சூடான் எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய எண்ணெய் வள பகுதியில், சூடான் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.
சூடான் நாட்டில், 20 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு சண்டையில், 15 இலட்சம் பேர் பலியாயினர். ஐ.நா., தலையீட்டின் பேரில், கடந்த ஆண்டு தெற்கு சூடான், தனி நாடாக உருவானது. சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தினர், தற்போது, தெற்கு சூடானை ஆட்சி செய்து வருகின்றனர். இரு நாட்டு எல்லையில் உள்ள ஹெக்லிக் என்ற இடத்தில், எண்ணெய் வளம் அதிகமாக உள்ளது. இதை, தங்களிடம் ஒப்படைக்கும்படி, சூடான் அரசு தெற்கு சூடானை எச்சரித்து வந்தது. இதற்கு, தெற்கு சூடான் மறுப்பு தெரிவித்ததால், இரு நாடுகளுக்கிடையே அண்மையில் சண்டை நடந்தது. இந்த சண்டையில், இருதரப்பிலும், 22 வீரர்கள் பலியாயினர்.
“ஹெக்லிக் பகுதியிலிருந்து, தெற்கு சூடான் தனது படையை வாபஸ் பெறவில்லையென்றால், அந்நாட்டுடன் போர் நடக்கும்” என, சூடான் அதிபர் ஓமர் அல் பஷீர் தெரிவித்திருந்தார். “சண்டை நடந்தால், தெற்கு சூடானுக்கு ஆதரவளிப்போம்” என, உகாண்டா தெரிவித்திருந்தது.
நிலைமை விபரீதமாக போவதை கண்ட ஐ.நா., பொது செயலர் பான் கி மூன், சர்ச்சைக்குரிய ஹெக்லிக் பகுதியிலிருந்து, தெற்கு சூடான் தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என கூறியிருந்தார். அனைத்துலக வரைபடத்தின் படி, ஹெக்லிக், சூடான் வசம் தான் உள்ளது. இருப்பினும், இந்த பகுதி தங்களுக்குத் தான் சொந்தம் என, தெற்கு சூடான் உரிமை கொண்டாடி வருகிறது. இந்த பகுதி, இன்னும் சரியாக வரையறுக்கப்படாத காரணத்தால், சர்ச்சை நீடிக்கிறது.
சூடான் நாட்டுடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, மூன்று நாட்களுக்குள் தன்னுடைய படைகளை வாபஸ் பெறுவதாக, தெற்கு சூடான் அதிபர் சால்வா கிர் உறுதியளித்தார். அதிபர் சல்வா கிரின் உத்தரவுப்படி, படைகளை முற்றிலும் வாபஸ் பெற்று விட்டதாகவும், இருப்பினும், சூடான் படையினர் தொடர்ந்து குண்டு வீசி வருவதாகவும், தெற்கு சூடான் இராணுவத் தளபதி புகார் தெரிவித்துள்ளார். தெற்கு சூடான் எல்லைப் பகுதியில், நேற்று, சூடான் நாட்டின் இரண்டு விமானங்கள், குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில், ஒரு சிறுவன் பலியானதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, சர்ச்சைக்குரிய ஹெக்லிக் எண்ணெய் பகுதியை, சூடான் அதிபர் அல் பஷீர் நேற்று பார்வையிட்டார். தெற்கு சூடானுக்கு எதிரான சண்டையில், வெற்றி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.