஸமான் கான் வலியுறுத்தினார்.  

போலீசார் கருணை காட்டிடவும் வேண்டும். குற்றவாளிகளிடம் இல்லை என்றாலும் அவர்களின் குடும்பத்தாரிடம் கருணையுடன் நடந்துகொள்ளலாம் என்றாரவர். கருணை காட்டியதன் பயனாக சில வழக்குகளுக்குத் தாம் தீர்வுகாண முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைக் காலமாக போலீசார் நடத்தை குறித்து சட்ட வல்லுனர்களும் சமூக ஆர்வலர்களும் முன்னாள் கைதிகளும் பலவாறாகக் குறை சொல்லி வருகின்றனர்.

திருடுகிறார்கள், விசாரணைகளை முறையாகச் செய்வதில்லை, அதிகாரத்தை மீறி நடக்கிறார்கள், துன்புறுத்துகிறார்கள் என்பன போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் போலீஸ் படையில் பல சீர்திருத்தங்கள் தேவை என்று ஸமான் கான் உள்பட பல முன்னாள் போலீஸ் அதிகாரிகளும் மனித உரிமைப் போராளிகளும் சட்ட வல்லுனர்களும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

TAGS: