பெர்சே பேரணி மீது யூபிஎம் விதித்த தடையை Pro-Mahasiswa அமைப்பு மீறும்

பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள புதிய திருத்தங்களின் கீழ் கூடுதல் சுதந்திரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்படுள்ள போதிலும் யூபிஎம்  என்ற மலேசியா புத்ரா பல்கலைக்கழகம் சனிக்கிழமை நிகழும் பெர்சே 3.0 பேரணியில் தனது மாணவர்கள் பங்கு கொள்வதற்குத் தடை விதித்துள்ளது.

அந்தப் பல்கலைக்கழகத் தங்கும் விடுதிகளுக்கான இணையத் தளத்தின் மூலம் மாணவர்கள் விவகாரப் பிரிவு தடை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக Pro-Mahasiswa கூறியது.

அந்த ஏப்ரல் 28ம் தேதி குந்தியிருப்பு போராட்டம் (428) சட்ட விரோதக் கூட்டம் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்ரா பல்கலைக்கழகம் தான் வெளியிட்டுள்ள தடை உத்தரவுக்கு பொதுப் பேரணிகளில் மாணவர்கள் கலந்து கொள்வதை தடுக்கும் பல்கலைக்கழக விதிகளையும் பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தையும் மேற்கோள் காட்டியது.

அந்த அறிவிப்பு குறித்து உறுதி செய்வதற்கு மலேசியாகினி புத்ரா பல்கலைக்கழக மாணவர் விவகாரப் பிரிவுக்குப் பொறுப்பான உதவித் துணை வேந்தர் நோர் அஸ்லான் முகமட்-டுடன் தொடர்பு கொண்டது. ஆனால் அவர் அந்த விவகாரம் மீது எந்தக் கருத்தும் தெரிவிக்க மறுத்து விட்டார்.

பொதுக் கூட்டங்களில் மாணவர்கள் கலந்து கொள்வதற்கு அரசமைப்பிலும் புதிய பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத் திருத்தங்களிலும் கூறப்பட்டுள்ள உரிமைகளை அந்த அறிவிப்பு மீறுவதாக  Pro-Mahasiswa குற்றம் சாட்டியது.

“அரசியலில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுவதை பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத் திருத்தங்கள் அனுமதிப்பதாக அண்மையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார். ஆனால் மாணவர்களை ஒடுக்குவதற்கு புத்ரா பல்கலைக்கழகம் அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தியுள்ளது.”

“ஏன் இந்த முரண்பாடு ?” என அந்த அமைப்பைச் சேர்ந்த லீ சூ வெய் வினவினார்.

எல்லா மாணவர்களும் அந்தத் தடையை புறக்கணித்து தங்கள் உரிமைகளை நிலை நிறுத்தும் பொருட்டு ஜனநாயகத்துக்குக் கோரிக்கை விடுக்கும் பொருட்டு மெர்தேக்கா சதுக்கத்தில் ஒன்று கூட வேண்டும் என்றும் லீ கேட்டுக் கொண்டார்.

“அந்த 428 குந்தியிருப்புப் போராட்டத்தின் நோக்கம் தேர்தல் முறையில் காணப்படும் மோசடிகளை எடுத்துக் காட்டி அவற்றை சரி செய்வதாகும். அதன் வழி மலேசியாவில் ஜனநாயகம் வலுப்படுத்தப்படும்.”

“ஆகவே பெர்சே பேரணியில் மாணவர்கள் பங்கேற்புக்கு ஊக்கமூட்டப்பட வேண்டும். ஒடுக்கப்படக் கூடாது,” என்றார் அவர்.

TAGS: