கோலாலம்பூர் மேயர்: பெர்சே 3.0 “இப்போது பாதுகாப்பு விவகாரம் ஆகும்”

டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் இப்போது பொறுப்புக்களை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க டத்தாரான் மெர்தேக்காவில் தனது பேரணியை நடத்துவது என்று பெர்சே  வலியுறுத்துவதால் அது இப்போது “பாதுகாப்பு விவகாரமாகி விட்டது” என அது கூறியுள்ளது.

சட்டத்தை நிலை நிறுத்துவதற்கு டிபிகேஎல்-லுக்கு உதவி  செய்ய போலீஸ் தலையிட வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும் என கோலாலம்பூர் மேயர் புவாட் இஸ்மாயில் இன்று கூறினார்.

பெர்சே விரும்புவதற்கும் சட்டம் அனுமதிக்காத விஷயத்துக்கும் இடையிலான பகைமையும் ஒன்று கூட விரும்புகின்றவர்களுக்கும் அதனை எதிர்ப்பவர்களுக்கும் இடையிலான பகைமையும் உருவாகி உள்ளதாக தோன்றுகிறது.”

“இப்போது பாதுகாப்பு அம்சமும் அதில் காணப்படுகிறது,” என கமட் புவாட் கோலாலம்பூரில் உள்ள டிபிகேஎல் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

அதனைக் கருத்தில் கொண்டு தாம் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் முகமட் சாலே-யை இன்று பின்னேரத்தில் சந்திக்கப் போவதாகவும் அவர் சொன்னார்.

‘டிபிகேஎல் போலீஸுக்குச் சொல்கிறது: என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்’ “பாதுகாப்பு பிரச்னை உருவாகும் போது அது போலீஸ் அதிகாரத்துக்குள் வருகிறது. போலீஸ் டிபிகேஎல்-லுக்கு உதவ வேண்டும்,” என்றார் அவர்.

“போலீஸ் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. போலீஸ், எங்களுக்கு உதவி செய்ய எல்லா நேரத்திலும் தயாராக இருப்பதாக நான் நம்புகிறேன்.”

கடந்த ஆண்டு ஜுலை 9ம் தேதி நிகழ்ந்த  முன்னைய பெர்சே பேரணியுடன் ஒப்பிடுகையில் இப்போது போலீஸ் தள்ளியிருக்கும் போக்கைப் பின்பற்றுகிறது.

டிபிகேஎல்-லின் மனித ஆற்றல் வரம்புக்கு உட்பட்டது என்பதை ஒப்புக் கொண்ட அகமட் புவாட், என்ன செய்ய வேண்டும் என்பது போலீசாருக்குத் தெரியும் என்றார்.

“போலீஸ் எங்களுக்கு பெரிய அளவில் மனித ஆற்றலை வழங்கினால் டிபிகேஎல் அதிகாரிகள் கூட எங்களுக்குத் தேவை இல்லை. நாங்களே நிலைமையைக் கையாள வேண்டும் எனக் கூறினால் அன்றைய தினம் எவ்வளவு பேர் கூடுகின்றனர் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்,” என்றும் அவர் சொன்னார்.

ஏப்ரல் 25ம் தேதி பெர்சே தலைவர்களைத் தாம் சந்தித்த போது டத்தாரான் மெர்தேக்கா கொடுக்கப்படா விட்டால் தாங்கள் சாலைகளில் அமரப் போவதாக அவர்கள் தெளிவாகக் கூறினர்,” என்றார் அகமட் புவாட்.

‘சாலைகளில் குந்தியிருப்பது அமைதியான போராட்டம் அல்ல.’

“அவர்கள் சாலைகளில் குந்தியிருப்புப் போராட்டத்தை நடத்தினால் அது அமைதியான கூட்டம் அல்ல. துரதிர்ஷ்டவசமான எந்தச் சம்பவமும் நிகழாது என அவர்கள் எப்படி உறுதி கூற முடியும் ?’

மாற்று இடமாக அவர்களுக்கு டத்தாரான் மெர்தேக்காவை வழங்க முன் வந்தோம். ஆனால் பங்கேற்பாளர்களுக்கு தகவல் கொடுக்கப் போதுமான நேரம் இல்லை என்ற காரணத்தினால் அதனை அவர்கள் நிராகரித்து விட்டதையும் அகமட் புவாட் குறை கூறினார்.

“அவர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கு தெரிவிக்க முடியாத நிலையில் இருக்கும் போது கோலாலம்பூருக்கு நாளை வரப் போவதாக அவர்கள் கூறிக் கொள்ளும் பெரிய கூட்டத்தை எப்படிக் கட்டுப்படுத்தப் போகிறார்கள் ?” என அவர் வினவினார்.

நாளை பெர்சே ஆதரவாளர்களுடன் கைகலப்பு நிகழுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அகமட் புவாட், அந்தப் பேரணி நன்மையைக் காட்டிலும் தீமையையே அதிகம் கொண்டு வரும் என டிஏபி உதவித் தலைவர் துங்கு அப்துல் அஜிஸ் துங்கு இப்ராஹிம் தெரிவித்துள்ள கருத்து சூழ்நிலையை நன்கு விளக்குவதாக சொன்னார்.

“நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. ஆனால் துங்கு அப்துல் அஜிஸ் சொல்வதிலிருந்து அந்த சூழ்நிலை ஏற்படக்கூடும்,”என்றார் அவர்.

துங்கு அப்துல் அஜிஸ் கட்சியின் மற்ற உறுப்பினர்களுடைய கருத்துக்களிலிருந்து மாறுபட்டு பெர்சே ஆர்ப்பாட்டம் குழப்பத்தை ஏற்படுத்தும் என நேற்று கூறியிருந்தார்.

இப்போதைக்கு எந்தச் சாலையையும் மூடும் எண்ணம் இல்லை என்றும் அதனை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஜாலான் ராஜா, ஜாலான் துன் பேராக், ஜாலான் ஹிஷாமுடின், ஜாலான் லெபோ பாசார் ஆகியவை பாதிக்கப்படலம் என்றும் அகமட் புவாட் தெரிவித்தார்.