அம்பிகா: டாத்தாரான் மெர்தேக்கா மக்களுக்குச் சொந்தமானது

டத்தாரான் மெர்தேக்கா மக்களுடையது. அது கோலாலம்பூர் மாநகர்மன்றத்திற்கு (DBKL) சொந்தமானதல்ல என்று பெர்சே கூறுகிறது.

டத்தாரான் மெர்தேக்க ஒரு பாரம்பரியச் சொத்து. முன்மொழியப்பட்டுள்ள கூட்டம் அங்கு நடந்தால், அது அதற்கு சேதத்தை உண்டுபண்ணக்கூடும் என்ற கருத்திற்கு பதில் அளித்த பெர்சேயின் தலைவர் அம்பிகா சீனிவாசன் அது ஒரு பொதுவான இடம், அது மக்களுக்குச் சொந்தமானது என்றார்.

அந்த இடத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், பெர்சே நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிகழ்சியின் மீது மட்டும் இக்கவலை தெரிவிக்கப்படுவது ஏன் என்று வினவினார்.

“எங்களுக்கு எதிராக மட்டும் ஏன் இந்த நொண்டிச் சாக்கு? இது பொதுவான இடம், இது மக்களுக்குச் சொந்தமானது. அதைப் பயன்படுத்துவது குறித்து அதிகமான கட்டுப்பாடுகள் இருக்கக்கூடாது.”

டத்தாரான் மெர்தேக்காவில்தான் அக்கூட்டம் நடத்தப்படும் என்று கடந்த புதன்கிழமை பெர்சே திட்டவட்டமாக அறிவித்தது.

பெர்சே ஆதரவாளர்களுக்கு எதிராக போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது மீதான சுஹாக்காம் விசாரணையில் சாட்சியம் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அம்பிகா பேரணி அமைதியாக, எவ்விதக் குழப்பமும் இன்றி நடைபெறும் என்று பெர்சே உறுதியளித்துள்ளது என்றார்.

“அது அமைதியானதாக இருக்கும் என்று நாங்கள் உறுதியளித்துள்ளோம். யாராவது குழப்பம் அல்லது தீவிரம் காட்ட முனைந்தால், நாங்களே அவர்களைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்போம். இக்கூட்டத்தை வழிநடத்துவதில் நாங்கள் அந்த அளவிற்கு கடுமையாக இருப்போம்”, என்று அவர் மேலும் கூறினார்.

அதிகமானவர்கள் கலந்துகொள்வர், அம்பிகா

தெருவில் பேரணி நடப்பதற்கு மாறாக முறையாக கூட்டம் நடத்தப்படுவதற்காக மக்கள் செல்லும் வழிகள் திட்டமிடப்படும் என்பதை அம்பிகா வலியுறுத்தினார்.

“டத்தாரானுக்கு மக்கள் எப்படி வருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள், ஹெலிகோப்டர் மூலமாகவா? அவர்கள் நடந்து வர வேண்டும் அல்லது வண்டியை ஓட்டி வர வேண்டும். டத்தாரான் மெர்தேக்காவுக்கு செல்லும் வழிகள் குறித்து நாங்கள் திட்டமிடுகிறோம், ஆனால் அது ஒழுங்குமுறையாக இருப்பதற்கான நோக்கத்தைக் கொண்டது.”

கடந்த ஆண்டு அரசாங்கம் தெரிவித்த எதிர்ப்பின் காரணமாக பெரும் கூட்டம் திரண்டது. ஆனால், இவ்வாண்டு கூட்டத்திற்கு ஆதரவு குறைவாக இருக்கும் என்று பெர்சே அச்சம் கொண்டுள்ளதாக என்ற கேள்விக்கு அவர் நம்பிக்கையுடன் காணப்பட்டார்.

“நான் கவலைப்படவில்லை. பங்கேற்பவிருக்கும் மக்களின் எண்ணிக்கை குறித்து நான் கவலைப்படவில்லை. பெருமளவில் ஈடுபாடு இருப்பதாக நான் நினைக்கிறேன். எனக்கு மக்கள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது”, என்று அம்பிகா கூறினார்.

TAGS: