கோலாலம்பூர் போலீஸ்: பெர்சே ஒன்று கூடலாம் ஆனால் ஊர்வலமாகச் செல்லக் கூடாது

பெர்சே 3.0ன் ஆதரவாளர்கள் சந்திக்கும் இடங்களில் ( meeting points )ஒன்று கூட அனுமதிக்கப்படுவர். ஆனால் அவர்கள் அண்மையில் அமலாக்கப்பட்ட அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் டத்தாரான் மெர்தேக்காவுக்கு ஊர்வலமாகச் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது என கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே கூறினார்.

நாளைய குந்தியிருப்பு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக நகரும் எந்த குழுக்களும் போலீஸ் நடவடிக்கையை எதிர்நோக்க வேண்டியிருப்பதுடன் கைது செய்யப்படக் கூடிய சாத்தியமும் உள்ளதாக அவர் சொன்னார்.

நாளை டத்தாரான் மெர்தேக்காவில் குந்தியிருப்பு போராட்டத்தை தூய்மையான நியாயமான தேர்தல்களுக்குப் போராடும் கூட்டமைப்பான பெர்சே நடத்துவதற்குத் தடை விதிக்கும் நீதிமன்ற ஆணையை நேற்று போலீசார் பெற்றனர்.

சந்திக்கும் இடங்களிலிருந்து டத்தாரானை எல்லையாகக் கொண்ட சாலைகளுக்கு மிக அருகில் எந்த இடத்துக்கும் ஊர்வலமாகச் செல்வதற்கு பெர்சே ஆதரவாளர்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது என்றும் முகமட் சொன்னார்.