ஹிண்ட்ராப் பெர்சே 3.0க்கு ஆதரவளிக்கிறது

இந்து உரிமைப் போராட்ட அமைப்பான ஹிண்ட்ராப், பெர்சே 3.0 இன் முயற்சிகளையும் ஏப்ரல் 28ம் தேதி திட்டமிடப்பட்டுள்ள பேரணியையும் வரவேற்கிறது.

அந்தப் பேரணி “மாற்றங்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்” என்றும் அது ஹிண்ட்ராப்-பின் சொந்த நோக்கங்களுக்கு ஏற்ப அமைந்துள்ளது என்றும் அதன் தேசிய ஆலோசகர் என் கணேசன் தெரிவித்தார்.

“மலேசியாவில் தேர்தல் நடைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்  பெர்சே முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம்,” என்றார் அவர்.

“இந்திய சமூகம் ஒரங்கட்டப்படுவதற்கு வழி வகுத்த இனவாத, திசை திருப்பப்பட்ட முறைகள் சரி செய்யப்படுவதற்கு வழிகோலக் கூடிய அடிப்படை மாற்றங்களை நாடும் ஹிண்ட்ராப்-பின் தலையாய நோக்கங்களுக்கு ஏற்பவும் அது அமைந்துள்ளது.”

அந்த எதிர்வரும் பேரணி “வரலாறு எங்களிடையே மெதுவாக வேலை செய்யத் தொடங்கியுள்ளது,” என கணேசன் இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.

என்றாலும் அந்த இயக்கத்தின் “செயல்பாட்டில் சில தவறான சிந்தனைகள்” குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

நடப்பு முறை இந்திய சமூகம் உட்பட சிறுபான்மை இனங்களுடைய வாக்குரிமை வலிமை இழப்பதற்கு வழி வகுப்பதாக அவர் சொன்னார்.

“நமது ஜனநாயக நடைமுறைகளின் நேரடி விளைவாகவே சிறுபான்மையினருடைய வாக்குரிமை வலிமை இழக்கும் அடிப்படைப் பிரச்னை உருவாகியுள்ளது.”

“ஆனால் அது காரணமல்ல என பலர் வாதாடலாம். ஆனால் இந்த நாட்டில் பெரும்பாலான சமூக பொருளாதார நிலைகளில் ஏன் எல்லா சிறுபான்மை இனங்களும் மோசமாக இருப்பதற்கு காரணம் என்ன என்பதை அவர்கள் விளக்கத் தவறி விட்டனர்,” என்றார் கணேசன்.

அடிப்படை சீர்திருத்தத்துக்கு அப்பாலும் செல்ல வேண்டும்

பெர்சே “அந்த கடுமையான பலவீனங்களை கவனத்தில் கொண்டு உண்மையான சீர்திருத்த உணர்வு அடிப்படையில் அவற்றை தீர்க்கும்” என ஹிண்ட்ராப் நம்புவதாக அவர் மேலும் சொன்னார்.

“சீர்திருத்தம் என்பது சிறந்த நடைமுறைகளை மட்டும் சார்ந்ததல்ல. சிறந்த முறை சம்பந்தப்பட்டதாகும்,” என்றார் கணேசன்.

“சிறுபான்மை இனங்கள் தங்களது சொந்தக் குரலைப் பெற்றிருக்கவும் மாறுபட்ட தங்கள் கவலைகளை ஒருங்கிணைத்து அவற்றுக்கு தீர்வு காணவும் விவாதங்கள் நிறைந்த ஜனநாயக அடிப்படைக்கு வழி வகுக்கவும்”அனுமதிக்கும் முறையே உண்மையான ஜனநாயக முறையாகும்.”

“அவை போன்ற முன்னேற்ற இலட்சியங்களையும் சீர்திருத்தங்கள் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்,” என்றும் கணேசன் குறிப்பிட்டர்.

கோலாலம்பூரில் ஏப்ரல் 28ம் தேதி மெர்தேக்கா சதுக்கத்தில் பெர்சே 3.0 நடைபெறும் என கடந்த செவ்வாய்க்கிழமை பெர்சே 2.0ன் கூட்டுத் தலைவர் எஸ் அம்பிகா அறிவித்தார். ‘duduk bantah’ (குந்தியிருப்பு ஆட்சேபம்) என்பது பெர்சே 3.0ன் கருப்பொருளாகும்.

அஞ்சல் வாக்குகள் தேர்தல் குற்றங்கள், கறை படிந்த அரசியலுக்கு முடிவு கட்டுவது ஆகியவை உட்பட தேர்தல் சீர்திருத்தங்கள் சம்பந்தப்பட்ட தனது கோரிக்கைகளை தீர்க்க தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு தவறி விட்டதாக பெர்சே கூறிக் கொண்ட பின்னர் பெர்சே 3.0க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.