“‘வெளியுறவு அமைச்சர் அனீபா அமின், சபாவில் வெளியிடப்படும் அதிக ஆதாயத்தைக் கொண்ட வெட்டுமர அனுமதிகள் மூலம் ரகசியமாக நன்மை அடைந்தவர் எனப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ”
அதற்கு அவர் தமது மூத்த சகோதரரும் முதலமைச்சருமான மூசா அமானுக்கு நன்றி சொல்ல வேண்டும் என சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
பல மில்லியன் ரிங்கிட் பெறும் வெட்டுமர அனுமதிகளை சபா முதலமைச்சர் தமது சகோதரருக்கு ஊழல் வழிகளில் வழங்கியிருப்பதாக எம்ஏசிசி புலனாய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர் என தகவல்களை அம்பலப்படுத்தும் அந்த இணையத் தளம் கூறியது.
அது தொடர்பான எம்ஏசிசி ஆவணங்கள் வெளியில் கசிந்து தனக்குக் கிடைத்துள்ளதாகவும் அது தெரிவித்தது.
2008ம் ஆண்டு ஹாங்காங்கிலிருந்து 16 மில்லியன் ரிங்கிட்டை வெளியில் கடத்திச் செல்ல முயன்ற ஒர் ஏஜண்டும் மூசா அமானின் பேராளருமான மைக்கல் சியா பிடிபட்ட பின்னர் வெட்டுமர ஊழல் மீது எம்ஏசிசி மேற்கொண்ட புலனாய்வின் ஒரு பகுதி அந்த ஆவணங்கள் என்றும் சரவாக் ரிப்போர்ட் குறிப்பிட்டது.
“என்றாலும் அந்த விசாரணைகள் மிகவும் உயர்ந்த நிலையில் தடுக்கப்பட்டன. அதன் முடிவுகள் இன்று வரை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.”
“அந்த சகோதரர்களின் உறவினரும் சக சபாக்காரருமான சட்டத் துறைத் தலைவருமான அப்துல் கனி பட்டெய்ல் அந்தக் குற்றச்சாட்டுக்களை அனுமதிக்க மறுத்து விட்டார். அந்த விவகாரம் மீது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் கண்களை மூடிக் கொண்டு விட்டார்.”
அமான் குடும்பத்துடன் அணுக்கமான தொடர்புள்ள அப்துல் கனி அந்த விவகாரத்தை தொடருவதற்கு அனுமதிக்கவில்லை என்றும் அந்த சரவாக் ரிப்போர்ட் கூறிக் கொண்டது.
“உண்மையில் எம்ஏசிசி சபாவில் மேற்கொண்ட மிகப் பெரிய விரிவான விசாரணை முழுவதையும் முடக்கி வைப்பதற்கு அந்த ஊழல் தடுப்பு அமைப்பை கட்டாயப்படுத்தி விட்டார். அந்த விவகாரத்தில் மிக உயர்ந்த நிலையில் மாநிலத்திலிருந்து ஊழல் வழியாக பில்லியன் கணக்கான ரிங்கிட் உறிஞ்சப்பட்டு விட்டது.”
எம்ஏசிசி விசாரித்த பல “வலுவான வழக்குகளை” “போதுமான ஆதாரம் இல்லை எனக் கூறி நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் மறுத்து விட்டதாக கடந்த வாரம் எம்ஏசிசி துணை ஆணையாளர் (நடவடிக்கை) முகமட் சுக்ரி அப்துல் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.