அடையாளப்பத்திரம், குடியுரிமை பிரச்னைகளத் தீர்க்க பாடுபடுங்கள், எண்ணிக்கை முக்கியமல்ல

இந்தியர்கள் எதிர்நோக்கும் அடையாளப் பத்திரம் மற்றும் குடியுரிமை பற்றிய பிரச்னைகள் மிகக் கடுமையானது. இப்பத்திரங்கள் மறுக்கப்படும் ஒவ்வொரு இந்தியரும் அவர் தம் குடும்பத்தினரும், இந்நாட்டில் கடுமையான கல்வி, பொருளாதார, சமூகப் பிரச்சனைகளை எதிர் நோக்குகின்ற வேளையில், குடியுரிமை கிடைக்கப்பெற்ற ஒரு சிலரைப் பத்திரிக்கைகளில் படம் பிடித்துக் காட்டி,  பிரச்சனைகளைத்  திசை திருப்ப முனையக்கூடாது.

அரசாங்கப் பதவியில் அமர்ந்துகொண்டு மற்றவர்களிடம் எண்ணிக்கைகளைக் காட்டுங்கள் என்பதை விட, அமைச்சர் மாண்புமிகு டத்தோஸ்ரீ டாக்டர்  சுப்பரமணியம் அரசாங்கத்திடமிருந்து சரியான விவரங்களைச் சேகரிக்க வேண்டும். சமீபத்தில்  அவர் கொடுத்த கணக்கின் படி 14385 மணுபாரங்களே விநியோகிக்கப் பட்டதாகவும் அதிலுங்கூட 5593 விண்ணப்பங்களோ அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக  அறிவித்துள்ளார்.

ஆக, அமைச்சர் கொடுத்துள்ள புள்ளி விவரங்கள் பிரச்னையுள்ள இந்தியர்களின் எண்ணிக்கையைச் சரியாக பிரதிநிதிக்கவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அயல் நாட்டு பிரஜைகளை வாழ்க்கை துணைவிகளாக ஏற்றுக்கொண்ட  இந்நாட்டு பிரஜைகளின் எண்ணிக்கையே அமைச்சர் கொடுத்துள்ளப் புள்ளி விவரங்களுக்கு மேற்பட்டதாக உள்ளது.  அதேபோன்று பதிவுப் பெறாத திருமணங்களின் எண்ணிக்கை மற்றும் பதிவுப் பெறாத திருமணங்களால் பிறந்த குழந்தைகள், மற்றும் காலத்துடன் பிறப்பு பத்திரத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள்  என்று பற்பல காரணங்களால் பாதிக்கப் பட்டுள்ள பல பிரிவினர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டால்  அமைச்சர் கூறி வரும் எண்ணிக்கை மிக-மிக சிறியதாக இருக்கிறது.    

இவ்வாண்டு ஆரம்பத்தில் உள்துறை அமைச்சர்  டத்தோ ஸ்ரீ ஹிஷாமுடின் கூறியதாக தமிழ்நேசன்  வெளியிட்டுள்ளச் செய்தியை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்  சுப்ரமணியம் கவனிக்க வில்லையா? 62,604 குடியுரிமை, 138,719 கால தாமதமான பிறப்பு பத்திர, 18162 குடிநுழைவு விண்ணப்பங்கள் அடங்கிய மொத்தம் 219,485 முக்கிய ஆவணங்களுக்குத் தீர்வு கண்டுள்ளதாகவும், ‘’ஆனால்  அனைத்தும் அங்கீகரிக்கப்பட்டதாக பொருள்படாது’’ என்றுள்ளார்.

ஆக அமைச்சர், 3 இலட்சத்தைக் காட்ட வேண்டும், இரண்டு இலட்சத்தைக் கொடுக்க வேண்டும் என்று  எதிர்கட்சிகளிடம் மார் தட்டவேண்டாம். முதலில் உள்துறை அமைச்சர் கூறியுள்ள கணக்கின் அடிப்படையில் 219,485 பேர்களில், மலேசிய இந்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு, அதில் எத்தனை பேர்களின் விண்ணப்பங்கள் தோல்வி கண்டுள்ளது, இதற்கு என்ன தீர்வு என்பதனை விளக்க வேண்டும்.

முடி திருத்தியவருக்கு குடியுரிமை பத்திரம் வழங்க ஒரு பிரதமர், மூன்று அமைச்சர்கள்!

நாடாளுமன்றத்தின் முன் கூடித்  தங்களின் அடையாள கார்டு, குடியுரிமை மற்றும்  பிறப்பு பத்திரப் பதிவு குறித்துக் கேள்வி எழுப்பியவர்கள் யாரும் கம்போடிய, பர்மா, பங்களா தேசத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் பிரச்னைகள் உள்ள மலேசிய இந்தியர்கள் என்பதை அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும்.

மூன்று முன்னால் பிரதமர்களுக்கு முடி திருத்திய 82 வயது சேது சுப்பையாவிற்கு பிரதமர்  நஜிப்பும், உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹிஷாமுடினும்  குடியுரிமை வழங்கும் போது, அவர்களுடன் நின்று படம் எடுத்துக் கொள்வதில் (தமிழ் நேசன் முதல் பக்கப் படம்) ம இகாவின் இரு அமைச்சர்களான சுப்பரமணியத்திற்கும் பழனிவேலுவுக்கும் ஆனந்தமாய் இருக்குமென்றால், நாடாளுமன்றத்தில் ஆர்பாட்டத்தில் இறங்கிய அந்தத் தாய்மார்களும் அதே ஆனந்ததை ஏன் அனுபவிக்கக் கூடாது?

சகல  தகுதிகளும் இருந்தும் அவர்களின் விண்ணப்பங்கள் ஆண்டு கணக்கில் இழுத்தடிக்கப்பட்டதால் அல்லது நிராகரிக்கப்பட்டதால் அவர்களின் கோரிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் வைத்துள்ளனர். குடியுரிமையோ, இதர பத்திரமோ கிடைத்த ஒரு சேதுவையோ அல்லது ஒரு மாதுவையோ பத்திரிக்கையில் படம் பிடித்துக் காட்டி, இந்தியச் சமூகத்தின் இக்கட்டுகள் அனைத்தும் தீர்த்து விட்டதைப் போன்ற  60 ஆம், 70 ஆம் ஆண்டு அரசியல் பாவனைகளை எல்லாம் மீண்டும் காட்டி இந்தியர்களை இனியும் ஏமாற்றலாம் என்று பாரிசான் எண்ணக் கூடாது.

மிக எளிதில், தீர்வுக்காணக்கூடிய சிறு பிரச்சனைகளைக் காரணம் காட்டிக் குடியுரிமை மட்டுமன்றி மற்ற அடையாளப் பத்திரங்களை மறுக்கும் பாணியைக் கடந்த 54 ஆண்டுகளாக பாரிசான் அரசாங்கமே முன் நின்று நடத்தியுள்ளது என்பதற்குத் திரு. சேதுவின் விவகாரமே சிறந்த சான்றாகும். திரு. சேது, மூன்று பிரதமர்களுக்குச் சேவை புரிந்துள்ளார், ஆனால் அவரின் அடிப்படை கோரிக்கையை மேடை போட்டுச் சொல்ல வேண்டியதில்லை. பிரதமர்களின் காதில் ஓதியிருந்தாலே போதுமானது. திரு. சேதுக்கும்  மற்ற முதியவர்களுக்கும் இன்று இந்நாட்டின் பிரஜையாக தகுதி இருக்கிறதென்றால், கடந்த 54 ஆண்டுகளாக எப்படி இல்லாமல் போனது? இத்தனை ஆண்டுகால பாரிசான் ஆட்சியில் இந்திய சமூகம் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டுள்ளது என்பதற்கு இதைவிடச் சிறந்த சான்று என்ன வேண்டும்?

நீங்கள் தயாரா?

முறையான பத்திரங்கள் இல்லாதோருக்கு உதவவும், ஆலோசனைகள் வழங்கவும், மாநில அரசாங்க உதவியுடன்  கடந்த 2010 ம் ஆண்டு முதல்  கிள்ளானில் செயல் படும் ‘’மைசெல்’’  நிறுவனத்தின் உதவியுடன்  பத்திரங்களுக்கு மனு செய்த சுமார் 400 பேர்களில் வெறும் 48 பேர்களின் விண்ணப்பம்தான்  வெற்றி பெற்றுள்ளது. இந்நாட்டு இந்தியர்களை பதிவுச்செய்ய  தேசிய பதிவுத்துறை காட்டிவரும் கெடுபிடிகளுக்கு இதுவே சான்றாகும்.

இருப்பினும் அமைச்சர் முன்வந்து ஆதாரங்களைக் கேட்பதால், 3 இலட்சம் வேண்டியதில்லை கிள்ளான் மைசெல்லில் பதிந்துகொண்டவர்களின் பட்டியலை சமர்பிக்க நாங்கள் தயார். அவர்களுக்கு அடையாள பத்திரம் பெற்றுத்தர நீங்கள் தயாரா என்பதே கேள்வி.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொள்ள, குடியுரிமை மற்றும் இதர பத்திரங்கள் எடுக்கும் விவகாரத்தில் சிரமங்களை  எதிர்க்கொள்ளும் அனைவரையும் கிள்ளான் மைசெல்  அலுவலகத்தில் விரைவில் வந்து பதிந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம். உங்கள் விவரங்கள் தேசிய பதிவு துறைக்கு அமைச்சரின் உதவியுடன் அனுப்பி வைக்கப்படும்.

———————————————————————————————————————————————–

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்  டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மேற்கண்ட செய்தி அறிக்கையை இன்று விடுத்துள்ளார்.

TAGS: