“அம்னோவும் அதன் தோழர்களும் வீசுகின்ற அவமானத்தைத் தருகின்ற நிந்திக்கின்ற சொற்களை அவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.”
சீனர்கள் ஒதுங்கி நிற்கக் கூடாது என்கிறார் நஜிப்
லின் வென் குவான்: சீனர்கள் நெடுங்காலமாகவே தங்களது அன்றாட வாழ்க்கையில் சிறிது சிறிதாக மறைமுகமாக நுழைந்து விட்ட ஏற்றத் தாழ்வான சூழ்நிலைகளை கண்டு அச்சமடைந்துள்ளனர். அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவர்கள் அம்னோவும் அதன் தோழர்களும் வீசுகின்ற, அவமானத்தைத் தருகின்ற, நிந்திக்கின்ற சொற்களை தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.
பிஎன் சேவகர்கள் செல்வத்தை குவிப்பதற்கு வழி வகுத்த பிஎன் பொருளாதாரக் கொள்கைகள் தோல்வி அடையும் போது நாங்கள் சௌகரியமான உதை பந்தாக விளங்குகிறோம். பிரதமர் நஜிப் ரசாக்கும் அவரது கும்பலும் அவர்களுடன் இணைந்து கொள்ளும் போது கிரிஸ் உயர்த்திக் காட்டப்படுகிறது. சீனர்கள் ரத்தம் கோரப்படுகிறது.
அந்த இருண்ட நாட்களில் மசீச-வும் கெரக்கானும் எங்கே இருந்தன? அவர்கள் முணுமுணுக்கக் கூட இல்லை. அவை அப்படி இருந்ததற்கான பாவத்துக்கு விலை கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
நஜிப்புக்கு துணிச்சல் இருந்தால் தாம் விரும்பும் எந்த நேரத்திலும் தமது ‘உருமாற்றத்தை’ அமலாக்கிக் கொள்ளலாம். மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முன் நிபந்தனையாக சீனர்களிடமிருந்து கட்டளையைக் கோருவது உண்மையில் மறைமுகமாக மிரட்டுவதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
நஜிப் என்டி7ல் வழங்கிய பேட்டி அவருடைய தனிக் குணங்களை எடுத்துக் காட்டியது- கடப்பாட்டை காட்டாதது, உறுதியற்ற போக்கு, முக்கிய பிரச்னைகளைத் தவிர்ப்பது- ஆகியவையே அவை. சுருக்கமாகச் சொன்னால் அவர் தமது கால்கள் நனையாமல் பார்த்துக் கொள்வார்.
அடையாளம் இல்லாதவன்_3f4a: சீனர்கள் என்ன செய்ய வேண்டும் என நஜிப் சொல்லக் கூடாது. அவரும் அம்னோவும் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியே அவர் பேச வேண்டும்.
பல தசாப்தங்களாக நீடிக்கும் ஊழல் காரணமாக ஆளுமையில் சீர்கேடுகள் மலிந்து விட்டன. தாம் தீவிரமாக இருப்பதாக மக்களை நம்ப வைப்பதற்கு நஜிப் ‘வெறும் சுலோகங்களை’ மட்டும் சொல்வது மட்டும் போதாது.
அவர் முதலில் ஊழலை ஒழிப்பதில் அம்னோ தோல்வி கண்டு விட்டதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு அதற்கு மன்னிப்பும் கேட்க வேண்டும்.
அடையாளம் இல்லாதவன்#18452573: பெரும்பாலான மலேசிய சீனர்கள் ஒதுங்கி நிற்பவர்கள் அல்ல. வணிகர்கள் முதல் ‘char keow teow’ விற்பவர்கள் வரை எல்லா சீனர்களும் இந்த நாட்டில் கடுமையாக உழைக்கின்றனர்.
அவர்களில் பெரும்பாலோர் வரி செலுத்துகின்றனர். அவர்களுடைய கடின உழைப்பும் செலுத்தும் வரியும் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளன. அவர்கள் ஒதுங்கி நிற்பவர்கள் அல்ல. அவர்கள் பங்கேற்பாளர்கள்.
அவர்களுக்கு நன்கொடைகள் கிடைப்பதில்லை. அவர்கள் ஒரு நிலையைக் கடைப்பிடிக்கின்றனர். அதாவது அம்னோ, மசீச, மஇகா ஆகியவற்றை உள்ளடக்கிய ஊழல் மலிந்த இன அடிப்படையிலான கூட்டு அரசாங்கத்தை எதிர்ப்பதே அந்த நிலையாகும்.
ஸ்விபெண்டர்: நஜிப் அவர்களே, புதிய பொருளாதாரக் கொள்கை என்ற போர்வையில் பல தசாப்தங்களாக பாகுபாடு காட்டப்பட்டதால் சீனர்கள் “ஒதுங்கி நிற்பவர்களாகி” விட்டனர்.
அவர்களுடைய அடிப்படை உரிமைகள் பறி போய் விட்டன. அவர்களுடைய கடுமையான உழைப்பும் அதனால் விளைந்த பயன்களும் திருடப்பட்டன. அவர்களுடைய தொழில் முனைவர் ஆற்றல் நிர்வாகத் தடைகள், அளவுக் கட்டுப்பாடுகள் வழி சீர்குலைக்கப்பட்டது. நன்கு தேர்ச்சி பெற்ற உதவித் தேவைப்படுகின்ற அவர்களுடைய பிள்ளைகளுக்கு உபகாரச் சம்பளங்கள் மறுக்கப்பட்டன. அவர்களுடைய வாழ்க்கையில் நியாயமான, சமமான வாய்ப்புக்களும் மறுக்கப்பட்டன. பாகுபாடான கொள்கைகளுக்கு எதிர்ப்புக் காட்டினால் ரத்தம் சிந்தப்படும் என மருட்டல் விடுக்கப்பட்டது, இறுதியில் அவர்கள் ‘pendatangs’ அல்லது குடியேற்றக்காரர்கள் என அவமானப்படுத்தப்பட்டனர்.
மலாய்க்காரர்களுடைய தோல்விகளுக்கும் அம்னோ தவறுகளுக்கும் அவர்கள் மீது பழி போடப்பட்டது. நம்பிக்கையைப் பெற வேண்டுமே தவிர அதனைக் கோரக் கூடாது. ஆனால் பல தசாப்தங்களாக நீடிக்கும் பாகுபாட்டுக்கு பின்னர் அந்த நம்பிக்கையை நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டீர்கள். அம்னோவும் பிஎன்-னும் தங்களை நடத்துகின்ற முறை போதும் போதும் என்ற நிலைக்கு சீன சமூகம் வந்து விட்டது.
இறைவன் அல்ல: சீனர்கள் எப்படி ஒதுங்கி நிற்க முடியும்? சீனர்களின் உணர்வுகளையும் வேண்டுகோட்களையும் அம்னோ பல தசாப்தங்களாகப் புறக்கணித்து வந்துள்ளது.
சுதந்திரத்துக்குப் பின்னர் ஒரு புதிய சீன போதனா மொழிப் பள்ளிக்கூடம் கூட கட்டப்படவில்லை. சீன மக்கள் தொகை கூடிய வேளையில் சீனப் பள்ளிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. தேசியப் பள்ளிக்கூடங்களின் தரம் வீழ்ச்சி கண்டதாலும் ஆங்கில மொழி, தாய் மொழிகள் ஆகியவற்றைக் கற்பதற்கு பாதகமாக இருக்கும் வகையில் அளவுக்கு அதிகமான மலாய் மொழி மீது கவனம் செலுத்தப்பட்டதாலும் அதிகம் அதிகமான சீனர்கள் தங்கள் பிள்ளைகளை சீனப் பள்ளிகளுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளனர்.
சிவிக்: எதனையும் செய்வதற்கு உங்களுக்கு ஆற்றலும் அதிகாரமும் இருக்கிறது நஜிப் அவர்களே. நீங்கள் தோல்வி கண்டால் சீனர்கள் மீதும் மற்ற யார் மீது பழி போட வேண்டாம். உங்களுக்கு உறுதி இல்லை. குறைந்த பட்சம் உண்மையான போக்கும் இல்லை.
லின்: சீனர்கள் ஒதுங்கி நிற்பதாக நீங்கள் சொல்வது வினோதமாக இருக்கிறது. உண்மையில் அவர்கள் தீவிரப் பங்காற்றுகின்றனர். அம்னோவில் உள்ளவர்கள் உட்பட எல்லா அரசியல் ஆய்வாளர்களும் சீனர்கள் எதிர்க்கட்சிகளுக்குத்தான் வாக்களிப்பர் எனக் கூறுகின்றனர்.
நாங்கள் இந்த நாட்டை நேசிக்கிறோம். அதனால் மாற்றத்தைக் கோருகிறோம். ‘உருமாற்றத் திட்டத்தை’ ஆதரிப்பது இந்த நாட்டுக்கு நல்லதைக் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை. அது அம்னோ வலியுறுத்துவதால் நிச்சயம் இந்த நாட்டுக்கு நல்லதல்ல.
பூன்பாவ்: நஜிப் கூறுவது எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மலேசியச் சீனர்கள் ஒதுங்கி நிற்கக் கூடாது என அவர் இப்போது சொல்கிறார். அவரது தந்தையார் உருவாக்கிய ஒரு கொள்கையான புதிய பொருளாதாரக் கொள்கையின் அமலாக்கம் தொடங்கிய நாள் முதல் நாங்கள் ‘ஒதுங்கியே நிற்கிறோம்’.
மலேசியாவை நிர்மாணிப்பதில் சீனர்கள் உண்மையில் பங்கேற்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் இன, வர்க்கம், சமயம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடுகளை பின்பற்றிய புதிய பொருளாதாரக் கொள்கையையும் அதற்கு அடுத்து அமலாக்கப்பட்ட கொள்கைகளையும் ரத்துச் செய்யுங்கள். தகுதி அடிப்படையை மீண்டும் கொண்டு வாருங்கள். சீனர்களும் மற்ற சிறுபான்மை இனங்களும் ஒதுங்கி நிற்க மாட்டார்கள். அது வரையில் இரண்டு விதமாகப் பேச வேண்டாம்.