டிபிகேஎல், டத்தாரானை 48 மணி நேரத்துக்கு மூடுகிறது

டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் நாளை காலை 6.00 மணி தொடக்கம் 48 மணி நேரத்துக்கு டத்தாரான் மெர்தேக்காவை மூடுகிறது.

1992ம் ஆண்டுக்கான ஊராட்சி மன்ற (டத்தாரான் மெர்தேக்கா) (கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம்)துணைச் சட்டங்கள், 1976ம் ஆண்டுக்கான ஊராட்சி மன்றச் சட்டத்தின் 65வது பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில் அந்தக் கட்டுப்பாடு அமலாக்கப்படும் என இன்றிரவு கோலாலம்பூர் மேயர் அகமட் புவாட் இஸ்மாயில் விடுத்த அறிக்கை கூறியது.

ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு அந்தக் கட்டுப்பாடு அகற்றப்படும் என்றும் அகமட் புவாட் சுருக்கமான ஒரு பத்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அகமட் புவாட்டுக்கும் பெர்சே 2.0 நடவடிக்கைக் குழுவுக்கும் இடையில் நிகழ்ந்த பேச்சுக்கள் முறிவடைந்த 24 மணி நேரத்தில் டிபிகேஎல் அந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது.

பாதுகாப்பு, பொது ஒழுங்குக் காரணங்களுக்காக பெர்சே தனது பெர்சே 3.0 பேரணியை டத்தாரான் மெர்தேக்காவிலிருந்து தொலைவில் நடத்த வேண்டும் என நேற்று அகமட் புவாட் கேட்டுக் கொண்டார்.

ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் தனது ஆதரவாளர்களுக்கு மாற்று இடம் பற்றிய தகவல் போய் சேராது என்பதால் டத்தாரான் மெர்தேக்காவில் பேரணியை நடத்துவதில் பெர்சே பிடிவாதமாக உள்ளது.

TAGS: