இன்றைய நாளிதழ்களில் பி.டி.பி.டி.என் கடன்களை அகற்றி உயர்கல்விக்கான முழு செலவையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் நாடு பெரிய பொருளாதாரச் சிக்கலை எதிர்கொள்ளும் என்று பிரதமர் கூறியிருப்பதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி சற்றும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை என்று கூறுகிறார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
மேலும் சில தினங்களுக்கு முன் உயர்கல்வி அமைச்சர் காலிட் நோர்டின் விடுத்துள்ள அறிக்கைக்கும் பிரதமர் விடுத்துள்ள அறிக்கையிலும் காணப்படும் வேறுபாடுகள், உயர்கல்விக்கான பி.டி.பி.டி.என் கடன்களை அகற்றுவது மீது அம்னேவிற்கு உள்ள அதிருப்தியைக் காட்டுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்நாட்டின் மீது பற்று உள்ள எவரும் கல்வி போன்ற மனித மூலதானத்திற்கு செலவு செய்தால் நாடு பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் திவாலாகிவிடும் என்று மக்களைப் பயமுறுத்த மாட்டார். மாறாக ஊழல் நிறைந்த நிர்வாகத்தால் மட்டுமே நாடு திவாலாகிவிடும் என்ற உண்மையை உணர்ந்து அவர் கட்சியினரிடம் வலியுறுத்துவர்”, என்றாரவர்.
“கல்வி போன்ற சமூகங்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்படும் அரசுகள் திவாலாகிவிடும் எனும் பிரதமர் நஜிப் துன் ராசாக்கின் கூற்று எந்த அளவுக்குப் பொய்மையானது என்பதை சிலாங்கூர், பினாங்கு, மற்றும் இதர பக்காத்தான் மாநில அரசுகளின் நேர்த்தியான வரவு செலவு கணக்குகளைக் கவனித்தால் மக்களுக்குப் புரியும்”, என்றும் சேவியர் தெரிவித்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இம்மாநிலம் கல்வி போன்ற சமூக முதலீட்டு திட்டங்களுக்கும், இலவசக் குடிநீர், முதியோர் நலத்திட்டம், தாவாஸ், மருத்துவக் கட்டணம், சிறுதொழில் கடனுதவித் திட்டம், தோட்டப்புற பெண்களுக்குச் சிறுதொழில் கடனுதவித் திட்டம் போன்றப் பல திட்டங்களை அமல்படுத்த 50 கோடி ரிங்கிட்டுக்கும் மேலாக செலவிட்டிருக்கிறது. இருந்தும் அதன் நிதி கையிருப்பு சுமார் 40 கோடியிலிருந்து 190 கோடியாக உயர்ந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
உயர்கல்விக்குத் தேவைப்படும் 90 விழுக்காடு நிதியை மத்திய அரசு வழங்குவதாக கூறிய பிரதமர் பி.டி.பி.டி.என் மூலம் பெறப்படும் மீதமுள்ள 10 விழுக்காட்டை (கடனை) மட்டும் நீக்கிவிடுவதால் நாட்டுக்குப் பெரும் பொருதார சிக்கலா அல்லது அதனால் பயன்பெறும் பெரும்பாலான மாணவர்கள் பூமிபுத்ரா அல்லாதவர்கள் என்பதால் அம்னோவில் சிக்கலா என்பதனை தெளிவுபடத்த வேண்டும் என்று சேவியர் விளக்கம் கோரினார்.
மாநில அரசுகளின் அதிகாரத்தை மக்கள் கூட்டணி அரசு எடுத்துக்கொண்டால் அம்மாநிலம் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகித் திவாலாகி விடும் எனக் கடந்த பொது தேர்தலில் தேசியமுன்னணி பிரச்சாரம் செய்தது. ஆனால் இப்போது நான்கு ஆண்டுகளை மக்கள் கூட்டணி ஆட்சி நிறைவு செய்துள்ள வேளையில் இம்மாநில அரசுகள் பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி நிறைவு படுத்தியிருப்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
பொறுப்பற்ற ஊழல் நிறைந்த நிருவாகத்தை கொண்டிருக்கும் அரசு மட்டுமே நாட்டை திவாலாக்கிவிடும் என்பதற்கு பாரிசானின் ஆட்சிமுறையே தக்க சான்று என்றாரவர்.
சுதந்திரத்துக்கு முன்பே ஆசியாவின் பொருளாதாரத்தில் இளம் புலி எனப் பெயர் எடுத்திருந்த செல்வம் கொழிக்கும் இந்நாடு, பாரிசானின் 54 ஆண்டுக்கால ஆட்சிக்குப்பின் அவர்களே எல்லாவற்றுக்கும் நாடு திவாலாகி விடும், பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் என்று சொல்லும் நிலைக்கு இட்டுச் சென்றுவிட்டனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஆட்சியில் உள்ளவர்கள் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவது, நாட்டு பொருளாதாரத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் அவநம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
“ஆக, அவர்கள் இந்நாட்டைக் கைவிட்டு விட்டார்கள் என்பதற்கு இதுவே தக்க சான்றாகும். திவாலாகும் நிலையில் நாடு இருக்கிறது என்று கூறிக்கொண்டு எந்த முதலீட்டாளரை இவர்கள் இங்கே கொண்டுவர முடியும்? முதலீடு செய்யத்தான் யார் முன் வாருவார்கள்?”, என்று சேவியர் வினவினார்.
ஆக, பொருளாதாரத்தின் மீது பிரதமரும் அவரின் அமைச்சரவை சகாக்களும் தொடர்ந்து போட்டுவரும் பீடிகைகள் பாரிசான் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இந்நாட்டு மக்கள் மிகக் கடுமையான வரி விதிப்புகளுக்கும் விலை உயர்வுகளுக்கும் ஆட்படுவார்கள் என்ற உண்மையை மட்டும் மிகத் தெளிவாக உணர்த்துகிறது என்றாரவர்.
எதிர்க்கட்சி மாநில அரசுகளின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பிரதமரும் மற்ற பாரிசான் தலைவர்களும் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவது நாட்டுக்குப் பாதகமானதாக அமையும் என்பதால் அது கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும் என்றார் சேவியர் ஜெயக்குமார்.