நிஜார்: ரோஸ்மா மோதிரம், என்எப்சி ஊழல் ஆகியவை பேராக்கை மீண்டும் கைப்பற்றுவதற்குத் திறவுகோல்கள்

பிரதமருடைய துணைவியார் ரோஸ்மா மான்சோருடைய அதிக ஆடம்பரமான செலவுகள் எனக் கூறப்படும் விஷயங்களும் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட ஊழலும் கிராமப்புற மலாய்க்காரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. அவை அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன்-னுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் பேராக் மந்திரி புசார் நிஜார் ஜமாலுதீன் கூறுகிறார்.

24 மில்லியன் ரிங்கிட்டுக்கு ரோஸ்மா மோதிரம் வாங்கியதாகச் சொல்லப்படுவதையும் என்எப்சி-க்கு அரசாங்கம் கொடுத்த 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடன், ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளை வாங்குவதற்காக தவறாக பயன்படுத்தப்பட்டதையும் விளக்குவதற்கு பிஎன் மேற்கொண்ட முயற்சிகள் மக்களிடையே எடுபடவில்லை என்றார் அவர்.

அவர்கள் அந்தத் தகவலை கிராமப்புற மக்களிடமிருந்து அகற்றுவதற்கு முயன்றனர். ஆனால் நாங்கள் அதனைப் பரப்புவதில் வெற்றி கண்டோம். அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.”

“அதன் விளைவாக மலாய்க் கிராமங்களில் சிந்தனைகள் அவர்களுக்கு எதிராகத் திரும்பி விட்டன,” என நேற்றிரவு ஷா அலாமில் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

முன் பக்கத்தில் ரோஸ்மாவின் படத்தையும் பின் பக்கத்தில் முன்னாள் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலிலின் படத்தையும் கொண்ட துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்வதின் மூலம் பக்காத்தான் எளிதாக பேராக்கை மீண்டும் கைப்பற்ற முடியும் என அந்த பாசிர் பாஞ்சாங் சட்ட மன்ற உறுப்பினர் புன்னகையுடன் தெரிவித்தார்.

“நாங்கள் அவற்றை எங்களுடைய பிரச்சார ஆயுதங்களாக கூடின பட்ச அளவுக்குப் பயன்படுத்துவோம்,” என்றார் அவர்.

மூத்த அம்னோ தலைவரும் Ku Li என அழைக்கப்படுகின்றவருமான தெங்கு ரசாலி ஹம்சா பேராக்கில் பிஎன் வீழ்ச்சி அடையும் என ஆரூடம் கூறியுள்ளதாக நிஜார் தெரிவித்தார்.

“பேராக்கை பிஎன் தக்க வைத்துக் கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக அவர் அண்மையில் என்னிடம் கூறினார்.அதனால்தான் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அடிக்கடி பேராக்கிற்கு வருகை அளிக்கிறார்,” என்றும் அவர் சொன்னார்.

“நிச்சயமற்ற சூழ்நிலைக்குத் தயாராக இருக்குமாறும்” ஜோகூர், மலாக்கா, சபா ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கலாம் என்றும்  Ku Li என்னிடம் தெரிவித்தார் என்றும் அந்த பேராக் மாநில பாஸ் தலைவர் சொன்னார்.

Ku Li-யைத் தவிர முன்னாள் நிதி அமைச்சரும் நீண்ட காலத்துக்கு அம்னோ பொருளாளராக இருந்த டைம் ஜைனுதினும் ஜோகூர் மலாக்கா, பாகாங் ஆகியவற்றில் மட்டுமே எளிதாக வெற்றி பெற முடியும் என ஆரூடம் கூறியுள்ளார்.

TAGS: