உலகம் முழுவதும் வாழ்கின்ற மலேசியர்கள் தேர்தல் சீர்திருத்தத்துக்கு போராட எழுந்துள்ளனர். ஆனால் இந்த முறை உட்கார்ந்து கொண்டு ஆட்சேபம் தெரிவிப்பர்.
ஏப்ரல் 28ம் தேதி கோலாலம்பூரில் பெர்சே 2.0 ஏற்பாடு செய்துள்ள பேரணியுடன் ஒருமைப்பாட்டைக் காட்டும் வகையில் 43 மாநகரங்களில் வாழ்கின்ற மலேசியர்கள் குந்தியிருப்பு மறியலை நடத்துவார்கள்.
தூய்மையான சுதந்திரமான தேர்தல்களைக் கோரி அந்தப் பேரணி நடத்தப்படுகிறது.
அவற்றில் 20 மாநகரங்கள் தங்களது நிகழ்வுகளுக்கான நேரத்தையும் தேதியையும் இடத்தையும் குறித்துள்ளன. சமூக ஊடகங்கள் அவை குறித்த தகவல்களைப் பரப்பவும் தொடங்கியுள்ளன.
ஆக்லாந்தில் பிற்பகல் ஒரு மணி வாக்கில் நியூசிலாந்து பேரணி தொடங்கும்.
அந்தத் தகவலை அதன் ஏற்பாட்டாளரான லிடியா சாய், மின் அஞ்சல் வழி மலேசியாகினிக்குத் தெரிவித்தார். நேர வேறுபாடு காரணமாக பெர்சே 3.0ஐ ஆக்லாந்து முதலில் தொடக்கி வைக்கும்.
ஆஸ்திரேலியாவில் ஏழு மாநிலத் தலைநகரங்களில் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆசிய நகரங்களில் குவாங்சாவ், ஷென்ஷென், ஹாங்காங், தைப்பே ஆகியவற்றிலும் பெர்சே ஒருமைப்பாட்டு குந்தியிருப்பு கூட்டங்கள் நடத்தப்படும்.
சிங்கப்பூரில் அதிகாரிகளுடைய ஒப்புதலுக்காக ஏற்பாட்டாளர்கள் காத்திருக்கின்றனர். ஹொங் லிம் பூங்காவில் நடத்துவதற்கு இணக்கம் கிடைக்காவிட்டால் அவர்கள் கோலாலம்பூருக்கு கூட்டாக கார்களில் செல்ல எண்ணியுள்ளனர்.
ஜப்பானில் தோக்கியோவுடன் ஒசாக்காவிலும் ஏற்பாட்டாளர்கள் இடத்தை தேர்வு செய்துள்ளனர். ஒசாக்காவில் யாமாமோட்டோ ரயில் நிலையத்தில் அந்தப் பேரணி நிகழும்.
ஐரோப்பாவில் லண்டனில் உள்ள மலேசியத் தூதரகத்துக்கு முன்பும் எடின்பாரோவில் மீடோ பூங்காவிலில் ஆட்சேபக் கூட்டங்கள் நடத்தப்படும்.
ஸ்டாக்ஹோம், கிராஸ், ஜெனிவா, நியூ காஸல் ஆகியவற்றிலும் குந்தியிருப்பு மறியலுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றது.
அமெரிக்காவில் வாழ்கின்ற மலேசியர்கள் 11 மாநகரங்களில் ஆட்சேபக் கூட்டங்கள் நடத்தப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹூஸ்டன், அட்லாண்டா, பிஸ்பர்க், மின்னியாபோலிஸ், நியூ யார்க், வாஷிங்டன் டிசி, லாஸ் ஏஞ்சல்ஸ், போஸ்டன், சிகாக்கோ, போர்ட்லாண்ட், கொலம்பஸ் ஆகியவை அவற்றுள் அடங்கும், கனடாவில் உள்ள டொராண்டோவும் அதில் இணைந்து கொள்ளும். அந்த மாநகரங்களில் தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தும் மஞ்சள் நிற உடைகளை பங்கேற்பாளர்கள் அணிந்திருப்பர்.
மலேசியாவில் ஒரே சமயத்தில் குந்தியிருப்பு நிகழ்வுகள்
குவாந்தான், அலோர் ஸ்டார், மிரி, சிபு, கூச்சிங், பினாங்கு, ஈப்போ உட்பட 9 மலேசிய நகரங்களில் ஒரே சமயத்தில் பேரணிகள் நடத்தப்படும்.
என்றாலும் மலாக்காவில் வீரர்கள் சதுக்கத்திலும் கோத்தா கினாபாலுவில் மெர்தேக்கா திடலிலும் அந்த நிகழ்வு நடைபெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
“மற்றவர்கள் இடங்களைப் பின்னர் அறிவிப்பார்கள்,” என பெர்சே நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த மரியா சின் அப்துல்லா கூறினார்.
பெர்சே பேரணியுடன் இவ்வாண்டு தொடக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கு கொண்ட லினாஸ் எதிர்ப்புப் பேரணியை நடத்திய ஹிம்புனான் ஹிஜாவ் குழுவினரும் இணைந்து கொள்வர்.
முன்னதாக அவர்கள் KLCC-யில் கூடி ஊர்வலமாக பெர்சே குந்தியிருப்பு பேரணி நிகழும் மெர்தேக்கா சதுக்கத்திற்குச் செல்வார்கள்.
1980ம் ஆண்டுகளில் ஆசிய அரிய மண் தொழில் கூடம் அமைவதை ஆட்சேபித்த புக்கிட் மேரா குடியிருப்பாளர்களும் பெர்சே நிகழ்வுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
அவர்கள் தங்கள் ஒருமைப்பாட்டைக் காட்டும் வண்ணம் அந்தத் தொழில் கூடம் முன்பு அமைந்திருந்த இடத்தில் ஏப்ரல் 28ம் தேதி கூடுவர்.