நாளை (28.04.2012) திட்டமிடப்பட்டுள்ள குந்தியிருப்புப் போராட்டத்தை நடத்தும் திட்டத்தைத் தொடரப் போவதாக தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பான பெர்சே இன்று சூளுரைத்துள்ளது.
ஆனால் வரலாற்றுச் சிரப்பு மிக்க டத்தாரான் மெர்தேக்காவில் கூடுவதற்கு தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நீதிமன்றத் தடையை பின்பற்றப் போவதாக அது வாக்குறுதி கொடுத்தது.
“நாங்கள் அந்த ஆணையை மீற மாட்டோம். நாங்கள் அந்த ஆணையில் (பொது மக்களும் அந்தக் குழுவினரும் தடை விதிக்கும்) கூறப்படாத சந்திப்பு இடங்களில் ஒன்று கூடுவோம். கூடிய வரை டத்தாரான் மெர்தேக்காவுக்கும் மிக அணுக்கமாகச் செல்வதற்கு நாங்கள் முயலுவோம்.”
டத்தாரான் மெர்தேக்காவை பயன்படுத்துவதற்கு கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் நல்லெண்ணத்துடன் எங்களை அனுமதிக்கும் என்ற நம்பிக்கையுடனும் நீதிமன்ற ஆணையை அமலாக்காது என்ற நம்பிக்கையுடனும் நாங்கள் அவ்வாறு கருதுகிறோம்,” என பெர்சே அமைப்பின் கூட்டுத் தலைவர் எஸ் அம்பிகா இன்று கோலாலம்பூரில் நிருபர்களிடம் கூறினார்.
டத்தாரான் மெர்தேக்காவில் அவரும் அமைப்பும் பொது மக்களும் கூடுவதற்கு தடை விதிக்கும் உத்தரவு இன்று பிற்பகல் மணி 12.08 வாக்கில் அம்பிகாவிடம் நீதிமன்ற ஆணை சேர்பிக்கப்பட்டது.
கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்ற மாஜிஸ்திரே ஸாக்கி அஸ்ராப் ஜுபிர் அந்த ஆணையை வெளியிட்டார். அந்த ஆணைக்கான விண்ணப்பத்தை டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையதிகாரி சமர்பித்தார்.