பிகேஆர், இன்னொரு பெரிய இராணுவச் செலவு குறித்து கேள்வி எழுப்புகிறது

அரசாங்கம் நேரடியாக பேச்சு நடத்தியுள்ள இன்னொரு இராணுவக் கொள்முதல் ஒப்பந்தம் குறித்து பிகேஆர் கேள்வி எழுப்பியுள்ளது. அந்த ஒப்பந்தம் மில்லியன் கணக்கான ரிங்கிட் வரிப்பணத்தை விரயமாக்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளதாக அது கூறியது.

மலேசிய ஆயுதப் படைகளுக்கான என்சிஒ எனப்படும் ” கட்டமைப்பு மைய நடவடிக்கைகள்” என்ற அந்தத் திட்டம் மீது தற்காப்பு அமைச்சுக்கும் சாப்புரா செக்யூர்ட் டெக்னாலாஜிஸ் சென். பெர்ஹாட்டுக்கும் இடையில் நேரடிப் பேச்சுக்கள் மூலம் ஒப்பந்தம் காணப்பட்டுள்ளது.

அத்தகைய பேரம் ஒன்று செய்து கொள்ளப்பட்டிருப்பது குறித்த தகவலை பிகேஆர் தொடர்புப் பிரிவு இயக்குநர் நிக் நாஸ்மி நிக் அகமட் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியிட்டார்.

“நாட்டின் எதிர்கால தற்காப்புத் தேவைகளின் கீழ் வரும் அந்தத் திட்டத்துக்கான ‘வடிவமைப்பு’ இது நாள் வரை இல்லை என பிகேஆர் கட்சிக்குத் தெரிய வந்துள்ளது.”

“ஆகவே அந்தத் திட்டத்தினால் கிடைக்கப் போகும் நன்மை என்ன? அதன் நோக்கம் ஏன்  தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தப்படவில்லை?”  

“வடிவமைப்பு” இல்லாத காரணத்தினால் அந்தத் திட்டத்துக்கான செலவுகள் வான் அளவுக்கு உயரக் கூடிய சாத்தியம் இருக்கிறது”, என பிகேஆர் உதவித் தலைவர்களான தியான் சுவாவும் நுருல் இஸ்ஸா அன்வாரும் வெளியிட்ட கூட்டறிக்கை கூறியது.

அந்தத் திட்டத்துக்கான நோக்கம் தெளிவுபடுத்தப்படாமலும் செலவுகளுக்கு உச்ச வரம்பு இல்லாமலும் இருக்கின்ற சூழ்நிலையில் எந்தத் தரப்புக்கள் ஆதாயம் பெறப் போகின்றன என்றும் அவர்கள் வினவினர்.

என்சிஒ எனப்படும் ” கட்டமைப்பு மைய நடவடிக்கைகள்” என்ற அந்தத் திட்டம் இரண்டு அல்லது மூன்று மலேசியத் திட்டங்களின் கீழ்- 10 முதல் 15 ஆண்டுகள் வரை- 2 பில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட செலவைக் கொண்டது என மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்த திட்டம் தொலையுணர்வு கருவிகளையும் ஆயுதங்களைப் பயன்படுத்தும் முறையையும் ஒருங்கிணைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது எனக் கருதப்படுகிறது.

ஆயுதப்படைகளின் உண்மையான தேவைகளைக் கருத்தில் கொள்ளாமல் தற்காப்பு அமைச்சு அரசியல் நோக்கத்துடன் அந்த திட்டத்தை முன்மொழிந்துள்ளதாக அந்த அமைச்சுக்கு முன்பு நடத்திய நிருபர்கள் சந்திப்பில் நுருல் இஸ்ஸா கூறினார்.

“அந்தத் திட்டம் ஏன் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு தெளிவான விளக்கம் இல்லை”, என அந்த லெம்பா பந்தாய் எம்பி குறிப்பிட்டார்.

அந்தத் திட்டம் இராணுவத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தியான் சுவா கூறிக் கொண்டார்.

“அந்தத் திட்டத்தை தொடரும் முடிவு குறித்து இராணுவ அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  ஏனெனில் நமது தற்காப்பு முறைக்கு தேவைப்படும் விஷயங்களை அவர்கள்தான் புரிந்து கொள்ள முடியும்.”

“இராணுவத் தலைமைத்துவத்தின் கருத்துக்களை அரசியல்வாதிகள் அலட்சியம் செய்வதாகத் தோன்றுகிறது.”

நாட்டின் பாதுகாப்புத் தேவைகளைக் காட்டிலும் மற்ற வெவ்வேறான தேவைகள் அடிப்படையில் அந்தத் திட்டத்தை அவர்கள் வழங்கப் போகின்றனர்”, என பத்து எம்பி-யுமான அவர் சொன்னார்.

“அந்தத் திட்டத்தின் விவரங்கள் எங்களுக்கு எப்படிக் கிடைத்தன என்றும் நீங்கள் வினவலாம். இது (இராணுவத்துக்குள் உள்ள உள் வட்டாரம்)”, என நுருல் இஸ்ஸா சொன்னார்.