இந்து கோயில் உடைப்பு: ஹில்மி, சுவா மன்னிப்பு கோர வேண்டும்

பிறை பல்க் கார்கோ டெர்மினல் தொழிற்பேட்டை பகுதியில் 40 ஆண்டுகால பழமை வாய்ந்த இந்து கோயில் உடைக்கப்பட்டதன் காரணமாக பினாங்கு போர்ட் செண்ட் பெர்ஹாட் தலைவர் ஹில்மி யஹயா மற்றும் பினாங்கு போர்ட் ஆணயம் தலைவர் டாக்டர் சுவா சோய் லெக் ஆகிய இருவரும் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளனர்.

உடைக்கப்பட்ட முனீஸ்வரர் ஆலைய பக்தர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ள இருவரும் மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் துறைமுகத் தொழிலாளர்கள் ஆவர். பக்தர்களின் கோரிக்கைக்கு பினாங்கு மாநில அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.

சம்பவம் நடந்த இடத்திற்கு நேற்று பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் வருகையளித்தார். தெலுக் பகாங் அம்னோ சட்டமன்ற உறுப்பினரான ஹில்மியும் மசீச தலைவரான சுவாவும் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் உடைக்கப்பட்ட கோயிலுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாற்பது ஆண்டுகாலமாக இந்துக்கள் வழிபட்டு வரும் கோயிலை உடைத்தது இந்துக்களுக்கும் இந்திய சமூகத்திற்கும் “மரியாதை” அளிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது என்றாரவர்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை மணி 8.00 க்கு அக்கோயில் உடைக்கப்படுவதற்கு முன்பு கோயில் நிர்வாகிகளுக்கு எவ்வித முன் அறிவிப்பும் கொடுக்கவில்லை என்பதை துறைமுக அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

“அரசாங்கம் ஒரு கட்டடத்தை முன் அறிவிப்பு இன்றி உடைக்கலாம் என்றாலும், பினாங்கு மாநில அரசினரான நாங்கள் எப்போதும் முன் அறிவுப்பு செய்கிறோம் அல்லது குறைந்தபட்சம் அந்த அறிவிப்பை அந்த இடத்தில் ஒட்டிவைக்கிறோம்”, என்று லிம் செய்தியாளர்களிடம் கூறினார்.
“ஹில்மியும் சுவாவும் குறைந்தபட்சம் தாங்கள் தவறு செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டு அக்கோயிலை மீண்டும் கட்டுவதற்கான வழிகளைக் காண வேண்டும்.

“மாறாக, அவர்கள் இவ்விவகாரத்தை வெளியிட்டதற்காக ஊடகங்களைக் குறைகூறியுள்ளனர். அக்கோயிலை மீண்டும் கட்டுவதற்கான செலவை தாங்கள் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அச்செய்திகள் கூறியது என்றும் அவர்கள் கூறியனர்”, என்று லிம் மேலும் கூறினார்.

இந்து கோயில்களை “இடித்துத்தள்ளும் அந்த நாள்கள்” கடந்த காலமாகி விட்டதாக தாம் நினைத்ததாகவும் ஆனால் அது மீண்டும் திரும்பியுள்ளது என்று டிஎபி பொதுச் செயலளாருமான லிம் கூறினார்.

“இந்துக்களுக்கும் இந்திய சமூகத்திற்கும்  உங்களுடையக் கோயில்கள் பாதுகாப்பாக இல்லை என்பதற்கு இது ஒரு கடுமையான எச்சரிக்கையாகும்”, என்று அவர் மேலும் கூறினார்.

13 ஆம் பொதுத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் பாரிசான் இந்திய சமூகத்திற்கு இன்னும் மேலான மரியாதையை அளித்திருக்கும் என்று தாம் கருதியதாக அவர் கூறினார்.

“ஆனால், அவர்கள் அக்கோயிலை உடைத்தெறியத் தீர்மானித்தனர். இக்கோயில் மத்திய அரசாங்க நிலத்தில் கட்டப்பட்டுள்ளது.

காயப்படுத்தப்பட்ட இந்திய சமூகம்

“அவர்களைத் திரும்பி (மாநில ஆட்சிக்கு) வர அனுமதித்தால், அது இந்து கோயிலாக மட்டுமிராது, மற்ற இடங்களும் அடங்கும்,” என்றாரவர்.

அவருடன் வருகையளித்திருந்த துணை முதலமைச்சர் II  பி. இராமசாமி அக்கோயிலை புல்டோசரை கொண்டு உடைத்தெறியவதற்கான அவசியத்தைத் தம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றார்.
அதிகாரிகள் ஒரு கோயிலை அவ்வாறு உடைத்தெறிவதற்கு “அது உங்கள் வீடு அல்ல” என்று கூறிய அவர், அவர்கள் குறைந்தபட்சம் கிராமம் மற்றும் பாதுகாப்பு மேம்பாட்டு குழு அல்லது அக்கோயிலில் வழிபட வரும் இந்திய தொழிலாளர்களிடமாவது தெரிவித்திருக்க வேண்டும் என்றார்.

“அவர்கள் குறைந்தபட்சம் மாற்று நிலம் வழங்க வேண்டும். பிரதமர் நஜிப் ரசாக் எப்போதும் உருமாற்றம் குறித்து பேசுகிறார். ஆனால், அவர்கள் இங்கு வந்து அவர்களின் கொடூர முகத்தைக் காட்டுகின்றனர்.

ஏற்கனவே, இந்தியர்கள் காயப்படுத்தப்பட்ட சமூகமாக்கப்பட்டுள்ளனர். அதற்கு மேலும் இதனைச் செய்வது சரியல்ல. இது 2007 ஆம் ஆண்டில் கிள்ளானில் ஒரு கோயிலுக்கு ஏற்பட்டதைப் போன்றுள்ளது. அது இண்ட்ராப் இயக்கத்திற்கு வித்திட்டது என்பதை அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, மாநில பிஎன் தலைவர் தெங் சாங் இயோ இந்து கோயில் பிரச்னையை ஹில்மி தீர்த்து விட்டார் என்று பிஎன் மாநில செயற்குழு கூட்டத்தில் கூறினார்.

“இப்பிரச்னை சில பாதுகாப்பு விவகாரத்துடன் தொடர்பு உடையது. இதை அரசியலாக்கி இருக்கக்கூடாது.

“பாதிக்கப்பட்ட கோயிலை மீண்டும் நிர்மாணிப்பத்தற்கான செலவை ஏற்றுக்கொள்வதற்கு பிபிஎஸ்பி தயாராக இருக்கிறது”, என்று அவர் மேலும் கூறினார்.

TAGS: