இந்தியர்களை கேவலப்படுத்தும் வகையில் எழுதப்பட்டிருந்த ஐந்தாம் படிவ மலாய்
இலக்கிய இண்டர்லோக் நாவலை, பள்ளி பாடத்திட்டத்திலிருந்து அகற்றக் கோரி,
ஹிண்ட்ராப் மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து
கொண்டவர்களில் 54 பேர் மீது அபாண்டமாக சுமத்தப்படிருக்கும் குற்றச்சாட்டுகளை
தள்ளுபடி செய்யும் படி சட்டத்துறை தலைவருக்கு மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாக்காம் வலியுறுத்தியுள்ளது.
இண்டர்லோக் நாவலை பள்ளிப் பாடத்திட்டத்திலிருந்து அகற்றும் முடிவை
எடுத்திருப்பதானது கல்வி அமைச்சு தமது தவற்றை ஒப்புகொண்டதற்கு சமானமாகும்.
எனவே, அமைச்சின் குற்றத்தைச் சுட்டிக்காட்டிய ஹிண்ட்ராப் ஆதரவாளர்களின் மீது சுமத்தப்படிருக்கும் குற்றச்சாட்டுகள் அபத்தமானவை, ஆதரமற்றவை. அந்த அடிப்படையில் சட்டத்துறை தலைவர், போராட்டவாதிகள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய வலியுறுத்த வேண்டும் என்ற குறிப்பாணையை கடந்த 27 பெப்ரவரி 2012 இல் ஹிண்ட்ராப் மக்கள் சக்தி சுஹாக்காமிடம் வழங்கியது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாணையை பெற்றுக்கொண்ட சுஹாக்காம் ஆணையர் முஹம்மட் ஷாணி அப்துல்லா, நிச்சயம் இந்த நியாமான கோரிக்கையை மேல் நடவடிக்கைகுளுக்கு பரிந்துரைப்பதாக கூறியிருந்தார். அவ்வன்னமே கடந்த மார்ச் முதல் நாள் கூடிய சுஹாக்காம் ஆணையர்கள் கூட்டத்தில் ஹிண்ட்ராப் குறிப்பானை குறித்த விவாதங்களுக்கு பிறகு, இது குறித்து மலேசிய சட்டத்துறை தலைவரின் கவனத்திற்கு கொண்டுசெல்வதன முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 16 ஆம் தேதி ஹிண்ட்ராபின் கோரிக்கைகளை கடிதம் மூலம் மேல் நடவடிக்கைக்காக சட்டத்துறை தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஹிண்ட்ராப் தேசிய ஒருங்கிணைப்பாளருக்கு மார்ச் 28 ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் முஹம்மட் ஷாணி அப்துல்லா விவரித்திருக்கிறார்.
பல்லின சமூகங்கள் ஒற்றுமையோடு வாழும் மலேசிய நாட்டில், குறிப்பிட்ட ஒரு
சாரரின் மனம் நோகும் வகையில் சித்தரிக்கப்பட்ட விசமத்தனமான நாவலை இளம் மாணவ பிஞ்சு நெஞ்சங்களில் விதைத்திடுவதை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்த இந்நாட்டின் குடிமக்களை தேச துரோகிகளைப் போல் குற்றம் சாட்டி விசாரிக்காமல், அவர்களுடையப் போராட்டத்தின் உண்மையை புரிந்து, சத்தியத்திற்கு கட்டுப்பட்டு சட்டத்தலைவர் உடனடியாக ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று ஹிண்ட்ராப் மக்கள் சக்தி தேசிய ஒருங்கிணைப்பாளர் வி.சம்புலிங்கம் அவரது அறிக்கையில் கூறுகிறார்.