பெர்சேயின் தூய்மையான, சுதந்திரமான, நியாயமான மற்றும் சுயேட்சையான தேர்தல் மற்றும் அமைதியாகக் கூடுவதற்கான அடிப்படை உரிமை ஆகிய கோரிக்கைகளை ஆதரித்து டிஎபியின் பொதுச் செயலாளர் லிம் குவான் எங் அறிவித்துள்ள கட்சியின் நிலைப்பாட்டை தாம் முழுமையாக ஏற்றுக்கொண்டு ஆதரிப்பதாக (“I fully subscribe and endorse) டிஎபி செனட்டர் துங்கு அப்துல் அஸிஸ் இன்று பின்னேரத்தில் விடுத்த ஒரு செய்தியில் கூறியுள்ளார்.
இன்று காலையில் அவர் வெளியிட்ட செய்தி அறிக்கையில் அவர் பெர்சேயின் குந்தியிருப்பு போராட்டத்தை கடுமையாகச் சாடியிருந்தார்.
தாம் தெருப் போராட்டங்களை எதிர்ப்பதாகவும் பெர்சேயின் குந்தியிருப்பு போராட்டத்திற்கு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பது பொறுப்பற்ற செயல் என்றும் டிஎபியின் உதவித் தலைவருமான அவர் கூறினார்.
பெர்சே எடுத்துள்ள நடவடிக்கை குறித்து தாம் இன்று காலையில் தெரிவித்தது தமது தனிப்பட்ட கருத்து. ஜனநாயக அமைப்பான டிஎபியில் அதற்கு இடமுண்டு என்று விளக்கமளித்துள்ள துங்கு அப்துல் அஸிஸ், தமது அறிக்கை குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் லிம் குவான் எங் மற்றும் டிஎபி நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சியாங் ஆகியோருடன் பேசியதாக கூறினார்.
“நான் எனது தனிப்பட்ட கருத்தைக் கொண்டிருந்தாலும்…நான் இயல்பாக கட்சியின் தூய்மையான, நியாயமான, சுதந்திரமான தேர்தல் நிலைப்பாட்டை ஆதரிக்கிறேன்”, என்றாரவர்.