‘அனீபாவுக்கு எதிரான வெட்டுமரக் குற்றச்சாட்டுக்களை எம்ஏசிசி உறுதி செய்ய வேண்டும்’

சபா வெட்டுமர ஊழல் மீது  எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், தான் நடத்திய புலனாய்வில் வெளியுறவு அமைச்சர் அனீபா அமானும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம் வெளியிட்டுள்ள தகவலை அந்த ஊழல் தடுப்பு அமைப்பு உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.

அவ்வாறு கேட்டுக் கொண்ட சபா டிஏபி பிரச்சாரப் பிரிவுச் செயலாளர் சான் பூங் ஹின், அந்தக் குற்றச்சாட்டுக்கள் கடுமையானவை என்றார்.

“முதலாவதாக 16 மில்லியன் ரிங்கிட் கடத்தல் விவகாரம் பற்றிய கட்டுரையில் பல மில்லியன் ரிங்கிட் பெறும் வெட்டுமர அனுமதிகளை சபா முதலமைச்சர் தமது சகோதரர் அனீபாவுக்கு ஊழல் வழிகளில் வழங்கியிருப்பதாக எம்ஏசிசி புலனாய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.”

“என்றாலும் அந்த விசாரணைகள் மிகவும் உயர்ந்த நிலையில் தடுக்கப்பட்டன. அதன் முடிவுகள் இன்று வரை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன,” எனச் சான் சொன்னார்.

“அந்த சகோதரர்களின் உறவினரும் சக சபாக்காரருமான சட்டத் துறைத் தலைவருமான அப்துல் கனி பட்டெய்ல் அந்தக் குற்றச்சாட்டுக்களை அனுமதிக்க மறுத்து விட்டார் என்றும் அத்துடன் அந்த விவகாரம் மீது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் கண்களை மூடிக் கொண்டு விட்டார் என்றும் கூறப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

வெளியுறவு அமைச்சர் அனீபா அமின், சபாவில் வெளியிடப்படும் அதிக ஆதாயத்தைக் கொண்ட வெட்டுமர அனுமதிகள் மூலம் ரகசியமாக நன்மை அடைந்தவர் எனப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு தமது மூத்த சகோதரரும் முதலமைச்சருமான மூசா அமானுக்கு அவர் நன்றி சொல்ல வேண்டும் என சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம் அண்மையில் தகவல் வெளியிட்டது.

2008ம் ஆண்டு ஹாங்காங்கிலிருந்து 16 மில்லியன் ரிங்கிட்டை வெளியில் கடத்திச் செல்ல முயன்ற ஒர் ஏஜண்டும் மூசா அமானின் பேராளருமான மைக்கல் சியா பிடிபட்ட பின்னர் வெட்டுமர ஊழல் மீது எம்ஏசிசி மேற்கொண்ட புலனாய்வின் ஒரு பகுதி அந்த ஆவணங்கள் என்றும் சரவாக் ரிப்போர்ட் குறிப்பிட்டது.

அது தொடர்பான எம்ஏசிசி ஆவணங்கள் வெளியில் கசிந்து தனக்குக் கிடைத்துள்ளதாகவும் சரவாக் ரிப்போர்ட் தெரிவித்தது.

அந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மை என்றால் எம்ஏசிசி இது வரை மேற்கொண்டிராத பெரிய மிகவும் விரிவான புலனாய்வாகவே அது இருக்கும் எனச் சான் தெரிவித்தார். உயர்ந்த நிலையில் ஊழல் வழியாக பில்லியன் கணக்கான ரிங்கிட் சபா மாநிலத்திலிருந்து உறிஞ்சப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கருதுகிறார்.

“சரவாக் ரிப்போர்ட் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எம்ஏசிசி பதில் அளிப்பது மிகவும் அவசரமான அவசியமாகும். எம்ஏசிசி மூன்று நாட்களுக்கு பதில் அளிக்கா விட்டால் சபா டிஏபி அந்தக் குற்றச்சாட்டுக்களின் செல்லத்தக்கத் தன்மை குறித்து போலீசில் புகார் செய்யும்,” சான் தெரிவித்தார்.

TAGS: