மெர்தேக்கா சதுக்க உரிமையாளரிடமிருந்து அனுமதி கோருங்கள் என பெர்சே-க்கு அறிவுரை

மாநகர மய்யத்தில் அமைந்துள்ள பொதுச் சதுக்கமான மெர்தேக்கா சதுக்கத்தில் தனது பேரணியை பெர்சே 3.0 நடத்துவதற்கு அதன் ‘உரிமையாளர்களிடமிருந்து’ அனுமதியைக் கோருமாறு சட்டத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் அதன் ஏற்பாட்டாளர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

“அந்த சதுக்கம் அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்படவில்லை. அதனால் அவர்கள் அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தைப் பின்பற்றி போலீஸ் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.”

“மெர்தேக்கா சதுக்கம் அது யாருக்குச் சொந்தம்? உரிமையாளரிடம் பேச வேண்டும்,” என கூறிய நஸ்ரி அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தை யார் பராமரிக்கிறார்கள் என்பது தமக்குத் தெரியாது என்றார்.

அந்த இடத்தில்தான் ஆகஸ்ட் 31ம் தேதி சுதந்திர நாள் அணி வகுப்பு நடத்தப்படுகின்றது.

அந்த மெர்தேக்கா சதுக்கத்தை கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் பராமரித்து வருகிறது. ஏற்கனவே வந்த தகவல்களின் படி அனுமதி கோரி மாநகராட்சி மன்றத்துக்கு விண்ணப்பிக்குமாறு போலீசார் பேரணி ஏற்பாட்டாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

“அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் உங்களுக்கு உரிமை இருக்கலாம். அதனால் நீங்கள் இன்னொருவருடைய நிலத்துக்கு சென்று நீங்கள் விரும்பியதைச் செய்யலாம் என அர்த்தமல்ல.”

“நான் அதனை உங்கள் வீட்டுக்கு முன்னால் செய்யக் கூடாது. நான் உங்களைக் கேட்க வேண்டும். ஆகவே நடைமுறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும்.”

மெர்தேக்கா சதுக்கம், அதற்கு ஒர் உரிமையாளர் நிச்சயம் இருப்பார். உரிமையாளர் சரி எனச் சொன்னால் எல்லாம் சரி தான். போலீசாரிடம் கேட்க வேண்டாம். உரிமையாளரிடம் கேளுங்கள்,” என்றார் நஸ்ரி.

பொருத்தமான இடத்தை ஹிஷாம் விரும்புகிறார்

தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரி போராடும் பெர்சே அமைப்பு ஏப்ரல் 28ம் தேதியில் தான் திட்டமிட்டுள்ளவாறு பேரணியை நடத்துவதற்கு உள் துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் இணக்கம் தெரிவித்துள்ளார்.

என்றாலும் பொருத்தமான இடங்களை நிர்ணயம் செய்வதற்கு ஏற்பாட்டாளர்கள் போலீசாருடன் பேச வேண்டும் என அவர் யோசனை கூறினார்.

தேர்தல் நடைமுறைகளில் காணப்படுகின்ற முக்கியமான பிரச்னைகளை தீர்ப்பதற்கு தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு தவறி விட்டதைத் தொடர்ந்து பெர்சே அமைப்பு ‘duduk bantah’ குந்தியிருப்பு ஆட்சேபத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

அதே நேரத்தில் இன்னொரு அரசு சாரா அமைப்பான ஹிம்புனான் ஹிஜாவ்-வும் KLCC-யிலிருந்து மெர்தேக்கா சதுக்கத்திற்கு ஊர்வலமாகச் சென்று பெர்சே பேரணியுடன் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளது.