எதிர்ப்பு கடுமையாக இருந்த போதிலும் Koperasi Permodalan Felda என்னும் பெல்டா கூட்டுறவுக் கழகப் பேராளர்கள் FGVH என்னும் Felda Global Venture Holdings Bhd பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட 1,227 பேராளர்களில் 1,227 பேர் பங்குப் பட்டியலில் அது சேர்க்கப்படுவதற்கு ஒப்புதல் தெரிவித்ததாக உத்துசான் மலேசியா கூறியது. அந்த நடவடிக்கை அடுத்த மாதம் அல்லது ஜுன் மாதம் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நேற்று நான்கு மணி நேரம் நடைபெற்ற அவசரப் பொதுக் கூட்டத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டது. KPF பெல்டா ஹோல்டிங்ஸில் 51 விழுக்காடு பங்குகளை வைத்துள்ளது. அதே வேளையில் FGVHல் பெல்டா ஹோல்டிங்ஸ் 49 விழுக்காடு பங்குகளை வைத்துள்ளது.
அந்த முடிவு பெல்டா குடியேற்றக்காரர்களை எதிர்க்கட்சிகள் எளிதாக ஏமாற்ற முடியாது என்பதைக் காட்டுவதாக பெல்டாவுக்கு பொறுப்பான பிரதமர் துறை துணை அமைச்சர் அகமட் மஸ்லான் கூறினார்.
அவசரப் பொதுக் கூட்டத்தை நிறுத்துவதற்கு பல பெல்டா குடியேற்றக்காரர்கள் அண்மையில் நீதிமன்ற தடையுத்தரவுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தனர். ஆனால் குவாந்தான் உயர் நீதிமன்றம் ஏப்ரல் 2ம் தேதி அந்த விண்ணப்பத்தை நிராகரித்தது.
KPF பேராளர்கள் அந்த விவகாரதை விவாதிப்பதற்கு மட்டுமே திட்டமிட்டிருப்பதாலும் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்பதாலும் பங்குகளை விற்பது தொடர்பாக தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு இன்னும் காலம் கனியவில்லை என நீதிபதி மரியானா யாஹ்யா அப்போது கூறினார்.
குடியேற்றக்காரர்கள் இரண்டு முறை தடை உத்தரவைக் கோரினர். அதனால் நேற்று வரைக்கும் KPF அவசரப் பொதுக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
பாஸ் கட்சியுடன் தொடர்புடைய அமைப்பான அனாக் எனப்படும் பெல்டா குடியேற்றக்காரர் குழந்தைகள் சங்கம் அந்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.