யார் “பொய்யர்”?: முகைதினுக்கு டோங் ஜோங் சவால்

மலேசிய துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முகைதின் யாசினால் பொய்யர் என்று முத்திரை குத்தப்பட்ட சீன கல்வி உரிமைகள் குழுவான டோங் ஜோங் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் பல்லாண்டுகாலமாக அரசாங்கத்தால் ஓரங்கட்டப்பட்டு வந்துள்ளன என்ற அதன் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்காக இன்று புள்ளிவிபரங்களை வெளியிட்டது.

“கல்வி அமைச்சு ஒரே மொழி கல்விக் கொள்கையை அமல்படுத்தி வருகிறது. அதன் விளைவாக சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளன. இது ஒரு மறுக்க முடியாத உண்மை”, என்று டோங் ஜோங் அதன் அறிக்கையில் கூறியுள்ளது.

சீன சமூகம் இந்த வேறுபாட்டை சகித்துக்கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக சீனப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக சுயமாக நிதி திரட்டி வந்துள்ளதோடு தற்கால ஆசிரியர்களுக்கான சம்பளம், நிருவாக செலவுகள் மற்றும் இதர செலவுகளையும் ஏற்றுக்கொண்டு வந்துள்ளது.

“சீனப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை கடந்த 40 ஆண்டுகளாக நிலவி வருகிறது. இது ஓர் அசைக்க முடியாத உண்மை.”

எட்டு மற்றும் ஒன்பதாவது மலேசிய திட்டத்தின் கீழ் மொத்த கல்வி நிதி ஒதுக்கீட்டில் சீனப்பள்ளிகளுக்கு முறையே 7.2 விழுக்காடும் 3.6 விழுக்காடும் மட்டுமே ஒதுக்கப்பட்டது என்று டோங் ஜோங் விளக்கம் அளித்தது.

டோங் ஜோங் கிளப்பியுள்ள ஆசிரியர் பற்றாக்குறை ஒரு “பெரிய பொய்” என்று முகதின் யாசின் நேற்று கூறியிருந்தார்.

“சீனப்பள்ளிகளுக்கு மட்டுமான பிரச்னையல்ல”

ஆசிரியர் பற்றாக்குறை சீனப்பள்ளிகளை மட்டும் சார்ந்த ஒரு பிரச்னை அல்ல. தேசியப்பள்ளிகளிலும் ஆங்கில மொழி போதிக்கும் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கின்றது என்று முகைதின் சுமார் 500 தாய்மொழிப்பள்ளி ஆசிரியர்களிடம் கூறினார்.

கல்வி குறித்த விவகாரங்களில் முகைதின் முரண்பாடான மற்றும் குழப்பமான அறிக்கைகளை விடுத்து வருவதால், அவரது அறிக்கைகள் நம்பமுடியாதவைகளாக இருக்கின்றன என்று டோங் ஜோங் அதன் அறிக்கையில் கூறிக்கொண்டது.

“முகைதின் ஏப்ரல் 4 இல் விடுத்த ஓர் அறிக்கையில் தேசிய அளவில் சீனப்பள்ளிகளுக்கான நிருவாகச் செலவு ரிம1.8 பில்லியன் என்று கூறினார். ஆனால், எட்டு நாள்களுக்குப் பிறகு ஏப்ரல் 12 இல், ஆசிரியர்கள் சம்பளம் உட்பட சீனப்பள்ளிகளுக்கான நிருவாகச் செலவுக்காக ஒதுக்கப்படும் நிதி ஆண்டுக்கு ரிம2.89 பில்லியன் என்று கூறினார்.

“மேலும், மார்ச் 14 இல் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் தேசியப்பள்ளிகள் ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்கொள்ளவில்லை, மாறாக சில பாடங்களைப் போதிப்பதற்கு சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது என்று கூறியிருந்தார். ஆனால், ஏப்ரல் 12 இல், தேசியப்பள்ளிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது என்று கூறினார்”, என்று டோங் ஜோங் சுட்டிக்காட்டியுள்ளது.

பள்ளிக்கூடம் கட்டும் விவகாரத்தில், கல்வி அமைச்சு பல தேசியப்பள்ளிகளைக் கட்டியுள்ளது. அதற்கான நிலம் மற்றும் கட்டடம் ஆகியவற்றுக்கான செலவு அனைத்தையும் அதுவே ஏற்றுக்கொண்டுள்ளது என்று டோங் ஜோங் கூறுகிறது.

ஆனால், சீனப்பள்ளிகளுக்கோ எண்ணற்ற தடைகள், அமைச்சின் அனுமதி பெறுதல் மற்றும் போதுமான நிதி இன்மை ஆகியவை உட்பட.

“சீனப்பள்ளிகளைக் கட்டுவதற்கும் அவற்றுக்கு நில ஒதுக்கீடு செய்வதற்கும் முறையான கட்டமைப்பை கல்வி அமைச்சு கொண்டிருக்கவில்லை. புதிய சீனப்பள்ளிக்கூட கட்டடம் கட்டுவதற்கான செலவின் 80 விழுக்காட்டை திரட்டியிருந்தால் மட்டுமே புதிய சீனப்பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும் நியாயமற்ற விதி முறையையும் அமைச்சு அமல்படுத்தி வருகிறது.

“இது வெளிப்படையாக சீனப்பள்ளிகளை ஓரங்கட்டுவதாகும்”, என்று டோங் ஜோங் மேலும் கூறிற்று.

ஆகவே, மக்கள் உண்மையைப் புரிந்துகொள்வதற்கு ஒவ்வொரும் மலேசிய ஐந்தாண்டு திட்டத்திலும் ஒவ்வொரு மொழி பள்ளிகளின் நிருவாகத்திற்கும் மேம்பாட்டிற்கும் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் முழு விவரத்தையும் பகிரங்கமாக அறிவிக்குமாறு டோங் ஜோங் கல்வி அமைச்சைக் கேட்டுக்கொண்டுள்ளது.

TAGS: